பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் நத்தட்வாராவில் ரூ.5500 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி முடிவுற்றப்பணிகளை அர்ப்பணித்தார்


ராஜ்சமந்த் மற்றும் உதய்பூரில் இருவழிப்பாதையை மேம்படுத்துவதற்கான சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

உதய்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு மற்றும் வழித்தட மாற்றுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்

மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கிவைத்தார்

“மாநிலத்தின் வளர்ச்சியுடன் நாட்டின் வளர்ச்சி உள்ளதாக மத்திய அரசு நம்புகிறது”

“எளிதான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நாம் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குகிறோம்”

“கடந்த காலத்தின் குறுகிய கால சிந்தனை, நாட்டிற்கு பெரும் செலவில் உள்கட்டமைப்பு கட்டுமானத்தை புறக்கணிக்க வழிவகுத்தது.”

“அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நவீன உள்கட்டமைப்பு பின்புலமாக உருவாகி வருகிறது”

“இந்தியா இன்று ஒரு முன்னோடி சமூகம்”

“நூறு சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் சேவையுடன் கூடிய மாநிலமாக ராஜஸ்தானும் உருவாவதற்கு நீண்டநாள் இல்லை”

“அரசு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி அதை பக்தியுடன் செயலாற்றுகிறது”

Posted On: 10 MAY 2023 1:43PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் நத்தட்வாராவில் ரூ.5500 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி முடிவுற்றப்பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இப்பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதை இத்திட்டங்கள் நோக்கமாக கொண்டுள்ளன. சாலை மற்றும் ரயில்வே திட்டங்கள் சரக்கு மற்றும் சேவை நடவடிக்கைகளில் வசதிகளை ஏற்படுத்துவதுடன் வர்த்தகத்திற்கு ஊக்கமளித்து இப்பிராந்தியத்தில்  மக்களின் சமூகப் பொருளாதார நிலையையும் மேம்படுத்தும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பகவான் ஸ்ரீநாத்தின் மேவர் புனிதத் தளத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். காலையில் நத்தட்வாராவில் ஸ்ரீநாத்ஜி கோவிலில் தரிசனம் மற்றும் பூஜையில் ஈடுபட்டதை பிரதமர் நினைவுகூர்ந்தார். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு  வேண்டிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்டு, முடிவுற்றப்பணிகளை அர்ப்பணித்தது பற்றி குறிப்பிட்ட பிரதமர், இத்திட்டங்கள் ராஜஸ்தானின் போக்குவரத்தை மேம்படுத்தும் என்று கூறினார்.  தேசிய நெடுஞ்சாலையின் உதய்பூரிலிருந்து ஷம்லாஜி பிரிவு வரையிலான  ஆறுவழிப்பாதையால் உதய்பூர், துங்கர்பூர், பன்ஸ்வாரா ஆகிய பகுதிகள் பயனடையும் என்று குறிப்பிட்டார்.  தேசிய நெடுஞ்சாலை 25-ன் பிலாரா-ஜோத்பூர் பிரிவு, ஜோத்பூரிலிருந்து எல்லைப் பகுதியை எளிதில் அடைய வழிவகுக்கும்  என்று கூறினார். ஜெய்பூர்- ஜோத்பூர் இடையிலான பயண தூரம்  மூன்று மணிநேரம் குறையும்  என்றும்  கும்பல்கர், ஹல்தி காட்டி ஆகிய உலகப் பாரம்பரியம் வாய்ந்த இடங்களை எளிதில் சென்றடைய முடியும் என்று தெரிவித்தார். ஸ்ரீநத்வாராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் வழித்தடம் மேவாரை மர்வாருடன் இணைக்கும் என்றும் இது மார்பிள், கிரானைட், சுரங்கத் தொழில்துறைக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மாநிலத்தின் வளர்ச்சியுடன் நாட்டின் வளர்ச்சி உள்ளதாக மத்திய அரசு நம்புகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ராஜஸ்தான் ஒரு மிகப்பெரிய மாநிலம் என்று கூறினார். இந்தியாவின் துணிச்சல், பாரம்பரியம், கலாச்சாரத்திற்கு பெயர்போன மாநிலம் இது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் வளர்ச்சி  நேரடியாக  ராஜஸ்தான் வளர்ச்சியுடன் தொடர்புடையது என்று தெரிவித்தார். இம்மாநிலத்தின் நவீன உள்கட்டமைப்புக்கு மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக கூறினார். நவீன உள்கட்டமைப்பு ரயில்வே மற்றும் சாலைப் பணிகளுடன் வரையறுக்கப்படாமல் இது கிராமங்கள், நகரங்களுக்கிடையே போக்குவரத்தை மேம்படுத்துவதாக  தெரிவித்தார். இது வசதிகளை அதிகரித்து சமூகத்தை  இணைக்கும் என்று கூறினார். மின்னணு தொலைத் தொடர்பை அதிகரிப்பதன் மூலம்  மக்களின் வாழ்க்கை எளிமையாகுவதாக அவர் கூறினார். நவீன உள்கட்டமைப்பு மண்ணின் பாரம்பரியத்தை மட்டும் மேம்படுத்தாமல் வளர்ச்சிக்கும் உத்வேகம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நவீன உள்கட்டமைப்பு பின்புலமாக உருவாகி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். தனித்துவமான வளர்ச்சிக்காக நாட்டின் அனைத்து உள்கட்டமைப்புக்கும் பெரும் முதலீடு செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். ரயில்வே, விமானப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறைகள் என அனைத்து உள்கட்டமைப்பு துறைகளிலும் மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்து வருவதாக கூறினார். உள்கட்டமைப்பு துறைக்கு 10 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தது குறித்து குறிப்பிட்ட பிரதமர், உள்கட்டமைப்பு துறையில் அதிகளவு முதலீடு செய்யப்படும் போது இது நேரடியாக வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று தெரிவித்தார்.  மத்திய அரசின் இத்திட்டங்கள்  பொருளாதாரத்திற்கு புதிய முன்னேற்றத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.

நாட்டில் எதிர்மறைகள் ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். ஆட்டா மற்றும் டேட்டா, சாலை-செயற்கைக்கோள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள முன்னுரிமைகள் குறித்து கேள்வி எழுப்பும்   மறுப்பாளர்களைப் பற்றி அவர் பேசினார். அடிப்படை வசதிகளுக்கு இணையாக நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதும் முக்கியம் என்று பிரதமர் கூறினார். வாக்கு அரசியலால் நாட்டின் எதிர்காலத்தை திட்டமிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.  சிறிய அளவிலான திட்டங்களை உருவாக்குவது என்ற குறுகிய கால சிந்தனையை மறுத்துப்பேசிய அவர், அதிகரித்து வரும் தேவைகளை மிக விரைவில் இது குறைத்து விடுவதாக கூறினார். இந்த சிந்தனை நாட்டில் பெரும் செலவில் கட்டமைப்பு செய்வதற்கு தடையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

முந்தைய அரசிற்கு உள்கட்டமைப்பு வசதி குறித்த தொலைநோக்குப் பார்வை இல்லாததால் ராஜஸ்தான் மாநிலம் பெரும் பின்னடைவைச் சந்தித்ததாக பிரதமர் குறிப்பிட்டார். விவசாயம், தொழில் துறைகளைச் சார்ந்தவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த 2000-மாவது ஆண்டில் பிரதமர் திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த மோடி, 2011 ஆம் ஆண்டு வரை தோராயமாக 3,80,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்தின் கீழ் தமது ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் தோராயமாக 3,50,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைத்திருப்பதாக கூறினார். இதை தவிர ராஜஸ்தானின் கிராமங்களில் மட்டும் 70,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது பெரும்பாலான கிராமங்கள் சாலை இணைப்பு வசதிப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது மத்திய அரசு கிராமச் சாலைகளையும், நகரங்களையும் நவீன நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய நாட்களோடு ஒப்பிடும்போது தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் இரட்டை வேகத்தில் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதற்கு அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட தில்லி-மும்பை விரைவுச்சாலையே உதாரணம் என்றார்.

இன்றைய இந்திய சமூகம் பல்வேறு எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி இருக்கிறது. மேலும் அனைத்து வசதிகளையும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அரசு அமைத்துத் தர வேண்டும் என விரும்புவதால், மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கும், ராஜஸ்தான் அரசுக்கும் உண்டு என்றார். பொதுமக்களுக்கு ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியம் என்பதால், ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே இருப்புப்பாதைகள் ஆகியவற்றை நவீனமயமாக்க மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கனவே முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஆளில்லா ரயில்வே தண்டவாள முறையை முற்றிலும் நீக்கி விட்டு, நாடு முழுவதும் உள்ள ஒட்டு மொத்த ரயில் இணைப்பையும் மின்மயமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், உதய்பூர் ரயில் நிலையத்தையும் நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையை சமாளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார். சரக்கு ரயில்களை பொறுத்தவரை சிறப்புத் தண்டவாளங்கள், பிரத்யேக சரக்கு முனையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ராஜஸ்தானுக்கான ரயில்வே நிதி ஒதுக்கீடு 14 மடங்கு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், துன்கர்பூர், உதய்பூர், சித்தூர், பாலி, சிரோஹி, ராஜ்சம்மன்ட் ஆகிய மாவட்டங்களில் ரயில்வே இணைப்புப் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும் கூறினார். 100 சதவீதம் ரயில் மின்மயமாக்கல் செய்யப்பட்ட மாநிலங்களுள் ஒன்றாக ராஜஸ்தான் மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

ராஜஸ்தானில் உள்ள ஆன்மீக ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை இணைத்திருப்பதன் மூலம் அம்மாநிலம் பெரும் பலனடைந்திருப்பதை அவர் மேற்கோள் காட்டினார். நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க மத்திய அரசு பல்முனைகளில் பாடுபட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர், பகவான் கிருஷ்ணர் தொடர்புடைய புனித தலங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு வருவதையும் நினைவுகூர்ந்தார். நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்குவதற்கே மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ஆளுநர் திரு.கல்ராஜ் மிஸ்ரா, முதலமைச்சர் திரு.அசோக் கெலாட், மாநில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னணி:

ராஜ்சமந்த், உதய்பூர் ஆகிய இரண்டு வழித்தடங்களில் மேம்பாட்டிற்காக சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மக்களின் வசதிகளை மேம்படச் செய்யும் வகையில் உதய்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ராஜ்சமந்தில் நத்தட்வாராவில் இருந்து நத்தட்வாரா நகரம் வரை புதிய வழித்தடத்தை அமைக்கும் ரயில்வே திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், என்எச்-48ன் உதய்பூர் முதல் ஷாம்லாஜி வரை 114 மீட்டர் தொலைவிலான 6 வழிப்பாதை; என்எச் 25-ன் பார்-பிலாரா-ஜோத்பூர் பிரிவுகளின் 110 கி.மீ. தொலைவிற்கு அகலமாக்கப்பட்ட 4 வழிப்பாதை; என்எச் 58இ-ன் 48 கி.மீ. தொலைவிலான இரண்டு வழிப்பாதை ஆகிய மூன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

***

AD/IR/ES/RR/AG/KPG

 

 


(Release ID: 1923098) Visitor Counter : 217