பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாநில உள்துறை அமைச்சர்களின் ‘சிந்தனை அமர்வில்’ காணொலி வாயிலாக பிரதமரின் உரை

Posted On: 28 OCT 2022 6:33PM by PIB Chennai

வணக்கம்!

 

எனது அமைச்சரவை நண்பரான திரு அமித் ஷா அவர்களே, மாநிலங்களின் முதலமைச்சர்களே, உள்துறை அமைச்சர்களே, காவல்துறை தலைமை இயக்குநர்களே, உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

 

அரசியலமைப்பின்படி சட்டம் ஒழுங்கு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் அது சம்பந்தப்பட்டுள்ளது. சிராஜ்குண்டில் நடைபெற்று வரும் உள்துறை அமைச்சர்களின் இந்த சிந்தனை அமர்வு கூட்டுறவு கூட்டமைப்பின் மிகச்சிறந்த உதாரணமாகும். ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களில் இருந்து கற்றுக் கொண்டு ஊக்கம் பெற்று நாட்டின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்ற வேண்டும்.

 

நண்பர்களே,

 

விடுதலையின் அமிர்த காலம் நம் முன்னே உள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் அமிர்த தலைமுறைக்கு வித்திடும். ஐந்து உறுதிமொழிகளை உள்ளடக்கியதாக இந்த அமிர்த தலைமுறை உருவாக்கப்படும். வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பது, ஒவ்வொரு விஷயத்தில் உள்ள அடிமை போக்கிலிருந்தும் விடுதலை, நமது பாரம்பரியத்தைக் கண்டு பெருமை கொள்வது, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு இவற்றோடு மிக முக்கியமாக குடிமக்கள் பணி ஆகிய ஐந்து உறுதிமொழிகளின் அவசியத்தை நீங்கள்  உணர்வீர்கள். அனைவரின் முயற்சியால் மட்டுமே இவற்றை அடைய முடியும்.

 

நண்பர்களே,

 

சட்டம் ஒழுங்கு என்பது மாநில வளர்ச்சியுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. எனவே உங்களது முடிவுகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் முதலியவை மாநில வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு மிக முக்கியம். கொரோனா காலத்தில் காவல்துறை மீதான நம்பிக்கையில் ஏற்பட்ட அபரிமிதமான முன்னேற்றத்தை நாம் அனைவரும் கண்டோம். எனினும் நேர்மறையான சிந்தனையைத் தொடர்ந்து நிலைநாட்டுவது அவசியமாகிறது.

 

சட்டம் ஒழுங்கு என்பது தற்போது ஒரு மாநிலத்தின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே வருவது இல்லை. மாநிலங்கள் இடையேயும், சர்வதேச அளவிலும் தற்போது குற்றங்கள் நடைபெறுகின்றன. தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு மாநிலத்தில் அமர்ந்து கொண்டு மற்றொரு மாநிலத்தில் குற்ற செயல்கள் நடைபெறுகின்றன. எல்லைகளைக் கடந்தும் தொழில்நுட்பத்தை குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, ஒவ்வொரு மாநிலத்தின் முகமைகள் மற்றும் மத்திய, மாநில முகமைகள் இடையே ஒத்துழைப்பு ஏற்படுவது மிக முக்கியம்.

 

உங்களது முயற்சிகள் அனைத்திற்கும் இந்திய அரசு துணை நிற்கும் என்று மாநில முதல்வர்களுக்கும், உள்துறை அமைச்சர்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

 

**************




(Release ID: 1871976) Visitor Counter : 170