பிரதமர் அலுவலகம்

தாத்ரா, நாகர்ஹவேலியின் சில்வாசாவில் ரூ.4,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்

நமோ மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தைப் பார்வையிட்டு அதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

டியூ மற்றும் சில்வாசாவைச் சேர்ந்த, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்ட பயனாளிகளுக்கு சாவிகளை ஒப்படைத்தார்

“இந்தத் திட்டங்கள் வாழ்க்கையை எளிதாக்குதல், சுற்றுலா, போக்குவரத்து, வணிகம் ஆகியவற்றை மேம்படுத்தும். நிகழ்நேர சேவை வழங்குதல் என்ற புதிய பணிக்கலாச்சாரத்தின் உதாரணமாக இது உள்ளது”

“அனைத்து பிராந்தியத்தின் சமச்சீரான வளர்ச்சி மிகப்பெரும் முன்னுரிமையாகும்”

“சேவை உணர்வு இந்தப் பகுதியின் மக்களைக் குறிக்கிறது”

“மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எங்கள் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என நான் உறுதியளிக்கிறேன்”

“இந்திய மக்களின் முயற்சிகளையும், இந்தியாவின் சிறப்புகளையும் எடுத்துரைக்க மனதின் குரல் மிகச்சிறந்த மேடையாக மாறியிருக்கிறது”

“கடலோர சுற்றுலாவின் பிரகாசமான பகுதியாக டாமன், டியூ, தாத்ரா, நாகர் ஹவேலியை நான் பார்க்கிறேன்”

“சமாதானப்படுத்துவது என்றில்லாமல் திருப்திப்படுத்துவதற்கு நாடு முக்கியத்துவம் அளிக்கிறது”

“கடந்த 9 ஆண்டுகளில் எளியமக்களின் தேவைகளுக்கு முன்

Posted On: 25 APR 2023 6:37PM by PIB Chennai

தாத்ரா, நாகர்ஹவேலியின் சில்வாசாவில் ரூ.4,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். சில்வாசாவின் நமோ மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை அர்ப்பணித்ததும் டாமனில் அரசுப் பள்ளிகள், அரசு பொறியியல் கல்லூரி போன்ற 96 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதும்,  மற்ற சில பகுதிகளில் பல்வேறு சாலைகளை அழகுபடுத்துதல், வலுப்படுத்துதல், விரிவாக்குதல், மீன் சந்தை, வணிக வளாகம், குடிநீர் விநியோக மேம்பாடும் இந்த திட்டங்களில் அடங்கும். டியூ மற்றும் சில்வாசாவைச் சேர்ந்த, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்ட பயனாளிகளுக்கு  சாவிகளை  பிரதமர் ஒப்படைத்தார்.

இன்று காலை சில்வாசாவின் நமோ மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தைப் பிரதமர் பார்வையிட்ட போது, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன், டியூ, லட்சத்தீவு, யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி  திரு பிரஃபுல் படேல் உடனிருந்தார்.  இந்த ஆராய்ச்சிக் கழகத்தை தொடங்கிவைத்த அவர், பகவான் தன்வந்தரியின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து இந்நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன், டியூ ஆகியவற்றின் வளர்ச்சிப் பயணத்தை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.  இந்த யூனியன் பிரதேசத்திற்கு ரூ.5,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான பல பணிகள்  செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார். புதிய தொழில் கொள்கைகள் காரணமாக தொழிற்சாலை அதிகரித்து, வேலைவாய்ப்பும் அதிகரித்திருப்பதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.  இன்று ரூ.5000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், இவை சுகாதாரம், வீட்டுவசதி, சுற்றுலா, கல்வி, நகர்ப்புற மேம்பாடு ஆகியவற்றோடு தொடர்புடையவை என்றும் அவர் குறிப்பிட்டார்.   இந்தத் திட்டங்கள் வாழ்க்கையை எளிதாக்குதல், சுற்றுலா, போக்குவரத்து, வணிகம் ஆகியவற்றை மேம்படுத்தும். நிகழ்நேர சேவை வழங்குதல் என்ற புதிய பணிக்கலாச்சாரத்தின் உதாரணமாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.

தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன், டியூ ஆகிய பகுதிகளில் விடுதலைக்குப் பின் பல பத்து ஆண்டுகள் ஆகியும் ஒரு மருத்துவக்கல்லூரி கூட இல்லாத நிலையில் இளைஞர்கள் மருத்துவர்கள் ஆவதற்கு நாட்டின் வேறு பல பகுதிகளுக்கு செல்லவேண்டியிருந்தது என்பதை பிரதமர் மக்கள் கவனத்திற்கு கொண்டுவந்தார். தற்போது இந்தப்பகுதியில் அமைந்துள்ள முதலாவது தேசிய மருத்துவக்கல்வி அமைப்பு அல்லது நமோ மருத்துவக்கல்லூரி என்பது தற்போதைய அரசின் சேவை சார்ந்த அணுகுமுறை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அவர் கூறினார். வருங்காலத்தில் சுமார் 1000 மருத்துவர்கள் இந்தப் பகுதியில் உருவாவார்கள் என்று அவர் கூறினார்.

சேவை உணர்வு இந்தப் பகுதியின் மக்களைக் குறிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், பெருந்தொற்றுக் காலத்தில் உள்ளூர் மருத்துவ மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான உதவி வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். உள்ளூர் மாணவரின் கிராம தத்தெடுப்பு திட்டம் பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியில் தாம் குறிப்பிட்டதை அவர் எடுத்துரைத்தார்.

இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் 300 மாணவர்கள் பொறியியல் படிப்பதற்கான வாய்ப்பை அளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.  சில்வாசாவில் தமது முந்தைய பயணத்தின் போது வளர்ச்சிக்கான ஐந்து அம்சங்கள் பற்றி பேசியதை குறிப்பிட்ட அவர், குழந்தைகளின் கல்வி, இளைஞர்களுக்கான வருவாய் ஆதாரம், மூத்தவர்களுக்கான சுகாதார கவனிப்பு, விவசாயிகளுக்கான பாசன வசதிகள், பொது மக்களுக்கான குறைதீர்ப்பு என்பவை அந்த ஐந்து அம்சங்கள் என்று அவர் கூறினார்.

1200 குடும்பங்கள் இன்று தங்களுக்கான சொந்த வீடுகளை பெற்றிருப்பதை எடுத்துரைத்த பிரதமர், தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன், டியூ பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் வீட்டின் உரிமையாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் ஒலிபரப்பாக உள்ளது என்று கூறிய பிரதமர், இந்திய மக்களின் முயற்சிகளையும், இந்தியாவின் சிறப்புகளையும் எடுத்துரைக்க மனதின் குரல் மிகச்சிறந்த மேடையாக மாறியிருக்கிறது என்றார்.

கடலோர சுற்றுலாவின் பிரகாசமான பகுதியாக டாமன், டியூ, தாத்ரா, நாகர் ஹவேலியை நான் பார்க்கிறேன் என்று பிரதமர் கூறினார்.  சமாதானப்படுத்துவது  என்றில்லாமல் திருப்திப்படுத்துவதற்கு நாடு முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் எளியமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது நல்ல நிர்வாகத்தின் முத்திரையாக மாறியிருக்கிறது என்று அவர் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் வளத்திற்கான தீர்மானத்தை அனைவரின் முயற்சியால் தான் நிறைவேற்ற முடியும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன், டியூ, லட்சத்தீவு, யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி  திரு பிரஃபுல் படேல், தாத்ரா, நாகர் ஹவேலி, மக்களவை உறுப்பினர் திருமதி கலாபென் மோகன்பாய் டெல்கர், கௌஷாம்பி மக்களவை உறுப்பினர் வினோத் சோன்கர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

***

(Release ID: 1919552)

SM/SMB/AG/KRS



(Release ID: 1919603) Visitor Counter : 124