பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்


"ஆந்திரப் பிரதேச மக்கள் ஒவ்வொரு துறையிலும் முக்கியமான பெயரை தாங்களாகவே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்"

"வளர்ச்சியின் பாதை என்பது பன்முகத்தன்மை கொண்டது. சாமானிய மக்களின் தேவைகளை அது கவனத்தில் கொள்கிறது. நவீன அடிப்படை கட்டமைப்புக்கான வரைபடத்தை உருவாக்குகிறது"

"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு என்பது எங்களின் தொலைநோக்காகும்"

"தேசியப் பெருந்திட்டமான பிரதமரின் விரைவு சக்தி, அடிப்படைக் கட்டமைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது மட்டுமின்றி திட்டங்களின் செலவையும் குறைக்கிறது"

"முதன்முறையாக நீலப் பொருளாதாரம் இவ்வளவு பெரிய முன்னுரிமையைப் பெற்றிருக்கிறது"

Posted On: 12 NOV 2022 12:16PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

விப்ளவ் வீருடு அல்லூரு சீதாராம் ராஜுவின் 125 ஆவது ஆண்டு விழாவின் போது ஆந்திரப் பிரதேசத்திற்குப்  பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை தான் பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து பிரதமர் தமது உரையைத்  தொடங்கினார். விசாகப்பட்டினம் என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்று குறிப்பிட்ட பிரதமர், இது வர்த்தகம் மற்றும் வணிகத்தின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆசியாவிற்கும் ரோம் நகருக்கும் வர்த்தகப் பாதையின் ஒரு பகுதியாக இருந்ததையும்  பண்டைய இந்தியாவில் விசாகப்பட்டினம் முக்கிய துறைமுகமாக இருந்ததையும்  அவர் சுட்டிக்காட்டினார்.  இன்று ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதும் அர்ப்பணித்ததும் விசாகப்பட்டினம் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் நம்பிக்கைகளை,  விருப்பங்களை அடைவதற்கும், அடிப்படைக்  கட்டமைப்பில் புதிய பரிமாணங்கள், வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், தற்சார்பு இந்தியா ஆகியவற்றுக்கும் ஒரு வழியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா  நாயுடு பற்றிப் பேசிய பிரதமர்,  ஆந்திரப் பிரதேசத்திற்கான அவரது அன்பும் அர்ப்பணிப்பும் எப்போதும்  இணையற்றது என்றார்.

கல்வி அல்லது தொழில்முனைதல், தொழில்நுட்பம் அல்லது மருத்துவப் பணி என ஒவ்வொரு துறையிலும்  முக்கியமான பெயரை ஆந்திரப் பிரதேச மக்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். இன்று அடிக்கல் நாட்டப்பட்டு அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இது மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் என்றார்.

"இந்த 'அமிர்த காலத்தில்', 'வளர்ந்த இந்தியா' என்ற நோக்கத்துடன் நாடு வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது" என்று பிரதமர் கூறினார். வளர்ச்சிக்கான பாதை பல பரிமாணங்களைக்  கொண்டது என்று குறிப்பிட்ட பிரதமர், இது சாமானிய மக்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதாகவும், மேம்பட்ட உள்கட்டமைப்புக்கான வரைபடத்தை முன்வைப்பதாகவும் கூறினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அரசின் தொலைநோக்குப் பார்வை பற்றி அவர் எடுத்துரைத்தார். உள்கட்டமைப்பு மேம்பாட்டில்  முந்தைய அரசுகளின் தனிமைப்படுத்தப்பட்ட  அணுகுமுறை, பொருள்கள் கொண்டுசெல்லும்  செலவுகளை உயர்த்தியதோடு விநியோகத் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தியது என்று பிரதமர் வருத்தம் தெரிவித்தார். வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பார்வையில் கவனம் செலுத்தும் அதே வேளையில், விநியோகத்  தொடர் மற்றும் பொருள்கள் போக்குவரத்து பலவகை  இணைப்பைச் சார்ந்திருப்பதால், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான புதிய அணுகுமுறையை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இன்றைய திட்டங்களிலிருந்து வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பார்வைக்கு உதாரணம் அளித்த பிரதமர், உத்தேச பொருளாதார வழித்தட திட்டத்தில் 6 வழிச் சாலைகள், துறைமுக இணைப்புக்கான தனிச்  சாலை, விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை அழகுபடுத்துதல் மற்றும் மாநிலத்தின் நவீன மீன்பிடி துறைமுகம். கட்டுமானம் ஆகியவற்றைப் பட்டியலிட்டார். தேசியப் பெரும் திட்டமான  பிரதமரின் விரைவு சக்திக்கு வளர்ச்சியின் இந்த ஒருங்கிணைந்த பார்வை இருப்பதைப் பிரதமர் பாராட்டினார். மேலும் இது உள்கட்டமைப்பின் கட்டுமான வேகத்தை விரைவுபடுத்தியது மட்டுமின்றி  திட்டங்களின் செலவையும் குறைத்துள்ளது என்று குறிப்பிட்டார். "பல மாதிரியிலான போக்குவரத்து அமைப்பு ஒவ்வொரு நகரத்தின் எதிர்காலமாகும். விசாகப்பட்டினம் இந்த திசையில் ஒரு படி முன்னெடுத்துள்ளது" என்று அவர் மேலும் கூறினார். ஆந்திரப் பிரதேசமும் அதன் கடலோரப் பகுதிகளும் இந்த வளர்ச்சிப் போட்டியில் புதிய வேகத்துடனும் ஆற்றலுடனும் முன்னேறும் என்று அவர் கூறினார்.

 

தெளிவான இலக்குகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், ஆந்திரப் பிரதேசத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஆழ் கடல் ஆற்றல்  பிரித்தெடுக்கப்படுவதை உதாரணமாகக் கூறினார். நீலப் பொருளாதாரத்தில் அரசின் கவனத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "நீல பொருளாதாரம் முதல் முறையாக ஒரு பெரிய முன்னுரிமையாக மாறியுள்ளது," என்று அவர் கூறினார். மீனவர்களுக்கான விவசாயக் கடன் அட்டை, இன்று தொடங்கப்பட்ட விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுக நவீனமயமாக்குதல் போன்ற நடவடிக்கைகள் பற்றி அவர் குறிப்பிட்டார்.

பல நூற்றாண்டுகளாக, இந்தியாவின்  செழிப்புக்கான ஆதாரமாகக் கடல் உள்ளது என்றும், நமது கடற்கரைகள் இந்த செழுமைக்கான நுழைவாயிலாக செயல்பட்டதாகவும் பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டில் துறைமுகத்தை முதன்மைப்படுத்தி மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்றைக்குப் பிறகு மேலும் விரிவாக்கம் பெறும் என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

“21ஆம் நூற்றாண்டின் இந்தியா, வளர்ச்சியின் முழுமையான சிந்தனையை செயலுக்குக்  கொண்டுவருகிறது” என்று கூறி உரையை நிறைவு செய்த பிரதமர்,  நாட்டின் வளர்ச்சி இயக்கத்தில் ஆந்திரப் பிரதேசம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. ஒய்.எஸ்.ஆர். ஜெகன் ரெட்டி, ஆந்திரப் பிரதேச  ஆளுநர் திரு பிஸ்வ பூஷன் ஹரிசந்தன், மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆந்திரப் பிரதேச சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்புலம்

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை சுமார் 450 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்த நிலையம்  நாளொன்றுக்கு  75,000 பயணிகளுக்கு சேவை செய்யும் மற்றும் நவீன வசதிகளை வழங்குவதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்.

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்கவும் மேம்படுத்துவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். திட்டத்தின் மொத்தச் செலவு  ரூ. 150 கோடி.  மீன்பிடித் துறைமுகம், மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட பின்,  அதன் கையாளும் திறன் நாளொன்றுக்கு  150 டன்களில் இருந்து சுமார் 300 டன்களாக இரட்டிப்பாகும்.

*******

MSV/SMB/DL


(Release ID: 1875450) Visitor Counter : 196