பிரதமர் அலுவலகம்

புதுதில்லி பிரகதி மைதானத்தில் 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமர் உரையாற்றினார்

“உள்ளூர் நலனுக்கு உலகளாவிய ஒத்துழைப்பு – இது தான் எங்கள் அழைப்பாகும்”
“சட்ட அமலாக்கம் நாம் எதைப் பெற்றிருக்கவில்லையோ அதைப் பெறுவதற்கும், நாம் எதைப் பெற்றிருக்கிறோமோ அதைப் பாதுகாப்பதற்கும், நாம் எதை பாதுகாத்திருக்கிறோமோ அதை அதிகரிப்பதற்கும் மிகவும் தேவைப்படுவோருக்கு அதை வழங்குவதற்கும் உதவுகிறது”
“நமது காவல்படைகள் மக்களை மட்டும் பாதுகாக்கவில்லை எங்களின் ஜனநாயகத்திற்கும் சேவை செய்கிறார்கள்”
“அச்சுறுத்தல்கள் உலகளாவியதாக இருக்கும் போது அதனை எதிர்கொள்வது உள்நாட்டு விஷயமாக இருக்க முடியாது. இத்தகைய அச்சுறுத்தல்களை முறியடிக்க உலகம் ஒன்று திரண்டு வருகின்ற தருணமாகும் இது”
”பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் இடங்களை அழிப்பதற்கு உலகளாவிய சமூகம் இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது”
“தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு ஆகியவை குற்றச்செயலை, ஊழலை, பயங்கரவாதத்தை முறியடிக்கும்”

Posted On: 18 OCT 2022 3:52PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பங்கேற்ற அனைத்து பிரமுகர்களையும் பிரதமர்  திரு நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார். 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும்  என்று  அவர் கூறினார். 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளை கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது என்றும் அவர்  தெரிவித்தார்.

இன்டர்போலின் குறிக்கோள் என்பது பாதுகாப்பான உலகத்திற்கு காவல்துறையை இணைப்பதாகும். மேன்மையான சிந்தனைகள் அனைத்து   திசைகளிலிருந்தும் வரட்டும் என வேதங்களில் ஒரு ஸ்லோகம் கூறுகிறது. உலகம் சிறந்ததாக இருப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பை இது கோருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். உலக யுத்தங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போரிட்டு உயிர் நீத்துள்ளனர். பருவநிலை மாற்ற இலக்குகளிலிருந்து கொவிட் தடுப்பூசிகள் வரை எத்தகைய நெருக்கடியையும் சந்திக்கும் மன உறுதியை இந்தியா வெளிப்படுத்தியிருக்கிறது. இப்போது நாடுகளும், சமூகங்களும் சொந்த நலன்களை நோக்கும் நேரத்தில் இந்தியா சர்வதேச ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. உள்ளூர் நலனுக்கு உலகளாவிய ஒத்துழைப்பு – இது தான் எங்கள் அழைப்பாகும் என்று  பிரதமர் திரு மோடி கூறினார்.

கொவிட் -19, பெருந்தொற்றுக் காலத்தில் இது கண்கூடாக வெளிப்பட்டது. உலகம்  முழுவதும் மக்களுக்கு உதவி செய்வதற்காக காவல் படையினர் தங்களின் சொந்த வாழ்க்கையையும் துச்சமென மதித்து பணியாற்றினர்.  மக்கள் சேவையில், இவர்களில் பலர் உயிர்த்தியாகம் செய்தனர். அவர்களுக்கு  எனது மரியாதையை செலுத்துகிறேன்.  உலகமே ஸ்தம்பித்தாலும், அதன் பாதுகாப்பை நிலைநிறுத்தும் பொறுப்பை கைவிட்டு விடமுடியாது. பெருந்தொற்றுக் காலத்திலும் கூட இன்டர்போல் 24 மணி நேரமும் செயல்பட்டது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்திய காவல் துறை கூட்டமைப்பு நிலையிலும்,  மாநில நிலையிலும் உள்ளது. 900-க்கும் அதிகமான தேசிய சட்டங்களையும், சுமார் 10,000 மாநில சட்டங்களையும், அமலாக்குவதில் ஒத்துழைத்து செயல்படுகிறது என்று பிரதமர் கூறினார்.

கடந்த 99 ஆண்டுகளாக இன்டர்போல், உலக அளவில் 195 நாடுகளைச் சேர்ந்த காவல்துறைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.  சட்ட அமைப்புகள், நடைமுறைகள் மற்றும் மொழிகளின் வேறுபாடுகள் இருந்த போதும் இந்த செயல்பாடு உள்ளது. இதனை அங்கீகரிக்கும் விதமாக நினைவு அஞ்சல் தலையும், நாணயமும் இன்று வெளியிடப்பட்டுள்ளன என்று  அவர் தெரிவித்தார். 

உலகம் எதிர்கொள்கின்ற உலகளாவிய பல அச்சுறுத்தல்கள் உள்ளன. பயங்கரவாதம், ஊழல், போதைப் பொருள் கடத்தல், விலங்குகளை வேட்டையாடுதல், திட்டமிடப்பட்ட  குற்றங்கள், இவற்றில் அடங்கும்.   இந்த அபாயங்களிலிருந்து மாற்றம் ஏற்படுவது முன்பைவிட இப்போது வேகமாகியுள்ளது. அச்சுறுத்தல்கள்  உலகளாவியதாக  இருக்கும் போது அதனை எதிர்கொள்வது உள்நாட்டு விஷயமாக இருக்க முடியாது. இத்தகைய அச்சுறுத்தல்களை முறியடிக்க உலகம் ஒன்று திரண்டு வருகின்ற தருணமாகும் இது என்று திரு மோடி குறிப்பிட்டார்.

பயங்கரவாதம் என்பது வெளிப்பகுதிகளில் மட்டுமே போரிடவில்லை. தற்போது இணையம் வழியிலான தீவிரவாதமும் கணினி வழியிலான அச்சுறுத்தல்களும் பரவி வருகின்றன. ஒரு பொத்தானை அமுக்குவதன் மூலம் தாக்குதலை நிறைவேற்ற முடிகிறது. கணினிகளை செயலிழக்கச் செய்யமுடிகிறது. இவற்றுக்கு எதிராக உத்திகளை வகுக்க ஒவ்வொரு நாடும் முயற்சி செய்கிறது. ஆனால், நமது எல்லைகளுக்குள் செய்வது போதுமானதாக இல்லை என்று கூறிய அவர், கூடுதலாக சர்வதேச அளவில், உத்திகளை உருவாக்கும் அவசியம் என்றார். முன்கூட்டியே கண்டறிதல், எச்சரிக்கை செய்தல், ஆகியவற்றை செயல்படுத்துவதோடு போக்குவரத்து சேவைகளை தொடர்பு கட்டமைப்பை, முக்கியமான அடிப்படை கட்டமைப்பை பாதுகாப்பது, தொழில்நுட்ப உதவியை பெறுவது. புலனாய்வு தகவலை பரிமாறிக் கொள்வது ஆகியவையும் தேவைப்படுகின்றன என்று பிரதமர் யோசனை தெரிவித்தார்.

ஊழலும், நிதி சார்ந்த குற்றங்களும், பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் நலன்களை பாதிக்கின்றன.  உலகின் பல்வேறு பகுதிகளில் குற்றங்களைத் தொடர ஊழல் பணம் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பணம்  அந்த நாட்டின் குடிமக்களுக்கு சொந்தமானது. ஆனால், அது தீயவழியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பல நேரங்களில், இது உலகின் மிக ஏழ்மையான மக்களிடமிருந்து எடுக்கப்படுகிறது. மேலும், இத்தகைய பணம் தீய செயல்களுக்கு  பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் மிகப் பெரும் ஆதாரமாக இது உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

இத்தகைய  பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பான  இடங்களை  அழிப்பதற்கு உலகளாவிய சமூகம் இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது.  எனவே, ஊழல் பேர்வழிகள், பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தும் கும்பல், விலங்குகளை வேட்டையாடும் கூட்டங்கள் அல்லது திட்டமிட்டு குற்றம் செய்வோருக்கான புகலிடங்களை இல்லாமல் செய்யவேண்டும்.  இத்தகைய குற்றங்கள், ஒவ்வொருவருக்கும் எதிரான குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மேலும், நமது நிகழ்காலத்தை மட்டும் இவை சீர்குலைக்காமல், எதிர்கால  தலைமுறைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார்.

புதுதில்லியில் உள்ள தேசிய காவலர்கள் நினைவிடம், மற்றும் தேசிய போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றுக்கு செல்வது பற்றி பிரமுகர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் இந்தியாவை பாதுகாக்க தங்களின் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு நீங்கள் மரியாதை செலுத்தலாம் என்றார்.

தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு ஆகியவை குற்றச்செயலை, ஊழலை, பயங்கரவாதத்தை முறியடிக்கும். இதற்கு 90-வது இன்டர்போல் பொதுச் சபை பயனுள்ள, வெற்றிகரமான மேடை என்பதை நிரூபிக்கும் என தாம் நம்புவதாக பிரதமர் தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்விடத்திற்கு பிரதமர் வருகை தந்தபோது, இன்டர்போல் தலைவரால், நிர்வாக குழுவினர் அவருக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். இதையடுத்து குழு புகைப்படத்தில் இடம் பெற்ற பிரதமர், இன்டர்போல் நூற்றாண்டு  பேனர் ஸ்டேண்டை  பார்வையிட்டார்.  இதைத் தொடர்ந்து ரிப்பன் வெட்டி தேசிய காவல் பாரம்பரிய கண்காட்சியை அவர் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

பிரதமர்  மேடைக்கு வருகை தந்தபோது இந்தியா – திபெத் எல்லைக் காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் தேசிய கீதமும், இன்டர்போல் கீதமும் இசைக்கப்பட்டன.   பின்னர் இன்டர்போல் தலைவரால் பிரதமருக்கு போன்சாய் மரக்கன்று வழங்கப்பட்டது.   இதையடுத்து 90-வது இன்டர்போல் பொதுச் சபையைக் குறிக்கும் வகையில் நினைவு தபால் தலையும், 100 ரூபாய் நாணயமும்  பிரதமரால் வெளியிடப்பட்டன.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்டர்போல் தலைவர் திரு அகமது நாசர் அல் ரெய்சி, இன்டர்போல் தலைமைச் செயலாளர் திரு ஜுர்கென் ஸ்டாக், சிபிஐ இயக்குநர் திரு சுபோத் குமார் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில்  பங்கேற்றனர்.

 ************** 

(Release ID: 1868911)

 SMB/Gee/Anand/Sha 



(Release ID: 1868956) Visitor Counter : 158