விவசாயத்துறை அமைச்சகம்

பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான பயனாளி விவசாயிகளுக்கு 13வது தவணை தொகையாக ரூ. 16,800 கோடியைக் கர்நாடகாவின் பெலகாவியில் பிரதமர் நாளை வழங்குவார்

Posted On: 26 FEB 2023 4:36PM by PIB Chennai

பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதி  (பிஎம் - கிசான் ) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை வழங்கவிருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக மொத்தம் ரூ. 16,800 கோடி  டெபாசிட் செய்யப்படும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பிஎம் - கிசான் 13வது தவணை வெளியீட்டு நிகழ்வு, இந்திய ரயில்வே, ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து, கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெறும். இதில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் செயலாளர் திரு மனோஜ் அஹுஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் பிஎம் - கிசான் மற்றும் ஜல் ஜீவன் இயக்கப் பயனாளிகள் அடங்கிய ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பெருந்திரளாகக்  கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியை நேரலையில் காண ஆர்வமுள்ளவர்கள், பின்வரும் யூஆர்எல்-ஐ அணுகி  நிகழ்விற்குப் பதிவுசெய்யலாம்: https://lnkd.in/gU9NFpd மற்றும் https://pmindiawebcast.nic.in/ என்ற இணையத்தில் நிகழ்வை நேரடியாகக் காணலாம்.

இத்திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12வது தவணை கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்பட்டது. 13 வது தவணை வெளியிடப்படுவதன் மூலம், இந்தியாவின் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தங்களின் வாழ்வாதார இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவுவதற்கும் அரசு தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது. பிஎம் - கிசான் திட்டம் ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க பலன்களைத் தந்துள்ளது. இப்போதைய தவணை அவர்களின் வருவாயை மேலும் அதிகரிக்கச் செய்யும்; விவசாயத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி 2019ல் பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதி  (பிஎம் - கிசான் ) திட்டத்தைத் தொடங்கினார். குறிப்பிட்ட சில விலக்குகளுக்கு உட்பட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாசன நில உரிமையாளர் குடும்பங்களுக்கும்  வருமான ஆதரவு வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000, தலா ரூ.2000 வீதம் மூன்று தவணைகளில், நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

தற்போது வரை, 11 கோடிக்கும் அதிகமான விவசாயக்  குடும்பங்களுக்கு, முதன்மையாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 2.25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கொவிட் பொதுமுடக்கத்தின் போது, உதவி தேவைப்படும் இந்த விவசாயிகளை ஆதரிப்பதற்காக, ரூ. 1.75 லட்சம் கோடி பல தவணைகளில் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மூன்று கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அவர்கள் மொத்தமாக ரூ. 53,600 கோடி நிதியாகப் பெற்றுள்ளனர்.

இந்தத் திட்டத்தின் நிதி கிராமப்புற பொருளாதார வளர்ச்சியைத் தூண்டியுள்ளது. விவசாயிகளின்  கடன் சுமையைக் குறைத்தது. விவசாய முதலீடுகளை உயர்த்தியது. இது விவசாயிகளின் இடர் தாங்கும்  திறனை அதிகரித்து, கூடுதல்  உற்பத்தி முதலீடுகளுக்கு வழிவகுத்தது. சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனக் (ஐஎஃப்பிஆர்ஐ) கருத்தின்படி, பிஎம் - கிசான் நிதி  அவர்களின் விவசாய தேவைகளுக்கு மட்டுமின்றி  கல்வி, மருத்துவம் மற்றும் திருமணம் போன்ற பிற செலவுகளைப்  பூர்த்தி செய்யவும் உதவுகிறது.

***

SRI / SMB / DL



(Release ID: 1902616) Visitor Counter : 1026