பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசம், கேரளா, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவுக்கு வரும் 24, 25 ஆகிய தேதிகளில் பிரதமர் செல்கிறார்

ரூ. 25000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

ரேவாவில் நடைபெறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்

பஞ்சாயத்து மட்டத்தில் பொது கொள்முதல் செய்வதற்கான ஒருங்கிணைந்த இகிராம்ஸ்வராஜ் மற்றும் ஜிஇஎம் தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுமார் 35 லட்சம் ஸ்வமித்வா சொத்து அட்டைகளையும் வழங்குகிறார்

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 4 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் ‘புதுமனை புகுவிழாவை’ குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
கொச்சி வாட்டர் மெட்ரோவை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

சில்வாசாவில் உள்ள நமோ மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் அர்ப்பணிக்கிறார்

டாமனில் தேவ்கா கடல்முனையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

Posted On: 21 APR 2023 3:02PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 24, 25ந் தேதிகளில்  மத்தியப் பிரதேசம், கேரளா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றுக்கு செல்கிறார்.

வரும்  24 ஆம் தேதி காலை 11:30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டு, சுமார் ரூ. 17,000 கோடி  மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.

25 ஆம் தேதி காலை சுமார் 10:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன்பின், காலை 11 மணியளவில், திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில், பிரதமர், ரூ.3200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார்.

மாலை 4 மணியளவில், நமோ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் செல்லும் பிரதமர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலியின் சில்வாசாவில்மாலை 4:30 மணியளவில், ரூ.4850 கோடி மதிப்பிலான  பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்அதன்பிறகு, மாலை 6 மணியளவில், டாமனில் உள்ள தேவ்கா கடற்பகுதியை பிரதமர் திறந்து வைக்கிறார்.

ரேவாவில் பிரதமர்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்று நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சபைகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் உரையாற்றுவார்.

இந்த நிகழ்வின் போது, பஞ்சாயத்து அளவில் பொது கொள்முதல் செய்வதற்கான ஒருங்கிணைந்த இகிராம்ஸ்வராஜ் மற்றும் ஜிஇஎம் தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த ஒருங்கிணைப்பின் நோக்கம், இகிராம்ஸ்வராஜ் தளத்தை மேம்படுத்துவதன் மூலம், ஜிஇஎம் வழியாக  பஞ்சாயத்துகள் தங்கள் பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதை செயல்படுத்துவதாகும்.

அரசின்  திட்டங்கள் நிறைவடைவதை உறுதி செய்வதில் மக்களின் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன், பிரதமர்வளர்ச்சியை நோக்கி எடுத்துவைக்கப்பட்ட முயற்சிகள்என்ற பிரச்சாரத்தை வெளியிடுவார். பிரச்சாரத்தின் கருப்பொருள் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி பயனாளியை அடைவதில் கவனம் செலுத்துவதாகும்.

சுமார் 35 லட்சம் ஸ்வமித்வா சொத்து அட்டைகளை பயனாளிகளுக்கு பிரதமர் வழங்குவார். இந்தத் திட்டத்திற்குப் பிறகு, இங்கு விநியோகிக்கப்பட்டவை உட்பட, நாட்டில் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சுமார் 1.25 கோடி சொத்து அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கும்.

'அனைவருக்கும் வீடு' என்ற இலக்கை அடைவதற்கான இட்டத்தின் ஒரு கட்டமாக, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ்,  4 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் 'புதுமனை புகுவிழா’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.

ரூ.2300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் அடிக்கல் நாட்டுவார். மத்திய பிரதேசத்தில் அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில், 100 சதவீத ரயில் மின்மயமாக்கல், பல்வேறு இரட்டிப்பு, அகலப்பாதை திட்டங்கள்மின்மயமாக்கல் திட்டங்களும் அடங்கும். குவாலியர் ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்புக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டுவார்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

திருவனந்தபுரத்தில் பிரதமர்

திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையே கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்தில் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

இந்த ரயில் சேவையானது திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, பத்தனந்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 11 மாவட்டங்களை உள்ளடக்கி செல்கிறது.

பிரதமர் ரூ.3,200 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு  அர்ப்பணிக்கிறார். கொச்சி நீர் மெட்ரோ திட்டத்தை  பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தப் புது வகையான நீர் மெட்ரோ,  மின்சார படகுகள் மூலம் கொச்சியில் இருக்கும் பத்து தீவுகளை இணைக்கின்றது. இதுதவிர, திண்டுக்கல்-பழனி-பாலக்காடு பிரிவில் மின்சார மயமாக்கப்பட்ட ரயில் சேவையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

 இந்த நிகழ்வில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, வர்க்கலா சிவகிரி ரயில் நிலையங்கள் ஆகியவற்றை மறுசீரமைப்பு திட்டங்கள், நேமன், கொச்சுவேலி உள்ளடக்கிய திருவனந்தபுரத்தின் பகுதிகளை இணைக்கும் விரிவான வளர்ச்சித் திட்டம் மற்றும் திருவனந்தபுரம்- ஷோரனூர் பகுதி வழித்தடத்தில் வேகத்தை அதிகரிக்கும் திட்டம் போன்றவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இது தவிர திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த டிஜிட்டல் அறிவியல் பூங்காவின் மூலம் டிஜிட்டல் பொருட்களை உருவாக்கி, தொழில்துறையின் சேவைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கல்வித்துறையோடு இணைந்து செயலாற்றுவதற்கான ஆராய்ச்சி அமைப்பாகும். மூன்றாம் தலைமுறை அறிவியல் பூங்காவான டிஜிட்டல் அறிவியல் பூங்காவில் 4.0 தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவியல், தகவல் பகுப்பாய்வு, இணையப்பாதுகாப்பு, ஸ்மார்ட்பொருட்கள் மூலம் உருவாக்கப்படும் பொது சேவை வசதிகளை கொண்டிருக்கும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உள்கட்டமைப்பு வசதியைக் கொண்ட இந்தப் பூங்காவில், பல்கலைக்கழகங்களோடு இணைந்து தொழில்துறை நிறுவனங்கள், உற்பத்தித் தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு நவீன ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யும். இதற்கு முதல் கட்டமாக பகுதி-1 திட்டத்திற்கு ரூ.200 கோடி முதலீடும், இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடாக ரூ.1515 கோடி முதலீடு ஆகும்.

சில்வாசா மற்றும் டாமனில் பிரதமர்

கடந்த 2019-ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் சில்வாசாவில் நமோ மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், தற்போது அங்கு சென்று அந்த ஆராய்ச்சி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதன் மூலம் சில்வாசா, தாத்ரா, நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மேம்படும். இந்த நவீன மருத்துவக்கல்லூரியில் நவீன ஆராய்ச்சி மையங்கள், தேசிய மற்றும் சர்வதேச இதழ்களைக் கொண்ட 24X7 மத்திய நூலக வசதி, சிறப்பு மருத்துவ பணியாளர்கள், மருத்துவ ஆய்வுக்கூடம், நவீன விரிவுரை அறைகள், ஆராய்ச்சி ஆய்வுக்கூடம், உடற்கூறியல் அருங்காட்சியகம், மன்ற இல்லம், விளையாட்டு அரங்குகள், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இல்லங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

பிரதமர் சில்வாசாவில் ஷாயிலி மைதானத்தில் ரூ.4850 கோடி மதிப்பீட்டிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த 96 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மொர்கால், கேர்டி, சிந்தோனி, தாத்ராவில் உள்ள மாசாத், நகர் ஹவேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அமைக்கும் திட்டம், தாத்ரா, நகர் ஹவேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாலைகளை விரிவாக்கி வலிமைப்படுத்தி, அழகுபடுத்தும் திட்டம், அம்பவாடி, பரியாரி, டாமன்வாடா, ஹாரிவாத் போன்ற பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் டாமனில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, மோட்டி டாமன் மற்றும் நானி டாமனில் உள்ள மீன் சந்தை மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், நானி டாமனில் குடிநீர் விநியோக மேம்பாட்டுத்திட்டம் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.

டாமனில் உள்ள 5.45 கி.மீ. நீளமுள்ள தேவ்கா கடற்கரை முகப்பு திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சுமார் ரூ.165 கோடி மதிப்பீட்டில் கடலோர நடைபாதை உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும்.  இந்தத் திட்டத்தின் மூலம் உள்ளூர் பொருளாதாரம் மேம்பட்டு, அதிகளவில் சுற்றுலா பயணிகளின் வருகையை உறுதி செய்து பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு முனையமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடற்கரையின் முகப்பானது உலகத்தர சுற்றுலாத் தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. அழகிய மின் விளக்குகள், வாகன நிறுத்துமிட வசதிகள், பூங்காக்கள், உணவு நிலையங்கள், பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கி  வரும் காலத்தில் ஆடம்பர கூடார வசதிகள் ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

***

(Release ID: 1918530)

SM/PKV/GS/AG/KRS



(Release ID: 1918615) Visitor Counter : 235