பிரதமர் அலுவலகம்

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் 3-வது பதிப்பை பிரதமர் தொடங்கி வைப்பு

Posted On: 25 MAY 2023 8:17PM by PIB Chennai

கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள் 2023ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். 21 விளையாட்டுப் பிரிவுகளில், 200க்கும் மேற்பட்ட  பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4750 தடகள வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், விடுதலையின் அமிர்த பெருவிழாவை நாடு கொண்டாடி வரும் வேளையில் குழு உணர்வுடன் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை புகுத்துவதற்கான சிறந்த ஊடகமாக கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.

 

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் விளையாட்டுகளின் புதிய யுகம் தொடங்கப்பட்டிருப்பதாகவும், இதனால் விளையாட்டு துறையில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவாகி இருப்பதோடு விளையாட்டு என்ற ஊடகத்தின் வாயிலாக வளர்ந்த சமூகத்தின் யுகமும் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார். “இன்று, விளையாட்டு அனைவரையும் கவரும் தொழிலாக விளங்குவதோடு கேலோ இந்தியா திட்டம் இதில் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது”, என்றார் அவர்.

முந்தைய ஆட்சிகள் விளையாட்டுத் துறையின் மீது காட்டிய அக்கறைக்கு இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் போது நடைபெற்ற ஊழல் சம்பவங்களை பிரதமர் உதாரணமாக சுட்டிக் காட்டினார். நகர்ப்புற விளையாட்டு உள்கட்டமைப்பிற்கு, முந்தைய அரசுகள் 6 ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் செலவிட்டதாகவும், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு உள்கட்டமைப்பிற்காக 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை சுமார் 30000 வீரர்கள் கலந்து கொண்டிருப்பதோடு, அவர்களுள் 1500 பேருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டிருப்பது தமக்கு திருப்தி அளிப்பதாக பிரதமர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட விளையாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதி மூன்று மடங்கு அதிகரித்திருப்பதால், ஊரக மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் மேம்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு கிடைக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

ஏராளமான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள முடிவதாகக் கூறிய பிரதமர், கேலோ இந்தியா போட்டிகள் மற்றும் அதன் விரிவாக்கமான கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள் மற்றும் கேலோ இந்தியா குளிர்கால போட்டிகள் ஆகியவற்றை தொடங்குவதற்கு பின்னணியில் இதுவே காரணமாக இருந்தது என்றும் கூறினார். இதனால் விளையாட்டு வீரர்களிடையே நல்ல நம்பிக்கையும், சர்வதேச போட்டிகளில் வெற்றிகளும் கிடைப்பதாக திரு மோடி தெரிவித்தார்.

----

SM/CR/KPG

 



(Release ID: 1927460) Visitor Counter : 154