பிரதமர் அலுவலகம்

ஜூலை 1-ந் தேதி நடைபெறும் 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் உரையாற்றுகிறார்

கருப்பொருள்: ‘அமிர்தப்பெருவிழா’: ஒத்துழைப்பின் மூலம் துடிப்பான இந்தியாவின் செழுமை

Posted On: 30 JUN 2023 3:09PM by PIB Chennai

சர்வதேச கூட்டுறவு தினக்கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ஜூலை 1-ந் தேதி, புதுதில்லியில் உள்ள  பிரகதி மைதானத்தில் நடைபெறும் 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

“ஒத்துழைப்பின் மூலம் செழுமை” என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு இயக்கங்களை பலப்படுத்தும் நோக்கில் கூட்டுறவுக்கென தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.  இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

 17-வது இந்திய கூட்டுறவு மாநாடு 2023 ஜூலை 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் கூட்டுறவு இயக்கங்களின் மேம்பாடு, கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை முறியடிப்பதற்கான சாத்தியக்கூறுகள், இந்திய  கூட்டுறவு இயக்கங்களின் வளர்ச்சியை முன்னிறுத்திய எதிர்கால  கொள்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இது அமிர்தப்பெருவிழா காலத்தில் ஒத்துழைப்பின் மூலம் துடிப்பான இந்தியாவின் செழுமை என்ற கருப்பொருளின் அடிப்படையில் பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளன. தொடக்க கூட்டுறவு சங்கம் முதல் தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த 3600-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள், சர்வதேச கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச கூட்டுறவு சார்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு அமைச்சகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

***

 (Release ID: 1936374)

AP/ES/AG/KRS



(Release ID: 1936387) Visitor Counter : 202