சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஏப்ரல் 10, 11 ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை


கொரோனா தொற்றை எதிர்கொள்வது மற்றும் தடுப்பூசி மேலாண்மை குறித்து டாக்டர். மன்சுக் மாண்டவியா மாநில அரசுகளுடன் ஆலோசனை

Posted On: 07 APR 2023 2:47PM by PIB Chennai

அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் இன்று உரையாடிய மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, "கொரோனாவின் முந்தைய பரவலின்போது செயல்பட்டது போல், தற்போதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார். அண்மையில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான பொது சுகாதாரத் தயார்நிலை மற்றும் தேசிய கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் முன்னிலையில் மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது. 

மாநிலங்கள் விழிப்புடன் இருக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தயார் நிலையையும் வைத்திருக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். 2023-ம் ஆண்டு ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஒத்திகை நடத்தவும், ஏப்ரல் 8,9 ஆகிய தேதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சுகாதாரத் தயார் நிலை குறித்து ஆலோசிக்குமாறும் மாநில சுகாதார அமைச்சர்களை அவர் வலியுறுத்தினார்.

2023 ஏப்ரல் 7-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தற்போதுள்ள 10 லட்சத்துக்கு 100 சோதனைகள் என்ற விகிதத்தில் இருந்து சோதனை விகிதத்தை விரைவாக அதிகரிக்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டடு. மேலும் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

2023-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 571 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 2023-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4,188-ஆக உயர்ந்துள்ளதென மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. 2023-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், வாராந்திர கொரோனா தொற்று விகிதம் 3.02%-ஆக உள்ளது.

முதல் 2 டோஸ் தடுப்பூசி போடுவதில் 90% நிறைவு செய்திருந்தாலும், முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்துவது மிகவும் குறைவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் போடுவதை அதிகரிக்குமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்தியாவில் எட்டு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் 5 மாவட்டங்களில் 5%க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா தொடர்பான பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேம்படுத்துவதன் முக்கியத்தும் குறித்தும் டாக்டர் மாண்டவியா வலியுறுத்தினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் சரியான நேரத்தில் சரியான நேரத்தில் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியதை மாநிலங்கள் பாராட்டின. கொரோனாவைத் தடுப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதாக அவர்கள் உறுதியளித்தனர். விழிப்புடன் இருப்பதாகவும், தற்போதைய நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும் மாநில அரசுகள் தெரிவித்தன. 2023-ம் ஆண்டு ஏப்ரல் 10,11 ஆகிய தேதிகளில் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தயார் நிலை ஒத்திகை நடத்தப்படும் என்றும் மாநிலங்கள் உறுதியளித்தன.

 

திரு.என் ரங்கசாமி (புதுச்சேரி முதலமைச்சர்), திரு. மா. சுப்பிரமணியன் (தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர்), திரு.தன் சிங் ராவத், (உத்தரகாண்ட் சுகாதாரத்துறை அமைச்சர்), திரு. கேசப் மஹந்தா, (அஸ்ஸாம் சுகாதாரத்துறை அமைச்சர்), திரு.விஸ்வஜித் ரானே, (கோவா சுகாதாரத்துறை அமைச்சர்), திரு. பன்னா குப்தா, (ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர்),  திரு.பிரபுராம் சௌத்ரி,  (மத்திய பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்), திரு.பல்பீர் சிங், (பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர்), டாக்டர் சபன் ரஞ்சன் சிங், (மணிப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர்), திரு. அனில் விஜ், (ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர்), டாக்டர் தானி ராம் ஷண்டில், (இமாச்சலப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்), திருமதி விடடலா ரஜினி, (ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர்), திரு.தண்ணீரு ஹரிஷ் ராவ், (தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர்), திரு. ருஷிகேஷ் படேல், (குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர்), திரு.நிரஞ்சன் பூஜாரி, (ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர்), திரு.அலோ லிபாங், (அருணாச்சல பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்), திரு. தானாஜி சாவந்த், (மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர்), திருமதி மசெல் அம்பரீன் லிங்டோஹ், (மேகாலய சுகாதாரத்துறை அமைச்சர்), திரு. சௌரப் பரத்வாஜ், (டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்) மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

----

 

VJ/CR/KPG



(Release ID: 1914692) Visitor Counter : 278