பிரதமர் அலுவலகம்

ஆஸ்திரேலிய பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 10 MAR 2023 3:37PM by PIB Chennai

மேதகு பிரதமர் அல்பனீஸ் அவர்களே,

 

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

 

ஊடக நண்பர்களே,

 

வணக்கம்!

 

முதன்முறையாக அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரதமர் அல்பனீஸ் அவர்களை மனமார வரவேற்கிறேன். பிரதமர்கள் அளவில் வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்த கடந்த ஆண்டு இரு நாடுகளும் முடிவு செய்தன. பிரதமர் அல்பனீஸின் வருகையால் இந்த திட்டம் தொடங்கியுள்ளது.

 

நண்பர்களே,

 

பரஸ்பர ஒத்துழைப்பு உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து இன்று நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தினோம். நமது விரிவான கேந்திர கூட்டுமுயற்சியில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய அம்சமாக விளங்குகிறது. இந்தோ- பசிபிக் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்தும், பரஸ்பர நலன் பயக்கும் ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். ராணுவ தளவாட ஆதரவு உட்பட பாதுகாப்புத் துறையில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

 

நண்பர்களே,

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு இரு நாடுகளும் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. தூய்மையான ஹைட்ரஜன் மற்றும் சூரிய ஒளிசக்தி துறையில் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். மக்களிடையேயான உறவு, இந்திய- ஆஸ்திரேலிய நட்புறவின் முக்கிய தூணாக உள்ளது. நமது மாணவ சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் கல்வி தகுதிகளின் அங்கீகாரத்திற்காக கையெழுத்துட்டுள்ளோம். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெளிநாட்டு சமூகத்தினரில் இரண்டாவது மிகப்பெரிய பிரிவினராக உள்ள இந்தியர்கள், அந்நாட்டின் சமுதாயம் மற்றும் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களில், ஆஸ்திரேலியாவில் உள்ள வழிப்பாட்டு தளங்களின் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் வருத்தத்திற்குரியவை. இத்தகைய சம்பவங்கள் இந்தியாவில் வசிப்பவரையும் கலங்கச் செய்திருப்பது பற்றி பிரதமர் அல்பனீஸிடம் தெரிவித்தேன். இந்திய சமூகத்தினரின் பாதுகாப்புக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

 

நண்பர்களே,

 

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதிலும்சர்வதேச நலனைப் பாதுகாப்பதிலும் நமது இரு தரப்பு உறவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை பிரதமர் அல்பனீசும், நானும் ஒப்புக்கொள்கிறோம். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் முன்னுரிமைகளை பிரதமர் அல்பனீஸிடம் விளக்கியதோடு, ஆஸ்திரேலியாவின் தொடர் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தேன். இந்தியா வந்துள்ள பிரதமர் அல்பனீசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நன்றி.

 

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

 

***

SRI/RB/DL



(Release ID: 1905816) Visitor Counter : 89