பிரதமர் அலுவலகம்

“நீர் - மக்கள் திட்டத்தை” காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திறந்துவைத்து உரையாற்றினார்

இந்த அமிர்த காலத்தில், இந்தியா நீரை எதிர்காலமாக பார்க்கிறது

நீரை கடவுளாகவும், நதிகளை தாயாகவும் இந்தியா கருதுகிறது

நீர்ப்பாதுகாப்பு நமது சமுதாயத்தின் கலாச்சாரம் ஆகும் மற்றும் நமது சமூக சிந்தனையின் மையமாகும்

தூய்மை கங்கை இயக்கம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு மாதிரியாகத் திகழ்கிறது

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டிருப்பது நீர்ப்பாதுகாப்பில் மிகப்பெரிய நடவடிக்கையாகும்

Posted On: 16 FEB 2023 2:16PM by PIB Chennai

பிரம்மகுமாரிகளின் நீர்-மக்கள் இயக்கத் தொடக்கவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

     கூட்டத்தில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், பிரம்மகுமாரிகளின் நீர்-மக்கள் இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேச வாய்ப்பு கிடைத்தது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது எப்போதும் சிறந்த அனுபவம் என்று கூறினார்.  மறைந்த ராஜ்யோகினி தாதி ஜான்கி அவர்களின் ஆசிர்வாதம் கிடைத்தது தனக்கு மிகப்பெரிய சொத்து என்று பிரதமர் தெரிவித்தார்.  2007 ஆம் ஆண்டு தாதி பிரகாஷ் மணி அவர்கள் மறைந்த போது, அவருக்கு மரியாதை செலுத்த அபுசாலைக்கு வந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். கடந்த வருடங்களில் பிரம்ம குமாரி சகோதரிகளிடமிருந்து தமக்கு அன்பான அழைப்பு கிடைத்ததாகவும், தாம் எப்போதும் அவர்களுடைய ஆன்மீக குடும்பத்தின் உறுப்பினராக இருக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். இந்நிறுவனம் தொடங்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, 2011 ஆம் ஆண்டு அகமதாபாதில் நடைபெற்ற சக்தியின் எதிர்காலம் என்ற நிகழ்ச்சி 2013 ஆம் ஆண்டு சங்கம் தீர்த்தம் நிகழ்ச்சி, 2017-ல் பிரம்ம குமாரிகளின் நிறுவனத்தின் 80-ஆம் ஆண்டு நிறுவன தினம் மற்றும் அமிர்த திருவிழாவின் நிகழ்ச்சி ஆகியவை குறித்து நினைவுகூர்ந்த பிரதமர், அவர்களுடைய அன்புக்கும், நட்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். பிரம்ம குமாரிகளுடன் தனக்கு தனித்துவமான நட்புறவு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். சுயநலமின்றி அனைத்தையும் சமூகத்திற்கு அர்ப்பணிப்பது அவர்கள் அனைவருடைய ஆன்மீக நடைமுறையின் வடிவம் என்று கூறினார்.

     எதிர்காலத்தில் உலகம் முழுவதும் தண்ணீர் வறட்சி ஏற்படும் என்று அறியப்படும் சூழ்நிலையில், நீர்-மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 21 ஆம் நூற்றாண்டில் புவியில் நீர்வள ஆதாரங்கள் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே இருப்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், தண்ணீர் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்வி என்று கூறினார். இந்த அமிர்த காலத்தில் இந்தியா நீரை எதிர்காலமாக கருதுகிறது என்று அவர் தெரிவித்தார். நீர் இருந்தால் எதிர்காலம் இருக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், அதற்கான கூட்டு நடவடிக்கைகளை இன்று முதல் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நீர்ப்பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார்.  பொதுமக்களின் இந்த கூட்டு முயற்சிக்கு பிரம்ம குமாரிகளின் நீர்-மக்கள் இயக்கம் புதிய வலிமையை அளிக்கும் என்று கூறினார். இது போன்ற நீர் பாதுகாப்பு இயக்கங்கள் ஊக்கத்தை அளித்து,  நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும்..

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இயற்கை, சுற்றுச்சூழல், நீர் தொடர்பாக கட்டுப்பாடான, சமநிலையான, உணர்ந்து அறியக்கூடிய நிலையை இந்திய முனிவர்கள் உருவாக்கியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். பழங்காலங்களில் நீரை வீணாக்காமல், அது பாதுகாக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த உணர்வு இந்திய ஆன்மீகம் மற்றும் நமது மதத்தின் ஒருபகுதியாக உள்ளது என்று கூறினார்.   நீர்ப் பாதுகாப்பு நமது சமூகத்தின் கலாச்சாரம் என்றும், நமது சமூக சிந்தனையின் மையம் என்றும் கூறிய பிரதமர், அதனால்தான், நீரை கடவுளாகவும், நதிகளை தாயாகவும் நாம் கருதுகிறோம் என்று குறிப்பிட்டார்.   சமூகம் இயற்கையுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது, நீடித்த வளர்ச்சி வாழ்க்கையின் இயற்கையான வழியாக மாறுகிறது என்று கூறினார்.  கடந்த கால உணர்வை மீண்டும் சிந்திக்கும் போது எதிர்கால சவால்களுக்கான தீர்வை நாடுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.  நீர்ப்பாதுகாப்பின் மதிப்பு குறித்து குடிமக்களின் மனதில் நம்பிக்கை விதைக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய பிரதமர், நீர் அசுத்தத்திற்கான அனைத்து காரணிகளையும் நீக்க வேண்டும் என்று கூறினார்.  நீர்ப்பாதுகாப்பிற்காக செயல்படும் பிரம்மகுமாரிகள் போன்ற இந்திய ஆன்மீக நிறுவனங்களின் பங்களிப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

     கடந்த காலங்களில் நீர்ப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பராமரிப்பது கடினம் என்று கருதப்பட்டு, எதிர்மறை சிந்தனை உருவாக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.  கடந்த எட்டு, ஒன்பது ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்த பிரதமர், இந்த முயற்சிகளால் மனநிலை மற்றும் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.  தூய்மை கங்கை இயக்கத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட பிரதமர், கங்கை மட்டுமல்லாமல், அனைத்துப் புனித நதிகளும் இந்த இயக்கத்தின் மூலம் தூய்மைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.  கங்கை ஆற்றங்கரையில் இயற்கை வேளாண்மைப் பணிகள் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். தூய்மை கங்கை இயக்கம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு மாதிரியாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

     மழை சேகரிப்பு இயக்கம் குறித்து பேசிய பிரதமர், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதும், நாட்டிற்கான மிகப்பெரிய சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.  நிலத்தடி நீர் திட்டத்தின்மூலம் நாட்டில் ஆயிரக்கணக்கான கிராம பஞ்சாயத்துக்களில் நீர்ப்பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் கட்டப்படுவது நீர்ப்பாதுகாப்புக்கான மிகப்பெரிய நடவடிக்கை என்று பிரதமர் தெரிவித்தார்.

     நீர்ப்பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், நீர் குழுக்கள் மூலம் நீர்வள இயக்கம் போன்ற முக்கியத் திட்டங்களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் முன்னணி வகிப்பதாகக் கூறினார்.  அதே பங்களிப்பை பிரம்மகுமாரி சகோதரிகள் நாட்டிலும், உலகளவிலும் மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார். நீர்ப்பாதுகாப்புடன் சுற்றுச்சூழல் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். வேளாண்மையில் சமமான அளவில் நீரை பயன்படுத்த சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்களை நாடு ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்த பிரதமர், அதன் பயன்பாட்டை அதிகரிக்க விவசாயிகளை பிரம்மகுமாரிகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

     சர்வதேச சிறுதானிய ஆண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். அனைவரும் தங்களது உணவில் தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கம்பு, சோளம் ஆகியவை பல நூற்றாண்டுகளாக இந்திய வேளாண்மை மற்றும் உணவின் ஒரு பகுதியாக இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.  சிறுதானியங்கள் மிகுந்த ஊட்டச்சத்தைக் கொண்டதாகவும் சாகுபடி பணிக்கு குறைந்த அளவு நீரே தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

     நிகழ்ச்சியின் நிறைவாகப் பேசிய பிரதமர், கூட்டு முயற்சியுடன் நீர்-மக்கள் இயக்கம் வெற்றிகரமாக அமைந்து, சிறந்த எதிர்காலத்துடன், சிறந்த இந்தியாவை கட்டமைக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

***

(Release ID: 1899775)

SRI/IR/UM/KRS



(Release ID: 1899870) Visitor Counter : 172