சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா 76-வது உலக சுகாதார மாநாட்டில் உரையாற்றினார்

Posted On: 24 MAY 2023 11:23AM by PIB Chennai

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் 76-வது  உலக சுகாதார மாநாட்டில் உரையாற்றினார். உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் திரு டெட்ரோஸ் அதானம் மற்றும் பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். அனைவருக்கும் சுகாதாரம் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா,  சுகாதார அவசர நிலைகளுக்கு இந்தியா, தயாராக உள்ளது என்றும், சுகாதார சேவைகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார்.

கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட சவால், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தியிருப்பதாகவும், சவால்களுக்கு எதிராக போராடுவதில் உலகை இணைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலகளாவிய நோய்த் தடுப்பு நடைமுறைகள் உயர்ந்த தரம் மற்றும் குறைந்த செலவிலான மருத்துவ நடைமுறைகளை  அனைத்து நாடுகளுக்கும் வழங்குவதே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நிக் ஷை (Ni-kshay) தளத்தை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், இது புதுமை மற்றும் சுகாதார தொழில்நுட்பத்திற்கு சிறந்த உதாரணம் என்று கூறினார். காசநோயை இந்தியா, தமது  சொந்த நடைமுறைகளின் மூலம் ஒழிக்க உறுதிப்பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் ‘இந்தியாவில் சிகிச்சை, இந்தியா வழங்கும் சிகிச்சை’என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றொரு  அமர்வில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, இந்த தலைப்பு ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்தார். மிகவும் பழைமையான மருத்துவமுறையான ஆயுர்வேதத்தின் தாயகமாக இந்தியா திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கான தேவை உலகெங்கிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

கொவிட் பாதிப்பை தடுக்க இந்தியா, 220 கோடி தடுப்பூசிகளை இதுவரை செலுத்தியிருப்பதாகவும், பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் 2018ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஆயுஷ்மான் பாரத், சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள், இந்தியாவின் ஆரம்ப சுகாதார சேவைகளை  சிறப்பான முறையில் மாற்றியமைத்துள்ளது என்று அவர் கூறினார்.

சுகாதார சவாலகள், தேச எல்லைகளை கடந்தது என்பதை கொவிட் -19 பாதிப்பு உணர்த்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற சிக்கல்களுக்கு உலகாளவிய ஒருங்கிணைப்புத் தேவை என்று அவர் வலியுறுத்தினார். சுகாதாரப் பணியாளர்களின் திறன் கட்டமைப்பை மேம்படுத்துதல், சுகாதாரத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகரித்தல் உள்ளிட்டவற்றுக்கு இந்தியா, முன்னுரிமை அளித்து செயலாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் சுகாதாரம் என்ற தத்துவம் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அனைவரின் வளர்ச்சி, அனைவரின் முயற்சி, அனைவரின் நம்பிக்கை என்ற கொள்கையின் அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதாக திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

******

AP/PLM/RS/KRS



(Release ID: 1926872) Visitor Counter : 444