பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஊட்டச்சத்துடன் கூடிய கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி
Posted On:
12 MAY 2023 10:04AM by PIB Chennai
ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்காக புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அளவிலான நிகழ்ச்சியில் ‘ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி' என்ற திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி மே 10-ஆம் தேதி தொடங்கி வைத்தார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு முஞ்சாபரா மகேந்திரபாய், செயலாளர் திரு இந்தேவர் பாண்டே மற்றும் அமைச்சகத்தின் ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பணிக்குழுவின் தலைவர் திரு சஞ்சய் கவுல் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி, தேசியக் கல்விக் கொள்கை 2020-இல் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதில் அரசு தீவிரமாக இருக்கிறது என்று கூறினார். ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பணிக்குழு மற்றும் தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். மாநில அரசுகள், நிபுணர்கள், பெற்றோர் முதலியோருடன் நடைபெற்ற விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில் பணிக்குழு பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.
குழந்தைகளின் அடிப்படை வளர்ச்சியில் பொம்மைகள் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறிய அமைச்சர், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் மரம், துணி, மண் போன்று எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் பொம்மைகள் பற்றி பேசினார். இது போன்ற தயாரிப்புகளால் அங்கன்வாடி மையங்கள், தேசிய பொம்மைகள் செயல் திட்டத்தின் கீழ் செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு முஞ்சாபரா மகேந்திரபாய், தூய்மை இந்தியா திட்டத்தில் அடிப்படை சுகாதாரம் முதல், ஊட்டச்சத்து திட்டத்தில் நல்ல ஊட்டச்சத்துமிக்க பழக்க வழக்கங்கள் வரையும், தற்போது ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி என்ற திட்டத்தின் வாயிலாகவும் நமது அமைப்புமுறைகள் மற்றும் சிந்தனைகளில் அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தைக் கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார். மாநில அரசுகளின் பிரதிநிதிகள், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட செயற்பாட்டாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட சுமார் 800 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
***
AD/BR/RK
(Release ID: 1923609)
Visitor Counter : 223