பிரதமர் அலுவலகம்

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 27 FEB 2023 2:51PM by PIB Chennai

கடந்த சில ஆண்டுகளில் கர்நாடக மாநிலம் வளர்ச்சியை நோக்கி  விரைவாகப் பயணிக்கிறது. ரயில்வே, சாலை, விமானப் போக்குவரத்து, டிஜிட்டல் இணைப்பு முதலிய துறைகளில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடகாவின் வளர்ச்சி, இரட்டை இஞ்சின் அரசால் மிக வேகமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் விமானப் பயணம் குறித்து அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ள வேளையில் இந்த ஷிவமோகா விமான நிலையம் தொடங்கப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏர் இந்தியா நிறுவனம் ஊழலுக்கு பெயர் பெற்றிருந்தது. தற்போது இந்த நிறுவனம் உலகின் புதிய உச்சங்களை எட்டி வருவதோடு, புதிய ஆற்றல் சக்தியாகவும் திகழ்கிறது.

இந்தியாவின் விமானத்துறை இன்று உலகளவில் பிரசித்தி பெற்றுள்ளது. வரும் காலங்களில் இந்தியாவில் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் தேவைப்படும். இவற்றில் ஏராளமான இளைஞர்கள் பணிபுரிவார்கள். தற்போது இது போன்ற விமானங்களை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலும் உள்நாட்டில் தயாரான பயணிகள் விமானத்தில் இந்திய மக்கள் பயணிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

நண்பர்களே,

2014-ஆம் ஆண்டிற்கு முன்பு பெரு நகரங்களில் விமான நிலையம் தொடங்கப்படுவதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. அப்போது நாட்டில் மொத்தம் 74 விமான நிலையங்களே இருந்தன. ஆனால் வெறும் 9 ஆண்டுகளிலேயே பிஜேபி அரசு நாட்டில் 74 புதிய விமான நிலையங்களை உருவாக்கியுள்ளது. பல்வேறு சிறிய நகரங்கள் நவீன விமான நிலையங்களைப் பெற்றுள்ளன. சாமானிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற குறைந்த கட்டணத்தில் உடான் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். 

விமான நிலையம் கட்டமைக்கப்பட்டதால் உள்ளூர் மக்கள் பயனடைவதோடு, மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் பெருவாரியாக பயனடைவார்கள். ரயில் இணைப்பு மேம்படுத்தப்படும்போது விவசாயிகளுக்கும் புதிய சந்தைகள் கிடைத்து குறைந்த செலவில் நாடு முழுவதும் தங்களது விளைப் பொருட்களை அவர்கள் விநியோகிப்பார்கள்.

பிஜேபி அரசு, கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கான அரசு. பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கி நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அதிகாரமளிக்கும்  பாதையில் பிஜேபி அரசு பயணிக்கிறது. கழிவறை, சமையல் எரிவாயு, குடிநீர்க் குழாய் இணைப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

இந்த ‘அமிர்தகாலம்’ தான் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான தருணம் என்பதை இம்மாநில மக்கள் நன்கு அறிவார்கள். கர்நாடகாவின் வளர்ச்சிப் பணி இனி மேலும் வேகமடையும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்கிறேன். நமது மக்களின் கனவுகளை நிறைவேற்ற நாம் இணைந்து பயணிக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும்  நல்வாழ்த்துகள். 

நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

 (Release ID: 1902746)

AD/BR/KRS



(Release ID: 1903000) Visitor Counter : 88