கலாசாரத்துறை அமைச்சகம்
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த 'வீர்'களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் “என் மண் என் தேசம்” இயக்கம்
Posted On:
03 AUG 2023 7:50PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் தனது மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் வானொலி உரையின்போது 'மேரி மாத்தி மேரா தேஷ்' எனப்படும் என் மண் என் தேசம் இயக்கத்தை அறிவித்தார். இந்த இயக்கம் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சலான சுதந்திர போராட்ட வீரர்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் நாடு முழுவதும் பல்வேறு செயல்பாடுகள் நடைபெறும். நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவு பலகைகள் கிராம பஞ்சாயத்துகளில் நிறுவப்படும்.
தகவல் ஒலிபரப்புத் துறையின் செயலாளர் திரு அபூர்வா சந்திரா செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலைத் தெரிவித்தார். கலாச்சாரத்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் மற்றும் இளைஞர் நலத்துறை செயலாளர் திருமதி மீட்டா ராஜீவ்லோச்சன் ஆகியோரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி திரு கௌரவ் திவிவேதியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திரு அபூர்வா சந்திரா, சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக இந்த என் மண் என் தேசம் இயக்கம் இருக்கும் என்று கூறினார். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நாடு தழுவிய இயக்கமான இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று அவர் தெரிவித்தார். இந்த ஆண்டும் இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம் நடைபெறும் என்று அவர் கூறினார். இந்த இயக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், ஊடகங்களின் பங்கு குறித்தும் தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் எடுத்துரைத்தார்.
கலாச்சாரத் துறைச் செயலாளர் திரு கோவிந்த் மோகன் பேசுகையில், நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் மண்ணை 7500 கலசங்களில் கொண்டு செல்லும் 'அம்ரித் கலச யாத்திரை' நடத்தப்படுவதைக் குறிப்பிட்டார். இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உறுதிப்பாட்டைக் குறிக்கும் என்றும் அவர் மேலும் விளக்கினார்.
இவற்றில் மக்கள் பங்கேற்பை (ஜன் பகிதாரி) ஊக்குவிக்கும் வகையில், https://merimaatimeradesh.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் மக்கள் மண்ணுடன் கூடிய செல்ஃபிக்களை பதிவேற்றலாம் என்றும் கலாச்சாரத்துறைச் செயலாளர் கூறினார்.
நாடு தழுவிய இயக்கம் தொடர்பான விவரங்களை https://yuva.gov.in/meri_maati_mera_desh என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி மீட்டா ராஜீவ்லோச்சன் தெரிவித்தார்.
என் மண் என் தேசம் இயக்கம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நிறைவு விழா 30 ஆகஸ்ட் 2023 அன்று புதுதில்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
****
SM/PLM/KRS
(Release ID: 1945634)
Visitor Counter : 174
Read this release in:
Kannada
,
Bengali
,
Urdu
,
English
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam