தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கேன்ஸ் திரைப்படச் சந்தையின் இந்திய அரங்கைத் தொடங்கி வைத்த டாக்டர் எல்முருகன், கதை சொல்லுவதில் இந்தியாவின் பலத்தை உலகம் முழுவதும் திரைப்படங்கள்கொண்டு செல்வதாகக் கூறினார்

Posted On: 17 MAY 2023 5:44PM by PIB Chennai

கேன்ஸ் திரைப்படச் சந்தையின் இந்திய அரங்கை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரஃப், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு பிரித்துல் குமார் மற்றும் இந்திய திரைப்படத் தொழில்துறையின் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

திரைப்பட நட்சத்திரங்கள், அலுவலர்கள் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த பிரதிநிதிகளிடையே உரையாற்றிய டாக்டர் முருகன், 50 மொழிகளில் 3,000 க்கும் அதிகமான திரைப்படங்களுடன் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் தயாரிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது என்றார். கதை சொல்லுவதில் இந்தியாவின் பலத்தை உலகம் முழுவதும் இந்த  திரைப்படங்கள் கொண்டு செல்வதாக அவர் கூறினார். தற்போது புகழ் பெற்றிருக்கும் முதுமலையின் எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் உதாரணத்தை எடுத்துரைத்த அமைச்சர், சிறந்த உள்ளடக்கங்களுக்கு எல்லைகள் இல்லை என்று குறிப்பிட்டார். இந்திய திரைப்படங்களின் உள்ளடக்கம் உள்ளூரிலிருந்து உலக அளவுக்கு செல்லும் சகாப்தத்தை இந்தியா காண்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை 2023-ல் அசாதாரணமாக 11.4% வளர்ச்சியடைந்து ரூ 2.6 ட்ரில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்றுக்கு பின், 2022-ல் இந்தியாவின் திரைப்படத் துறை மூலமான வருவாய் 2021-ஐ விட மூன்று மடங்கு அதிகரித்து 1.3 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது என்றும், 2025 வாக்கில் இது 3 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

படப்பிடிப்பு, இணை தயாரிப்பு, அனிமேஷன், குறைந்த  செலவில் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் உட்பட சர்வதேச திரைப்படத் தொழில்துறையை ஈர்ப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் போது திரைப்படங்களுக்கான ஊக்குவிப்புகள் பற்றி மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் வெளியிட்ட அறிவிப்புகளை நினைவு கூர்ந்த டாக்டர் முருகன்,  இந்த ஆண்டு திரைப்பட விழாவில் இது மேலும் உத்வேகம்  பெறும் என்றார்.

இந்த நிகழ்வில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், கேன்ஸ் திரைப்பட விழா நமது திரைத்துறை சார்ந்த சிறப்புகளை எடுத்துரைக்கும் கருவியாக மட்டுமின்றி இந்தியா – பிரான்ஸ் இடையோன உறவுகளையும் வலுப்படுத்துவதாக உள்ளது என்றார்.

இந்த ஆண்டு முதன் முறையாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த திறன்மிக்க திரைப்படத் தயாரிப்பாளர்களின் அதிகாரப்பூர்வ குழு ஒன்றை கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். திரைப்படத் தயாரிப்பில் பிராந்திய பன்முகத் தன்மையை மேம்படுத்தி அங்கிகரிக்கும் அதே வேளையில் இந்தியாவின் வளமான சினிமா கலாச்சாரத்தின் ஆழத்தையும் பன்முகத் தன்மையையும் கேன்ஸ் விழாவுக்கு  கொண்டு வருவதும் இதன் நோக்கமாகும் என்று அவர் கூறினார். மாறுபட்ட மூன்று பிரிவுகளில், மூன்று திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் இரண்டு திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளை வென்றதையும் திரு தாக்கூர் நினைவுகூர்ந்தார்.

மணிப்புரி மொழித் திரைப்படமான இஷானோ, இந்த ஆண்டு கேன்ஸ் கிளாசிக் பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இந்தத் திரைப்படத்தை அரசு நிதியால் நடத்தப்படுகின்ற இந்தியாவின் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் டிஜிட்டல் மயமாக்கி மீட்டெடுத்திருக்கும் தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார்.    

கேன்ஸ் திரைப்பட விழாவின் திரைப்பட சந்தை இயக்குநர் திரு குலாமே எஸ்மியால் பேசுகையில், வலுவான சந்தையையும் மிகப் பெரிய திரைப்படத் தொழில்துறையையும் கொண்டுள்ள இந்தியா உலகத் திரைப்படத் தொழில் துறைக்கு முக்கியமான நாடாகும் என்றார்.

2023 நவம்பரில் கோவாவில் நடைபெற உள்ள 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான சுவரொட்டிகள் மற்றும் முன்னோட்டத் திரைப்படங்களும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டன.

 

******

AP/SMB/MA/KRS

 

 



(Release ID: 1924967) Visitor Counter : 234