பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மும்பையில், அல்ஜாமீயா-துஸ்-சைஃபியாவின் புதிய வளாகத்தை பிரதமர் திறந்துவைப்பு

Posted On: 10 FEB 2023 7:15PM by PIB Chennai

மும்பை நகரின் மாரோலில் அல்ஜாமீயா-துஸ்-சைஃபியாவின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். அல்ஜாமீயா-துஸ்-சைஃபியா என்பது தாவூதி போரா சமூகத்தின் முதன்மை கல்வி நிறுவனமாகும்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  மாறிவரும் தருணங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறனின் அடிப்படையிலேயே ஒவ்வொரு சமூகம், குழு அல்லது நிறுவனம் அங்கீகரிக்கப்படுவதாகக் கூறினார். ‘மாறிவரும் காலங்கள் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப தக்க வைத்துக் கொள்வதில் தாவூதி போரா சமூகம் தன்னை நிரூபித்துள்ளது”, என்று அவர் தெரிவித்தார்.  சரியான நோக்கத்துடனான கனவுகள் எப்போதுமே நிறைவேறும் என்று கூறிய பிரதமர், மும்பையில் அல்ஜாமீயா-துஸ்-சைஃபியாவின் கனவு சுதந்திரத்திற்கு முன்பே காணப்பட்டதாகக் கூறினார். தண்டி யாத்திரைக்கு முன்பு தாவூதி போரா சமூகத்தின் தலைவர் இல்லத்திற்கு மகாத்மா காந்தி சென்றிருந்ததை நினைவுகூர்ந்த திரு மோடி, அந்த இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதற்காக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும், ஒவ்வொருவரும் அதை நேரில் சென்று காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

“புதிய தேசிய கல்விக் கொள்கை போன்ற சீர்திருத்தங்களை அமிர்த காலகட்டத்தில் நாடு எடுத்து வருகிறது”, என்று கூறிய பிரதமர், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நவீன கல்விக்காக உருவாக்கப்பட்டு வரும் புதிய வாய்ப்புகளை சுட்டிக்காட்டினார். இந்திய பண்பாடுடன் இணைந்த நவீன கல்வி அமைப்புமுறையில் நாடு கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த எட்டு ஆண்டுகளில் ஏராளமான பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டிருப்பதோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். கல்வி அமைப்புமுறையில் பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டு காட்டினார்.

 

புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் பழங்கால ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்குவது பற்றி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியாகி இருக்கும் அறிவிப்பு பற்றி பேசிய அவர், தங்களுடன் தொடர்புடைய பழங்கால எழுத்துக்களை டிஜிட்டல்மயமாக்க முன்வருமாறு அனைத்து சங்கங்கள் மற்றும் பிரிவுகளின் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். இந்த முயற்சியில் இளைஞர்களை ஈடுபடுத்துமாறு போரா சமூகத்தினருக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநில அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

***

AP  / RB  / DL


(Release ID: 1898528)