பிரதமர் அலுவலகம்

பெங்களுரூவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

Posted On: 11 NOV 2022 3:09PM by PIB Chennai

பெங்களுரூவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தை  பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். விமான நிலையத்தின் 2-வது முனையத்தின் கட்டட அமைப்பு குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.  கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் அமைய பெற்றுள்ள பல்வேறு அடிப்படை வசதிகளை பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். விமான நிலையத்தின் 2-வது முனையம் தொடர்பான ஒரு குறும்படத்தையும் பிரதமர் கண்டுகளித்தார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

பெங்களுரூவின் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நமது நகர்ப்புற மையங்களில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதே  எங்களின் நோக்கம். இது சம்பந்தமாக நாங்கள் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக  இந்த விமான நிலையத்தின் 2-வது முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த இரண்டாவது   முனையம் மிகவும் அழகாகவும், பயணிகளுக்கு ஏற்றவகையிலும் அமைந்துள்ளது. இதை தொடங்கிவைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

பின்னணி

 சுமார் ரூபாய் 5,000 கோடி மதிப்பில் பெங்களுரூவின் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையம்  உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டு ஒன்றுக்கு 2-5 கோடி பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த புதிய முனையம் மூலம், 5-6 கோடி பயணிகள் பயனடைவார்கள். அதாவது, சுமார் 2 மடங்கு பயணிகளின் போக்குவரத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது. “பூங்காவில் ஒரு பயணம்” என்ற கருப்பொருளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாக, பூங்கா நகரமான பெங்களுரூவில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த 2-வது முனையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விமான நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க  எரிச்சக்தியை 100 சதவீதம் பயன்படுத்துகின்றனர். கர்நாடகாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் வெளிப்படுத்தும் விதமாக 2-வது முனையத்தின் கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த 2-வது முனையத்தின் கட்டட அமைப்பு மற்றும் கட்டடக் கலையானது நான்கு முக்கிய நெறிமுறைகள்: பூங்கா, நிலைத்தன்மை, தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த 2-வது முனையம், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தாலும், இயற்கை எழில் கொஞ்சும் சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டு பயணிகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் திரு தவார் சந்த் கெலாட் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.

--------------

 AP/GS/RS/IDS



(Release ID: 1875240) Visitor Counter : 136