ஜல்சக்தி அமைச்சகம்

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார சேமிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது : உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தகவல்

Posted On: 09 JUN 2023 3:39PM by PIB Chennai

இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் நீர் வழங்கும் (ஹர் கர் ஜல்) திட்டத்தின் மூலம் ஆக்கப்பூர்வமான மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் கூறியுள்ளார். இத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை புதுதில்லியில் இன்று (09.06.2023) அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய  டாக்டர் வி கே பால், பாதுகாப்பான குடிநீர் மூலம் நோய்கள் தடுக்கப்பட்டு உயிர்கள் காக்கப்படுவதாகவும், மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதன் மூலம் 4,00,000 இறப்புகளையும், வயிற்குப் போக்கு போன்றவற்றால் ஏற்படக் கூடிய 1,40,00,000 நோய் பாதிப்புகளையும் தடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 101 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதார சேமிப்பு ஏற்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் பல், மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கத்தால் சுகாதாரத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பலன்கள் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறைச் செயலாளர் திருமதி  வினி மகாஜன், ஜல் ஜீவன் இயக்கத்தின் முன்னேற்றங்களை விரிவாக எடுத்துரைத்தார். கிராமப்புறங்களில் தற்போது 62.84 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்புக்காக இந்திய பிரதிநிதி டாக்டர் ரோட்ரிக்கோ ஹெச். ஆஃப்ரின் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்
குறிப்பைக் காணவும்   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930995

** 

AP/PLM/KPG/GK



(Release ID: 1931094) Visitor Counter : 167