பிரதமர் அலுவலகம்

குஜராத்தின் ஜம்புகோடாவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை

Posted On: 01 NOV 2022 10:30PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

குஜராத் மற்றும் நம்நாடு முழுவதிலும் உள்ள பழங்குடி சமூகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள். சிறிது நேரத்திற்கு முன்பு நான் மன்கர் தாமில் இருந்தேன்.

மேலும் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்ச்சியில், மன்கர் தாமில் உள்ள கோவிந்த் குரு மற்றும்  ஆயிரக்கணக்கான பழங்குடி சகோதர, சகோதரி தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் பழங்குடியினரின் மகத்தான தியாகங்களுக்கு வணக்கம் செலுத்தும் வாய்ப்பைப் பெற்றேன். இப்போது நான் உங்களுடன் ஜம்புகோடாவில் இருக்கிறேன். பழங்குடி சமூகத்தின் மாபெரும் தியாகங்களுக்கு ஜம்புகோடா சாட்சியாக இருந்துள்ளது. ஷஹீத் ஜோரியா பரமேஷ்வர், ரூப் சிங் நாயக், கலலியா நாயக், ரவ்ஜிதா நாயக் மற்றும் பாபரியா கல்மா நாயக் போன்ற அழியாப்புகழ் பெற்ற தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு இன்று நமக்குக் கிடைத்துள்ளது. இன்று நாம் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான திட்டங்களுடன் அடிப்படை வசதிகளை விரிவுபடுத்துகிறோம். அதற்காக அடிக்கல் நாட்டப்படும் இந்த திட்டங்கள் பழங்குடி சமூகத்தின் பெருமையுடன் தொடர்புடையவை. கோவிந்த் குரு பல்கலைக்கழகத்தின் நிர்வாக வளாகம் மிகவும் அழகாக மாறிவிட்டது. மேலும் இந்தப் பகுதியில் கேந்திரிய வித்யாலயா அல்லது மத்தியப் பள்ளி நிறுவப்பட்டதன் மூலம், எனது வருங்கால சந்ததியினர் நாட்டின் கொடியை மிகவும் பெருமையுடன் உயர்த்துவார்கள். இந்தத் திட்டங்கள் அனைத்திற்கும் அதிக எண்ணிக்கையில் வந்துள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

 

 

சகோதர சகோதரிகளே,

ஜம்புகோடா எனக்குப் புதிதல்ல. எண்ணற்ற முறை இங்கு வந்திருக்கிறேன். நான் இந்த மண்ணுக்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்கு வந்ததைப் போன்ற உணர்வு ஏற்படும். ஜம்புகோடா மற்றும் முழு பிராந்தியத்திலும், 1857 புரட்சியில் ஒரு புதிய ஆற்றலைப் புகுத்திய நாய்க்டா இயக்கம், ஒரு புதிய உணர்வை வெளிப்படுத்தியது. பரமேஷ்வர் ஜோரியா ஜி இந்த இயக்கத்தை விரிவுபடுத்தினார், மேலும் ரூப் சிங் நாயக்கும் அவருடன் இணைந்தார்.

1857  புரட்சியின் போது முக்கியப் பிரமுகர்களில் ஒருவர் தாத்யா தோபே. ஆனால் தாத்யா தோபேயுடன் இணைந்து போராடியவர்கள் இங்குள்ள வீரபங்காவைச் சேர்ந்தவர்கள் என்பது பலருக்குத் தெரியாது.

அவர்களுக்கு தாய்நாட்டின் மீது அலாதியான தைரியமும், அன்பும் இருந்தது. குறைந்த வளங்கள் இருந்தபோதிலும், அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை உலுக்கினர். அவர்கள் தியாகங்களைச் செய்ய ஒருபோதும் தயங்கவில்லை. இந்த புனித ஸ்தலத்தின் முன், அதாவது மாவீரர்கள் தூக்கிலிடப்பட்ட மரத்தின் முன் தலைவணங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த பாக்கியம். 2012 ஆண்டில் நானும் அங்கு ஒரு புத்தகத்தை வெளியிட்டேன்.

 

நண்பர்களே,

குஜராத்தில் ஒரு முக்கியமான பணியை நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கினோம். பள்ளியில் படிக்கும் குழந்தைகளும், வரும் தலைமுறைகளும் தங்கள் முன்னோர்களின் வீர, தீரச் செயல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகளுக்கு தியாகிகளின் பெயரை வைக்கும் வழக்கம் தொடங்கப்பட்டது. அதன் விளைவாக, சந்த் ஜோரியா பரமேஸ்வரா மற்றும் ரூப் சிங் நாயக் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து வடேக் மற்றும் தந்தியபுரா பள்ளிகளை அழியாப்புகழ் பெறும் நோக்கில் மாற்றுகிறோம். இன்று இந்தப் பள்ளிகள் புதிய தோற்றம், அலங்காரம் மற்றும் நவீன வசதிகளுடன் தயாராக உள்ளன. மேலும் இன்று இரு பழங்குடியின மாவீரர்களின் பிரமாண்ட சிலைகளை இப்பள்ளிகளில் திறந்து வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த பள்ளிகள் இப்போது சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பழங்குடி சமூகத்தின் கல்வி மற்றும் பங்களிப்பின் ஒரு பகுதியாக மாறும்.

*********



(Release ID: 1873893) Visitor Counter : 104