தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கோஸ்டரிகா திரைப்பட இயக்குநர் வாலன்டினா மாரல் இயக்கிய ஸ்பானிஷ் மொழி திரைப்படமான ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ் கோல்டன் பீக்காக் விருதை வென்றது

Posted On: 28 NOV 2022 7:21PM by PIB Chennai

கடந்த சில நாட்களாக கோவாவில் நடைபெற்று வரும் 53-வது சர்வதேச திரைப்பட விழாவில், மனமும், உடலும், இதயமும், ஆன்மாவும் முழுவீச்சில் திரைக்காவியங்களில் மூழ்கி ஏகாந்தத்தை அனுபவித்து வந்த நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச போட்டிக்கான நடுவர் குழு திரைக்கடலில் மூழ்கி, முத்தெடுத்து தந்துள்ளது. ஆம்..! போட்டி பிரிவில் திரையிடப்பட்ட ஏராளமான திரைப்படங்களிலிருந்தும், திரை இயக்குநர்களிலிருந்தும் சிறந்த விளங்கிய படங்களையும், இயக்குநர்களையும் அறிவித்துள்ளது. பெருமைக்குரிய அங்கீகாரத்திற்குரிய, பாராட்டுதலுக்குரிய அந்த திரைப்படம் மற்றும் இயக்குநர் பற்றி அறிவோம்..!

ஸ்பானிஷ் மொழி திரைப்படம் ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைபடத்திற்கான பெருமைக்குரிய கோல்டன் பீக்காக்  விருது ஸ்பானிஷ் மொழி திரைப்படமான ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்-க்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் திரைஉலகின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் நிதர்சனப்படுத்தியுள்ளதற்காக சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று போட்டி பிரிவின் நடுவர் குழு தெரிவித்துள்ளது. கோஸ்டரிகா திரைப்பட இயக்குநர் வாலன்டினா மாரல் இயக்கிய இந்த திரைப்படம் 16 வயது இளம்பெண் ஈவா தனது இளமைப்பருவத்தி்ல் காலடி எடுத்து வைக்கும் தருணத்தை விளக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்ற மிகச்சாதாரணமான நிகழ்வு இதுஅல்ல, ஆனால், சில தருணங்களில் வாழ்வின் போக்கையே அடியோடு திசை மாற்றி விடக்கூடிய தருணம் இது என்பதை உணர்த்தும் வகையில் இந்த கதை அமைந்துள்ளது. வன்முறையும், வாஞ்சையும் வெகுண்டெழுதலும், வெகுநெருக்கமாக இருப்பதும் எல்லா தருணங்களிலுமே எதிர்மறை பண்புகள் அல்ல என்று உணர்த்தும் வகையில் ஏராளமான சிக்கல்களை உள்ளடக்கிய இந்த கதையின் போக்கை மிக நேர்மையாக படம் பிடித்திருப்பதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இந்த தடுமாற்றமான பருவகாலத்தில் புல்லரிப்போடு நெகிழ்ச்சியுடன் நாமே பயணிப்பது போன்ற ஒரு உணர்வை இந்த திரைப்படம் ஏற்படுத்தியது என்கிறது தேர்வுக்குழு.

குடும்ப வாழ்வின் விழுமியங்களோடும், உணர்வுகளோடும் தங்களை தொடர்புபடுத்தி கொள்பவர்கள் கூட பிரபஞ்சத்தின் மாற்று புலத்தில்  நடைபெறும் இத்தகைய கதைகளோடு தங்களை பொருத்தி பார்க்கக் கூடிய வகையிலான இந்த படத்தை பெனாயிட் ரோலண்ட் மற்றும் கிரிகோரே டெபெய்லி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஈரானின் பிற்போக்கான சமூக அரசியல் அமைப்பை மாயாஜாலம் போலவும், அதேநேரத்தில் மென்மையான முறையிலும் எடுத்துக் கூறிய நோ எண்ட் திரைப்படத்தை எழுதி, இயக்கிய இயக்குநர் நடேர் சேவருக்கு சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ரகசிய காவல்துறை அமைப்பின் மோசடிகளையும், சூழ்ச்சிகளையும் கண்முன்னே நிறுத்தும் வகையில் எடுக்கப்பட்ட துருக்கிய திரைப்படமான நோ எண்ட்-டின் இயக்குநர் நடேர் சேவருக்கு சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நேர்மைக்கு பெயர்பெற்ற ஐயாஸ் என்ற தனிமனிதர் ரகசிய காவல்துறை தொடர்பான ஒரு பொய்யை சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அவர் தனது வீட்டை காப்பாற்ற  வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். உண்மையான ரகசிய காவல்துறை உள்ளே நுழையும் கட்டம் வரும்போது நிலைமை இன்னும் சிக்கலாகிறது. இந்த படத்திற்கான இயக்குநருக்கு விருதை அறிவிப்பது என்று போட்டிக்கான நடுவர் குழு ஒருமனதாக முடிவெடுத்ததாக குழு தெரிவிக்கிறது. ஈரானின் பிற்போக்கான சமூக அரசியல் அமைப்பை மாயாஜாலம் போலவும், அதேநேரத்தில் மென்மையான முறையிலும் எடுத்துக் கூறிய இந்த திரைப்படம் ஆமை வேகத்தில் நகர்வதாக இருந்தாலும் நமது இதயங்களில் ஆணியை அறைந்தது போல நிதர்சனத்தை எடுத்துரைக்கிறது.

நோ எண்ட் திரைப்படத்தில் மிகச்சிக்கலான உணர்வுகளை வெளிப்படுத்திய கதாநாயகனாக நடித்த வாகித் மொபாசெரி-க்கு சில்வர் பீக்காக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடேர் சேவர் இயக்கிய நோ எண்ட் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தை அற்புதமாக வெளிப்படுத்திய வாகித் மொபாசெரி-க்கு தேர்வுக் குழுவினர் ஒருமனதாக சிறந்த நடிகருக்கான விருதை அறிவித்துள்ளனர். மிகச்சிக்கலான உணர்வுகளை இந்த கதாநாயகர் பாத்திரம் வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலையிலும் வார்த்தைகள் அதிகமின்றி முகபாவங்களாலும், உடல் அசைவுகளாலும் தனது உணர்ச்சிகளை மிக சிறப்பாக வெளிப்படுத்திய வாகித்-க்கு இந்த விருது வழங்கப்படுவதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு சாதாரண நேர்மையான குடிமகன் போராடும் நிலையில் அவனது இயலாமை மற்றும் கவனத்தை கவரும் அவரது முயற்சி ஆகியவற்றால் இந்த பாத்திரம் உச்சத்தை எட்டுகிறது.

ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ் படத்தில் நடித்த டேனியலா மார்ட்டின் நவரோவுக்கு சிறந்த நடிகை்காக சில்வர் பீக்காக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பானிஷ் மொழி திரைப்படமான ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்-இல் 16 வயது பெண் ஈவா-வாக  நடித்த 19 வயது அறிமுக நடிகையான டேனியலா மார்ட்டின் நவரோவுக்கு சிறந்த நடிகை்காக சில்வர் பீக்காக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கணிக்க சிரமமான இளமைப் பருவத்தின் நுணுக்கங்களை லாவகமாகவும், புதுமைத்தன்மையுடனும், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் தனது பாத்திரப் படைப்பை உணர்ந்து நடித்திருப்பதற்காக டேனியலா மார்ட்டின் நவரோவுக்கு சிறந்த நடிகை்காக விருது வழங்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் வேறொன்றும் இருக்கிறது. இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது ஏற்கனவே லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவிலும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் குழுவின் சிறப்பு விருது வென் த வேவ்ஸ் ஆர் கான் படத்தை இயக்கிய ஃபிலிப்பினோ திரைப்பட இயக்குநர் லாவ் டயாசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவினரின் சிறப்பு விருது வென் த வேவ்ஸ் ஆர் கான் படத்தை இயக்கிய ஃபிலிப்பினோ திரைப்பட இயக்குநர் லாவ் டயாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் காட்சிகள் மூலம் கதை சொல்லும் உத்தியும், கட்டுப்படுத்தப்பட்டுள்ள வசனங்களின் அளவும், உணர்வுகளையோ, உச்சக்கட்ட ஆத்திரத்தையோ வெளிப்படுத்துவதில் எந்த குறையும் வைக்கவில்லை என்கிறது தேர்வுக் குழு.

இந்த திரைப்படத்தின் கதைப்படி ஃபிலிப்பைன்சின் புலனாய்வாளர் தனது இருண்ட கடந்த காலத்திற்கும், இன்றைய நிகழ்காலத்திற்கும் இடையே தத்தளித்து தவிக்கும் நிலையை விளக்குவதாக அமைந்துள்ளது. குற்ற உணர்வு, நிம்மதியின்மையை எதிர்கொண்டு அவற்றிலிருந்து விடுபட நினைக்கும் கதாநாயகனின் போராட்டமாக இது திரையில் விரிகிறது.

சிறந்த அறிமுக இயக்குநராக பிஹைன்ட் த ஹேஸ்டேக்ஸ் திரைப்படத்தை இயக்கிய அசிமினா ப்ரோட்ரூவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் முதல்முறையாக 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிஹைன்ட் த ஹேஸ்டேக்ஸ் திரைப்படத்தை இயக்கிய அசிமினா ப்ரோட்ரூவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியாகி விட்ட நேர்மைத்தன்மை, அகதிகள் பிரச்சினையால் ஏற்படக் கூடிய உள்ளூர வளர்ந்து நிற்கும் வெறுப்பு, இளமைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது ஏற்படக்கூடிய புரிதல் ஆகியவற்றின் உளவியல் ரீதியான வெளிப்பாடாக இந்த திரைப்படம் அமைந்திருக்கின்றது என்று தேர்வுக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது. கணவன், மனைவி மற்றும் அவர்களது மகள் ஆகிய மூவரும் தங்கள் செயலுக்காக தர வேண்டிய விலையை தங்கள் வாழ்வில் முதல்முறையாக பெருஞ்சிக்கலை எதிர்கொள்கையில் உணர்கிறார்கள்.

சினிமா பந்தி திரைப்படத்தின் இயக்குநர் பிரவீன் கண்ட்ரேகுலா தேர்வுக் குழுவினரின் சிறப்பு  கவனத்தை ஈர்த்துள்ளார்.

சினிமா பந்தி திரைப்படத்தின் இயக்குநர் பிரவீன் கண்ட்ரேகுலா தேர்வுக் குழுவினரின் சிறப்பு  கவனத்தை ஈர்த்துள்ளார். வறுமையில் வாடும் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு திடீரென விலையுயர்ந்த கேமரா ஒன்று கிடைக்கிறது. அதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநராக இருந்த அவர் திரைப்பட இயக்குநராக உருவெடுக்கிறார் என்பதாக இந்த படத்தின் கதை பயணிக்கிறது. இந்தியாவில் சினிமா மீதான மோகத்தையும், ஆர்வத்தையும் வெள்ளித்திரையில் காட்டும் படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது என்று தேர்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

ஆக, கண்களை மட்டுமின்றி கருத்தையும் நிறைத்த இந்த ஒளி ஓவியங்களை கண்டு, இவற்றில் சிறந்தவை என்று இந்திய மற்றும் உலக திரைப்படங்களிலிருந்து தேர்ந்தெடுத்தவர்கள் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டாமா..? சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழுவிற்கு இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாஃபிட் தலைமை ஏற்றார். இந்த குழுவில் இதர தேர்வுக் குழு உறுப்பினர்களாக அமெரிக்க தயாரிப்பாளர் ஜிங்கோ கொடோ, ஃப்ரெஞ்சு திரைப்பட தொகுப்பாளர் பாஸ்கல் சவன்சே, ஃப்ரெஞ்சு ஆவணப்பட இயக்குநர், திரை விமர்சகர் மற்றும் பத்திரிகையாளருமான சேவியர் ஆங்குலோ பார்ட்டுரன் மற்றும் இந்திய திரைப்பட இயக்குநர் சுதிப்தோ சென் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

**********



(Release ID: 1879630) Visitor Counter : 172