பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

“கூட்டுறவு கூட்டாட்சியின் பிரதானமான உதாரணம் சிந்தனை அமர்வு”
“ஐந்து உறுதிமொழிகள் சிறந்த நிர்வாகத்திற்கான வழிகாட்டும் சக்தியாக இருக்க வேண்டும்”
“திறன்மிக்க தொழில்நுட்பத்துடன் உதவியுடன் சட்டம் ஒழுங்கு நடைமுறையை மேம்படுத்தலாம்”
“சட்டம் ஒழுங்கை பராமரித்தல் 24 மணி நேர பணியாகும்”
“யூஏபிஏ போன்ற சட்டங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான போரில் நடைமுறைக்கு வலுசேர்க்கிறது”
“ ‘ஒரே நாடு, ஒரே காவல்துறை சீருடை’ சட்ட அமலாக்கத்திற்கு பொதுவான அடையாளத்தை அளிக்கும்”
“போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க தொழில்நுட்ப மேம்பாட்டை நாம் கடைப்பிடிக்க வேண்டும்”
“துப்பாக்கிகளுடனோ, பேனாக்களுடனோ மேற்கொள்ளப்படும் தீவிரவாதத்தின் அனைத்து வடிவமும் வேரறுக்கப்பட வேண்டும்”
“திறனுடன் சம்மந்தப்பட்டது என்பதால் காவல்துறை வாகனங்கள் பழையதாக இருக்கக்கூடாது”

Posted On: 28 OCT 2022 12:12PM by PIB Chennai

மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.

 இதில் உரையாற்றிய பிரதமர், பண்டிகைக் காலங்களில் அமைதியான சூழல் நிலவ பாடுபட்ட சட்டம் ஒழுங்கு பணியாளர்களைப் பாராட்டினார். கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு சிந்தனை அமர்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். அரசியலமைப்பு சட்டத்தின் படி, சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பாக இருந்தாலும், அவை நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் சமமான அளவில் தொடர்புடையவை என்று பிரதமர் கூறினார். "ஒவ்வொரு மாநிலமும்  பிற மாநிலத்திடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், ஒவ்வொருவரிடமிருந்தும் உத்வேகத்தைப் பெற வேண்டும், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும், இதுதான் அரசியலமைப்பின் உணர்வு என்பதுடன், நாட்டு மக்கள் மீது நமக்குள்ள பொறுப்பும் ஆகும்" என்று அவர் கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் அமிர்த காலத்தைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அமிர்த காலத்தின் போது, ​​‘ஐந்து உறுதிமொழிகளின்’ சாரத்தை கொண்டு செல்லும் அமிர்த தலைமுறை உருவாகும் என்றார். "ஐந்து உறுதிமொழிகள்" நல்லாட்சிக்கு வழிகாட்டும் சக்தியாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

நாட்டின் வலிமை அதிகரிக்கும் போது, ​​நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் சக்தியும் ஏற்றம் பெறும் என்று பிரதமர் கூறினார். ஒவ்வொரு மாநிலத்திலும் கடைசி நபருக்கும் பலன்கள் சென்றடையும் நல்லாட்சி இது என்று கூறிய பிரதமர், சட்டம்-ஒழுங்கு முறைக்கும், மாநிலங்களின் வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கினார்.  “ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு அமைப்பு நம்பகமானதாக இருப்பது மிகவும்  அவசியமாகும். மக்களிடம் இதன் நம்பகத்தன்மையும், அணுகுமுறையும் மிகவும் முக்கியமாகும்" என்று அவர் கூறினார். இயற்கை பேரிடர் காலங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும்  மாநில தேசிய மீட்பு படையின் வளர்ந்து வரும் அடையாளம் பற்றி அவர் குறிப்பிட்டார். அதேபோன்று, குற்றம் நடந்த இடத்திற்கு காவல்துறையின் வருகை அரசின் வருகையாக கருதப்படுகிறது.  மேலும் கொரோனா காலத்திலும், காவல்துறைக்கு கிடைத்த நற்பெயர் ஊக்கம் அளிப்பதாக இருந்தது என்று பிரதமர் கூறினார். எளிதில் அணுகக் கூடியதாகவும், அர்ப்பணிப்பு  உள்ளதாகவும்   காவல் துறை  திகழ்கிறது என்ற கருத்து மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவ்விஷயத்தில் அவர்களை வழிநடத்துவது நமது தொடர்ச்சியான செயல்பாடாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 குற்றங்கள் உள்ளூர் அளவில் நடப்பதாக இனி கருதப்பட மாட்டாது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச  அளவிலான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பிரதமர்  கூறினார். அதனால்தான், மாநில முகமைகளுக்கிடையேயும், மத்திய மற்றும் மாநில முகமைகளுக்கிடையிலும் பரஸ்பர ஒத்துழைப்பும் முக்கியமானதாகும். இணையவெளி குற்றங்கள் அல்லது ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு ட்ரோன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், அச்சுறுத்தலைச் சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அரசு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "திறன்மிகு  தொழில்நுட்பத்தின் உதவியுடன் சட்டம் ஒழுங்கு முறையை மேம்படுத்த முடியும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். 5ஜி, அதன் பலன்களுடன், அதிக விழிப்பூட்டலின் அவசியத்தைக் கொண்டுவருகிறது என்று கூறிய பிரதமர், இந்த தொழில்நுட்பம் சாதாரண மக்கள் மத்தியில் பாதுகாப்பு மீது நம்பிக்கையை அதிகரிக்கும் என்பதால், பட்ஜெட்டின் கட்டுப்பாடுகளைத் தாண்டி, தொழில்நுட்பத்தின் தேவையை முதலமைச்சர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்கள் தீவிரமாக மதிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மத்திய அரசின் காவல் தொழில்நுட்பத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இருப்பினும், பல்வேறு மாநிலங்களின் பல்வேறு தொழில்நுட்பங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதில்லை என்பதால், ஒரு பொதுவான தளத்தின் அவசியம் பற்றி வலியுறுத்தினார். "நாம் நாடு தழுவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும், நமது சிறந்த நடைமுறைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாகவும், இயங்கக்கூடியதாகவும்  உள்ள ஒரு பொதுவான இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். தடய அறிவியலில் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முழுப் பயனையும் மாநில முகமைகள் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சீர்திருத்தங்களை மேற்கோள் காட்டிய பிரதமர், நாட்டில் அமைதியான சூழலைப் பேணுவதற்கு கடந்த சில ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு அமைப்பை வலுப்படுத்துவதற்கான பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "சட்டம் ஒழுங்கை பராமரிப்பது 24 மணி நேர இடையறாத பணி" என்று அவர் கூறினார். இதன்  செயல்பாடுகளில் முன்னேற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் இருப்பது அவசியம் என்று அவர் கூறினார். இந்த திசையில் ஒரு படியாக கம்பெனிகள் சட்டத்தில் உள்ள பல  குற்றங்களை நீக்கியுள்ளதை குறிப்பிட்ட அவர், காலத்திற்கு ஒவ்வாத விதிகள் மற்றும் சட்டங்களை மதிப்பீடு செய்து அகற்றுமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசு இயற்றியுள்ள சட்டங்களில் ஊழல், பயங்கரவாதம் மற்றும் ஹவாலா போன்றவற்றை கடுமையாக கையாள வகைசெய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த சட்டம் போன்ற சட்டங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான போரில் நடைமுறை செயல்பாட்டுக்கு பலத்தை அளித்துள்ளன" என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். இது தரமான தயாரிப்புகளை தரம் வாய்ந்ததாக உறுதி செய்வதுடன் மட்டுமல்லாமல் சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும், இதன் மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். அதே நேரம் மாநிலங்கள் தங்கள் எண் அல்லது சின்னங்களைக் கொண்டிருக்கலாம். "ஒரே நாடு, ஒரே காவல்துறை சீருடை" என்பதை உங்கள் கவனத்திற்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்", என்றார். இதேபோல், சுற்றுலா தொடர்பாக காவல் துறைக்கான சிறப்புத் திறன்களை மேம்படுத்துவது குறித்தும் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். சுற்றுலாப் பயணிகளே ஒரு இடத்தின் சிறப்பை பரப்புவதற்கான மிகப்பெரிய தூதர்கள் என்று அவர் கூறினார்.

உணர்திறன் மற்றும் தனிப்பட்ட தொடர்பை வளர்ப்பதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். தொற்றுநோய்களின் போது மக்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக காவல்துறை மேற்கொண்ட பணிகளை அவர் குறிப்பிட்டார்.  தொழில்நுட்ப நுண்ணறிவுடன் மனித நுண்ணறிவை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்தியாவின் வளர்ந்து வரும் மதிப்பை அடுத்து உருவாகி வரும் புதிய சவால்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களின் வாய்ப்புகள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், அதை தகவல் ஆதாரமாக மட்டும் சுருக்கிவிடக்கூடாது என்றார். ஒரு ஒற்றைப் போலிச் செய்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைப் பூதாகரமாக்கும் வல்லமைகொண்டது என்று அவர் கூறினார்.  கடந்த காலங்களில் இட ஒதுக்கீடு குறித்த போலிச் செய்திகளால் இந்தியா சந்திக்க நேர்ந்த இழப்புகளை பிரதமர்  சுட்டிக்காட்டினார். எந்தவொரு தகவலையும் மக்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அதை பகுப்பாய்வு செய்து சரிபார்ப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். "போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க தொழில்நுட்ப முன்னேற்றத்தை பின்பற்ற வேண்டும்" என்று அவர் கூறினார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பு குறித்த பயிற்சிகளை நடத்துமாறு தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினரை பிரதமர் கேட்டுக்கொண்டார்.  

பயங்கரவாதத்தின் அடிப்படை கட்டமைப்பை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், ஒவ்வொரு அரசும் அதன் சொந்தத் திறனுடனும், புரிதலுடனும் தங்கள் பங்கைச் செய்ய முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். ஒன்று கூடி நிலைமையைக் கையாள்வது காலத்தின் தேவை என்று திரு மோடி வலியுறுத்தினார். “துப்பாக்கி அல்லது பேனாவால் தூண்டிவிடப்படும் நக்சல் தீவிரவாதத்தின்  ஒவ்வொரு வடிவமும், நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதைத் தடுக்க, அவை வேரோடு அழிக்கப்பட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். வரும் தலைமுறையினரின் மனதை சிதைக்கும் வகையில் இதுபோன்ற சக்திகள் தங்களது அறிவுத் துறையை அதிகரித்து வருவதாக பிரதமர் எச்சரித்தார். தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகவும்,  நம் நாட்டில் இதுபோன்ற சக்திகள் வளர அனுமதிக்க முடியாது என்று கூறிய அவர், இத்தகைய சக்திகளுக்கு சர்வதேச அளவில் கணிசமான உதவி கிடைப்பதை சுட்டிக்காட்டினார்.

கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டில் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். “ஜம்மு-காஷ்மீர் அல்லது வடகிழக்கு மாநிலங்கள் என எதுவாக இருந்தாலும், இன்று நாம் நிரந்தர அமைதியை நோக்கி வேகமாக நகர்கிறோம். இப்போது நாம் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விரைவான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார். இன்று, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் மாற்றுக் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த பிராந்தியங்களில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை நிறுத்துவதில் இது நீண்ட தூரம் செல்ல முடியும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு எல்லை மற்றும் கடலோர மாநிலங்களின் ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

உரையின் முடிவில், பல ஆண்டுகளாக டிஜிபி மாநாடுகளில் இருந்து கிடைத்த ஆலோசனைகளை தீவிரமாக ஆய்வு செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். புதிய உலோக அழித்தல் கொள்கையின் அடிப்படையில் காவல்துறையினரின் வாகனங்களை மதிப்பீடு செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். "காவல்துறை வாகனங்கள் செயல்திறனுடன் தொடர்புடையது என்பதால் அவை ஒருபோதும் பழையதாக இருக்கக்கூடாது” என்று கூறினார்.  

தேசியக் கண்ணோட்டத்துடன் நாம் முன்னோக்கிச் சென்றால், ஒவ்வொரு சவாலும் நம் முன்னால் வீழ்ச்சியடையும் என்று அவர் உறுதியளித்தார். "இந்த சிந்தனை அமர்வில், சிறந்த ஆலோசனைகளுடன் கூடிய வழிமுறை வகுக்கப்படும் என  நான்  உறுதியாக கருதுகிறேன். உங்கள்  அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

**************

(Release ID: 1871479)

MSV/PKV/AG/KRS


(Release ID: 1871560) Visitor Counter : 311