பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஆர்சிலார் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் ஹசீரா ஆலையின் விரிவாக்க நிகழ்ச்சியில் காணொலி செய்தி வாயிலாக பிரதமரின் உரை

Posted On: 28 OCT 2022 5:06PM by PIB Chennai

வணக்கம்!

உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இந்த எஃகு ஆலை முதலீட்டை ஈர்ப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்கான பல்வேறு புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. சுமார் 60,000 கோடி ரூபாய் முதலீடு, குஜராத்திலும் நாட்டின் இதர பகுதிகளில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெருக்கும். இந்த ஆலையின் விரிவாக்கத்திற்குப் பிறகு இதன் ஆண்டு உற்பத்தித் திறன் 9 மில்லியன் டன்னிலிருந்து 15 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்.

நண்பர்களே,

விடுதலையின் அமிர்த காலத்தில் நுழைந்துள்ள நமது நாடு, 2047-ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதை நோக்கி மிகுந்த ஆர்வத்துடன் முன்னேறுகிறது. எஃகுத் துறை வலுவடைந்தால் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படும் என்பதால், நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் எஃகுத் துறையின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது. இன்று உலக நாடுகள் நம்மை மிகுந்த நம்பிக்கையோடு பார்க்கின்றன. உலகின் மிகப்பெரிய உற்பத்தி முனையமாக மாறுவதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறுகிறது. இதனால் இந்தத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கை சூழலியலை உருவாக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கூட்டு முயற்சியின் காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் எஃகுத்துறை உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தித் தொழில்துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தத் துறையில் வளர்ச்சிக்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன. தற்சார்பு இந்தியா' திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு அரசின் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் வழிவகை செய்துள்ளது. இதனால் உயர்தர எஃகு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, ஏற்றுமதிகள் மீதான நமது சார்பு குறைகிறது.

வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையோடு நாம் முன்னேறும் போது ஒரு சில சவால்களையும் சந்திக்க நேர்கிறது. கார்பன் வெளியீடு என்பது எஃகுத் துறைக்கு அது போன்ற ஒரு சவாலாகும். எனவே ஒரு புறம் கச்சா எஃகின் உற்பத்தித் திறனை நாம் விரிவுபடுத்தும் அதே வேளையில் மறுபுறம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் ஊக்குவித்து வருகிறோம். ஹசீரா ஆலை பசுமை தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எஃகுத் துறையைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதில் அரசு உறுதி பூண்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1871591

-----

(Release ID: 1871591)

Bagya/PKV/RR



(Release ID: 1872565) Visitor Counter : 128