பிரதமர் அலுவலகம்

பாலியில் ஜி-20 மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 16 NOV 2022 12:58PM by PIB Chennai

மேன்மை தங்கியவர்களே,

நண்பர்களே,

எனது நண்பர் அதிபர் ஜோக்கோவி-க்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கடினமான தருணங்களில் கூட ஜி-20 அமைப்பில் மிகச் சிறந்த தலைமைத்துவத்தை அவர் அளித்துள்ளார். மேலும், பாலி தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதற்காக ஜி-20 உறுப்பினர்களுக்கு நான் இன்று வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி-20 தலைமைத்துவத்தின் போது இந்தோனேஷியாவின்  பாராட்டத்தக்க முயற்சிகளை இந்தியா அடுத்த கட்டத்துக்கு செல்ல பாடுபடும். புனித பாலித்தீவில் நாங்கள் ஜி-20 தலைமைத்துவத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டது இந்தியாவுக்கு மிகவும் மங்களகரமான  தற்செயலான நிகழ்வாகும். இந்தியாவிற்கும் பாலிக்கும் இடையே பழமையான தொடர்பு உள்ளது.

மேன்மை தங்கியவர்களே,

புவி அறிவியல் பதற்றங்கள், பொருளாதார வீழ்ச்சி,  உணவு மற்றும் எரிசக்திப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள நீண்டகால விளைவுகள் என  உலகம் ஒரே நேரத்தில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் போது இந்தியா ஜி-20 அமைப்பின் பொறுப்பை ஏற்றுள்ளது. அதே நேரத்தில் நம்பிக்கையுடன் ஜி-20 அமைப்பை உலகம் உற்று நோக்குகிறது. இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் உள்ளடக்கியதாகவும், லட்சியமானதாகவும், தீர்க்கமானதாகவும், நடவடிக்கை சார்ந்ததாகவும் இருக்கும் என்று நான் இன்று உறுதியளிக்க விரும்புகிறேன்.

மேன்மை தங்கியவர்களே,

அடுத்த ஒரு ஆண்டுக்குள் புதிய சிந்தனைகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் உலகின் முக்கிய பங்குதாரராக ஜி-20 வகிப்பதை உறுதி செய்ய நாங்கள் முயற்சிப்போம். இயற்கை ஆதாரங்கள் மீதான முதலாளித்துவ உணர்வு இன்று மோதலை ஏற்படுத்துகிறது.  சுற்றுச்சூழலின் கேடுக்கும் முக்கிய காரணமாக  அது உள்ளது. புவியின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு நம்பிக்கை உணர்வே தீர்வாகும். சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம் இதற்கு பெரிய  பங்களிப்பை அளிக்க முடியும். நீடித்த வாழ்க்கை முறையை மக்கள் இயக்கமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

மேன்மை தங்கியவர்களே,

இன்று வளர்ச்சியின் பயன்கள், உலகளாவியதாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருப்பது அவசியமாகும். கருணையுடனும், ஒற்றுமையுடனும் அனைத்து மனித சமுதாயத்திற்கும் வளர்ச்சியின் பயன்களை நாம்  விரிவுபடுத்த வேண்டும். மகளிர் பங்களிப்பின்றி உலகளாவிய வளர்ச்சி சாத்தியமில்லை. நம்முடைய ஜி-20 அமைப்பின் திட்டமிடல்களில்கூட, மகளிர் தலைமையிலான வளர்ச்சிக்கு நாம் முன்னுரிமை தொடர்ந்து அளிக்க வேண்டும். அமைதி  மற்றும் பாதுகாப்பின்றி நம்முடைய தலைமுறையினர்  பொருளாதார வளர்ச்சி அல்லது தொழில்நுட்ப புதுமைக் கண்டுபிடிப்புகளின் பயன்களைப் பெற இயலாது. அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்து ஜி-20 அமைப்பு தீர்க்கத்துடன் தெரிவிக்க வேண்டும். இந்த முன்னுரிமைகள் அனைத்தும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் – “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற கருப்பொருளில் முழுமையாக அடங்கியுள்ளது.

ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ள இத்தருணம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையளிக்கிறது. எங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நடத்துவோம். பெருமைமிக்க பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட இந்தியாவின் சிறப்பான பன்முகத்தன்மையை எங்களுடைய விருந்தினர்கள் முழுமையாக உணர்வார்கள். ‘ஜனநாயகத்தின் தாய் என்ற இந்தியாவின் தனித்துவக் கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உலகளாவிய மாற்றத்திற்கான காரணியாக ஜி-20 அமைப்பை நாம் ஒன்றாக இணைந்து உருவாக்குவோம்.

மிக்க நன்றி!

-----

(Release ID: 1876366)

MSV/IR/KPG/KRS



(Release ID: 1876496) Visitor Counter : 149