பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஒடிசாவுக்குச் சென்ற பிரதமர், ரயில் விபத்துக்குப் பிந்தைய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்


அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் அரசு துணை நிற்கிறது: பிரதமர்

காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர்

இந்த பெரும் சோகத்தைத் தணிக்க அரசு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தல்

விரைவான விசாரணை மேற்கொண்டு தவறு இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதமர் அறிவுறுத்தல்

நிவாரணம் மற்றும் மீட்புடன், தண்டவாளங்களை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்வதில் ரயில்வே மும்முரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறுகிறார்

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொண்டதற்காக ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்களை பிரதமர் பாராட்டினார்

Posted On: 03 JUN 2023 6:49PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒடிசாவுக்குச் சென்று பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் , காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினார்.

ரயில்களில் பயணம் செய்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாபெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார். துரதிர்ஷ்டவசமான உயிர் இழப்புகள் குறித்துப் பேசுகையில், காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது என்றார் அவர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரைவான விசாரணையை உறுதி செய்யவும், தவறு இழைத்ததாக  கண்டறியப்பட்டவர்கள் மீது உடனடியாக  கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவு முழுவதும் தொடர்ந்து மீட்பு பணிகளில் உதவுவதற்காக உழைத்ததை அவர் பாராட்டினார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ரத்ததானம் செய்ய வந்த ஏராளமான உள்ளூர் மக்களையும் அவர் பாராட்டினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடரவும், ரயில் பாதைகளை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்யவும் ரயில்வே செயல்பட்டு வருகிறது என்றார் அவர். உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படைகளின் பணியாளர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் உரையாடிய பிரதமர், சோகத்தைத் தணிக்க அரசு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

***

LG/PKV/SG/DL(Release ID: 1929671) Visitor Counter : 118