பிரதமர் அலுவலகம்

தீவிரவாதத்திற்கான நிதியைத் தடுப்பது குறித்து புதுதில்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் அளவிலான மூன்றாவது மாநாட்டில் பிரதமரின் உரை

Posted On: 18 NOV 2022 10:39AM by PIB Chennai

எனது அமைச்சரவை நண்பர் திரு அமித் ஷா அவர்களே, பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள பிரமுகர்களே, உலகெங்கும் உள்ள புலனாய்வு முகமைகள், பாதுகாப்பு அமைப்புகளின் உறுப்பினர்களே, எனது அருமை நண்பர்களே!

தீவிரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுப்பது குறித்த அமைச்சர்கள் அளவிலான மூன்றாவது மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெறுகிறது. தீவிரவாதத்தின் அபாயத்திற்கு  உலக நாடுகள் உரிய முக்கியத்துவம் அளிப்பதற்கு பல காலம் முன்பே எங்கள் நாடு அதை சந்தித்து வருகிறது. பல தசாப்தங்களாக பல்வேறு பெயர்கள் மற்றும் வடிவங்களில் தீவிரவாதம் இந்தியாவை அச்சுறுத்த முயன்றது. ஆயிரக்கணக்கான விலைமதிப்பிலான உயிர்களை நாங்கள் இழந்துள்ளோம், எனினும் தீவிரவாதத்தை எதிர்த்து நாங்கள் துணிச்சலாக போராடி உள்ளோம்.

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் உறுதியுடன் இருக்கும் நாடு மற்றும் அதன் மக்களுடன் உரையாடும் வாய்ப்பை பிரதிநிதிகள் குழுவினர் பெற்றுள்ளனர். ஒற்றை தாக்குதலையும் எண்ணற்றவைகளுக்கு ஒப்பாக நாங்கள் கருதுகிறோம். இழந்த ஒரு உயிர் கூட பல உயிர்களுக்கு சமம். எனவே தீவிரவாதத்தை வேரோடு ஒழிக்கும் வரை ஓய மாட்டோம்.

நண்பர்களே,

இது மிகவும் முக்கியமான கூட்டம். அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டமாக மட்டுமே இதை கருதக்கூடாது. ஏனென்றால் ஒட்டு மொத்த மனித சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தலைப்பு, இது. ஏழைகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் தீவிரவாதத்தின் நீண்ட கால தாக்கம் பெறும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுற்றுலாவாகட்டும் அல்லது வர்த்தகமாகட்டும், தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும் பகுதியை ஒருவரும் விரும்புவதில்லை. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை வேரிலிருந்து களைவது மிகவும் முக்கியம்.

நண்பர்களே,

இன்றைய சூழலில், தீவிரவாதத்தின் அபாயங்கள் குறித்து உலகிற்கு ஒருவர் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை. இருந்த போதும் ஒரு சில பிரிவுகளில் தீவிரவாதம் குறித்த தவறான எண்ணங்கள் இன்னும் நீடிக்கின்றன. வெவ்வேறு தாக்குதல்களுக்கான வெளிப்பாடின் தீவிரம் அது நடத்தப்படும் இடத்தைப் பொறுத்து மாறுபடாது. அனைத்து தீவிரவாத தாக்குதல்களும் சம அளவில் எதிர்க்கப்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைத் தடுப்பதற்காக அவ்வப்போது தீவிரவாதத்திற்கு ஆதரவாக மறைமுகமான வாதங்களும் நடைபெறுகின்றன. சர்வதேச அச்சுறுத்தல்களை சந்திக்கும் போது தெளிவற்ற அணுகுமுறைக்கு ஒரு போதும் இடமில்லை‌. அது, மனித சமூகம், சுதந்திரம் மற்றும் நாகரீகத்தின் மீதான தாக்குதல். அதற்கு எல்லைகளே கிடையாது. ஒரே சீரான, ஒருங்கிணைந்த, முற்றிலும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையால் மட்டுமே தீவிரவாதத்தை வெல்ல முடியும்.

நண்பர்களே,

தீவிரவாதியை எதிர்ப்பதும், தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதும், இரண்டு வெவ்வேறு விஷயங்கள். ஒரு தீவிரவாதியை ஆயுதங்களால் வலிமை இழக்கச் செய்ய முடியும். போர்த்திறன் சார்ந்த உடனடி தாக்குதல்கள் செயல்பாட்டு விஷயமாக இருக்கக்கூடும். எனினும் அவர்களது நிதியைத் தடுக்காமல் மேற்கொள்ளப்படும் இது போன்ற பதிலடிகள் விரைவில் பலனற்று போகும். தீவிரவாதி என்பது ஒரு தனி நபர். ஆனால் தீவிரவாதம் என்பது தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் சேர்ந்த ஓர் இணைப்பு. தீவிரவாதத்தை வேரிலிருந்து ஒழிப்பதற்கு மிகப்பெரிய ஆக்கப்பூர்வமான பதிலடிகள் அவசியம். நம் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் நம் வீடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் ஏற்படும் வரை நம்மால் காத்திருக்க இயலாது. நாம் தீவிரவாதிகளை விரட்டியடித்து, அவர்களுக்கு ஆதரவளிக்கும் இணைப்புகளைத் தகர்த்து, அவர்கள் நிதியை முடக்க வேண்டும்.

நண்பர்களே,

பல்வேறு ஆதாரங்களின் வாயிலாக தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் கிடைப்பது என்பது அனைவரும் அறிந்ததே. நாட்டின் ஆதரவு என்பது ஒரு ஆதாரம். ஒரு சில நாடுகள் தங்களது வெளிநாட்டு கொள்கையின் ஒரு பகுதியாக தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கின்றன. அதுபோன்ற நாடுகள் அரசியல், சித்தாந்தம் மற்றும் நிதி ஆதரவை வழங்குகின்றன. போர் நடைபெறவில்லை என்பதால் அமைதி நிலவுகிறது என்று சர்வதேச அமைப்புகள் நினைக்கக் கூடாது. நிழல் போர்களும் அபாயமானவை மற்றும் உக்கிரமானவை. தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். தீவிரவாதிகளுக்காக அனுதாபத்தை உருவாக்கும் அமைப்புகளும், தனி நபர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இது போன்ற விஷயங்களில் எந்த ஒரு நிபந்தனையும் இருக்கக்கூடாது. தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அனைத்து விஷயங்களுக்கு எதிராகவும் உலகம் இணைந்து செயல்பட வேண்டும்.

நண்பர்களே,

முறைப்படுத்தப்பட்ட குற்றம் என்பது தீவிரவாதத்திற்கு நிதி அளிக்கும் ஆதாரங்களுள் ஒன்று. இத்தகைய குற்றங்களை தனிமைப்படுத்தி பார்க்கக் கூடாது. இந்தக் குழுக்கள் பெரும்பாலும் தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் கடத்தல்களின் வாயிலாக பெறப்படும் தொகை தீவிரவாத செயல்களுக்கு செலவிடப்படுகிறது. போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு உதவிகளையும் இந்த குழுக்கள் வழங்குகின்றன. தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முறைப்படுத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பது மிக முக்கியம். பண மோசடி மற்றும் நிதி சார்ந்த குற்றங்களும் அவ்வப்போது தீவிரவாதத்திற்கு பணம் வழங்க உதவுவதாக கருதப்படுகிறது. உலகளாவிய ஒற்றுமையோடு நாம் இதனை எதிர்க்க வேண்டும்.

நண்பர்களே,

இத்தகைய சவாலான சூழலில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, நிதி செயல்பாட்டு பணிக்குழு, நிதி உளவுப் பிரிவுகள் மற்றும் எக்மாண்ட் குழு ஆகியவை சட்ட விரோத பணவரத்தின் தடுப்பு, கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கின்றன. கடந்த இரண்டு தசாப்தங்களாக பல்வேறு வழிகளில் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இது உதவுகிறது. தீவிரவாதத்திற்கு பணம் அளிப்பதன் அபாயம் குறித்து புரிந்து கொள்ளவும் இது ஏதுவாக உள்ளது.

நண்பர்களே,

தற்போது தீவிரவாதத்தின் ஆற்றல் மாறி வருகிறது. விரைவான மேம்பட்ட தொழில்நுட்பம், சவாலாகவும், தீர்வாகவும் திகழ்கின்றது. தீவிரவாத நிதி மற்றும் பணியமர்த்தலுக்கு புதிய வகையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பிரத்யேக இணைப்புகள், தனிபட்ட ரூபாய் உள்ளிட்ட சவால்கள் அதிகரிக்கின்றன. புதிய நிதி தொழில்நுட்பங்கள் குறித்த சீரான புரிதல் அவசியமாகிறது. இந்த முயற்சிகளில் தனியார் துறையை ஈடுபடுத்துவதும் முக்கியம். சீரான புரிதலில் இருந்து ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வளர்ச்சி அடையும். எனினும் ஒரு விஷயத்தில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். தொழில்நுட்பத்தை  பொல்லாத அச்சுறுத்தலாக சித்தரிக்க கூடாது. மாறாக தீவிரவாதத்தைக் கண்டறிந்து, கண்காணித்து, எதிர்கொள்வதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் .

நண்பர்களே,

இன்று நிஜ உலகத்தில் மட்டுமல்லாமல் காணொலி உலகத்திலும் ஒற்றுமை தேவை. சைபர் தீவிரவாதம் மற்றும் இணைய வழி பயங்கரவாத செயல்களில் பயன்படுத்தப்படும் உள்கட்டமைப்பு பரந்து விரிந்துள்ளது. தொலைதூரப் பகுதிகள் மற்றும் இணையவழியில் ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் தொலைத்தொடர்பு, சுற்றுலா போக்குவரத்து என சங்கிலியின் பல இணைப்புகள் செயல்படுகின்றன. சங்கிலியின் பகுதிகளுக்கு எதிராக ஒவ்வொரு நாடும் தங்களால் இயன்றவரை போராட வேண்டும்.

நண்பர்களே,

பல நாடுகள் தங்களுக்கென பிரத்தியேக சட்ட கோட்பாடுகள், நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. இறையாண்மை கொண்ட நாடுகள் தங்களது அமைப்புமுறைகளின் மீது உரிமை கொண்டுள்ளன. எனினும் அமைப்புமுறைகளுக்கு இடையிலான வேறுபாட்டை பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். அரசுகளுக்கு இடையே ஆழ்ந்த புரிதல் மற்றும் ஒருங்கிணைப்பு வாயிலாக இதனைத் தடுக்க முடியும். கூட்டு முயற்சிகள், உளவுப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் குற்றவாளிகளை ஒப்படைத்தல் முதலியவை தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உதவிகரமாக இருக்கும். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத பிரச்சனைகளை நாம் இணைந்து எதிர்கொள்வதும் முக்கியம். தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பவருக்கு எந்த ஒரு நாட்டிலும் இடம் தரக் கூடாது.

நண்பர்களே,

கடந்த சில மாதங்களில் பாதுகாப்பின் பல்வேறு பரிமாணங்கள் சம்பந்தமாக இந்தியாவில் ஏராளமான மாநாடுகள் நடைபெற்றுள்ளன. புதுதில்லியில் இன்டர்போலின் பொதுக் கூட்டத்தை இந்தியா நடத்தியது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீவிரவாதத்திற்கு எதிரான குழுவின் சிறப்பு அமர்வு மும்பையில் நடைபெற்றது. ‘தீவிரவாதத்திற்கு பணம் வழங்கக்கூடாது’ என்ற இந்த மாநாட்டில் தீவிரவாத நிதிக்கு எதிரான உலகளாவிய உத்வேகத்தை கட்டமைக்க இந்தியா உதவுகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான போரை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உலகை ஒன்றிணைப்பது தான் எங்கள் நோக்கம்.

நண்பர்களே,

அடுத்த சில நாட்களில் ஆக்கபூர்வமான கருத்துக்கள் எழுந்திட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதத்திற்கு பணம் வழங்கப்படுவதை எதிர்த்து அனைத்து பரிமாணங்களிலும் நீங்கள் போராடுவீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நன்றி.

மிக்க நன்றி,

(Release ID: 1876915)

**************

MSV/RB/KRS(Release ID: 1877021) Visitor Counter : 581