பிரதமர் அலுவலகம்
புதுதில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் பிரதமர் விவசாயி கவுரவ மாநாடு- 2022-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்.
600 பிரதமர் வேளாண் வள மையங்கள் தொடங்கப்பட்டன
பிரதமரின் தேசிய மக்கள் உரத் திட்டம் தொடங்கப்பட்டது- ஒரே நாடு ஒரே உரம்
தேசிய யூரியா பைகள் அறிமுகம்
ரூ.16,000 கோடி மதிப்பிலான பிரதமரின் விவசாயி வருவாய் ஆதரவு நிதி விடுவிக்கப்பட்டது
விவசாயிகளின் பலதரப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும்வகையில் 3.5 லட்சம் உர சில்லறை விற்பனை கடைகள் பிரதமரின் வேளாண் வள மையங்களாக படிப்படியாக மாற்றப்படவுள்ளன
“நவீன வேளாண் தொழில்நுட்ப அடிப்படையில் தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பது தற்போது அவசியம்”
“70 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலங்கள் கடந்த 7-8 வருடங்களில் நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன”
“1.75 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 2.5 லட்சம் வர்த்தகர்கள் இ-நாம் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இ-நாம் இணையதளம் மூலம் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன”
“வேளாண் துறையில் அதிக அளவிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படுவது இத்துறைக்கும், ஊரக பொருளாதாரத்திற்கும் நலன் பயக்கும்”
Posted On:
17 OCT 2022 2:09PM by PIB Chennai
புதுதில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் பிரதமர் விவசாயி கவுரவ மாநாடு- 2022-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அத்துடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் வேளாண் வள மையங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். மேலும் பிரதமரின் தேசிய மக்கள் உரத் திட்டத்தையும்- ஒரே நாடு ஒரே உரம் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலம் பிரதமரின் விவசாயி வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ் 12-வது தவணையான ரூ.16,000 கோடியை பிரதமர் விடுவித்தார். வேளாண் ஸ்டார்ட்அப் மாநாடு மற்றும் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது, உரம் பற்றிய மின் இதழான ‘இந்தியன் எட்ஜ்’ ஐ பிரதமர் வெளியிட்டார். ஸ்டார்ட்அப் கண்காட்சியை திரு மோடி பார்வையிட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த தயாரிப்புகளை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர், ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பதை ஒப்புக் கொண்டு இந்த மந்திரத்தின் நேரடி அம்சத்தை இன்று இங்கே இருப்பதை பார்க்கலாம் என்று கூறி தொடங்கினார். விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்கவும், அவர்களின் திறனை அதிகரிக்கவும், மேம்பட்ட விவசாய நுட்பங்களை ஊக்கப்படுத்தவும் வேளாண் மாநாடு என்று அவர் மேலும் விளக்கினார்.
600-க்கும் மேற்பட்ட பிரதமர் வேளாண் வள மையங்களை திரு மோடி இன்று தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், இந்த மையங்கள் உர விற்பனை மையங்கள் மட்டுமல்லாமல், நாட்டின் விவசாயிகளுடன் ஆழமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு வழிமுறை என்றும் அவர் கூறினார். பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் புதிய தவணை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இடைத்தரகர்களின்றி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு நிதி சென்றடைகிறது என்று தெரிவித்தார். “பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகளின் குடும்பங்களுக்கு மேலும் ஒரு தவணையாக ரூ.16,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது” என்றும், தீபாவளிக்கு முன்னதாக இந்தத் தவணை விவசாயிகளுக்குச் சென்றடைவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். பிரதமரின் தேசிய மக்கள் உரத்திட்டம் - ஒரே நாடு ஒரே உரம், தொடங்கப்பட்டது குறித்து குறிப்பிட்ட பிரதமர், இதன் மூலம் விவசாயிகளுக்கு குறைவான விலையில் தரமான உரம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
2014-ம் ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் வேளாண் துறையில் சிரமங்களை எதிர்கொண்ட தருணம் மற்றும் கள்ளச் சந்தையின் மூலம் யூரியா விற்பனை செய்யப்பட்டது குறித்து நினைவுகூர்ந்த பிரதமர், விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமானதைக் கோருவதற்கு தடியடியின் சுமையைத் தாங்க வேண்டியிருந்தது என்று கூறினார். யூரியாவை 100% வேப்பஇலை பூசி கற்றச் சந்தைப்படுத்தப்படுவதை அரசு சமாளித்ததாகப் பிரதமர் கூறினார். பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நாட்டின் 6 பெரிய யூரியா தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்க நாங்கள் கடுமையாக உழைத்தோம் என்றும் அவர் கூறினார்.
கடின உழைப்பாளி விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் நடவடிக்கைகளை எடுத்துரைத்த பிரதமர், திரவ நானோ யூரியா உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி இந்தியா விரைவாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார். "நானோ யூரியா குறைந்த செலவில் அதிக உற்பத்தி செய்யும் ஒரு வழிமுறை" என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். அதனுடைய பயன்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், யூரியா நிரம்பிய ஒரு மூட்டைக்கு பதிலாக இப்போது ஒரு பாட்டில் நானோ யூரியாவை மாற்ற முடியும் என்றார். யூரியாவின் போக்குவரத்து செலவுகள் பெருமளவில் குறையும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் உர சீர்திருத்தக் கதையில் இரண்டு புதிய நடவடிக்கைகளை பிரதமர் குறிப்பிட்டார். முதலாவதாக, நாடு முழுவதும் 3.25 லட்சத்துக்கும் அதிகமான உரக் கடைகளை பிரதமரின் வேளாண் வள மையங்களாக மேம்படுத்துவதற்கான பிரச்சாரம் இன்று தொடங்குகிறது என்று அவர் கூறினார். விவசாயிகள் உரம் மற்றும் விதைகளை வாங்குவதற்கு மட்டுமல்லாமல், மண் பரிசோதனையை செயல்படுத்தவும் மற்றும் விவசாய நுட்பங்கள் பற்றிய பயனுள்ள தகவல்களைப் பெறவும் இந்த மையங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இரண்டாவதாக, ஒரே நாடு, ஒரே உரம் மூலம், உரத்தின் தரம் மற்றும் அதன் இருப்பு பற்றிய அனைத்து வகையான குழப்பங்களிலிருந்தும் விவசாயிகள் விடுபடப்போகின்றனர் என்றும் அவர் கூறினார். . “நாட்டில் தற்போது விற்கப்படும் யூரியா அதே பெயரில், அதே வியாபார அடையாளத்துடன், அதே தரத்தில் இருக்கும் என்றும், இந்த விற்பனையின் அடையாளம் பாரத் என்றும், இனி நாடு முழுவதும் ‘பாரத்’ என்ற பெயரில் மட்டுமே யூரியா கிடைக்கும்” என்றும் திரு மோடி குறிப்பிட்டார். இது உரங்களின் விலையைக் குறைத்து, அதிகளவில் கிடைக்கச்செய்யும் என்றும் அவர் கூறினார்.
தொழில்நுட்பம் சார்ந்த நவீன விவசாய நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டிய காலத்தின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், விவசாயத்தில் புதிய முறைகளை உருவாக்க வேண்டும், பரந்த மனப்பான்மையுடன் அதிக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். இதே சிந்தனையுடன், விவசாயத்தில் அறிவியல் முறைகளை மேம்படுத்துவதையும், தொழில்நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்துவதையும் வலியுறுத்தினோம் என்று அவர் தெரிவித்தார். இதுவரை 22 கோடி மண் சுகாதார அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும், சிறந்த தரமான விதைகளை வழங்குவதற்கான அறிவியல் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். "கடந்த 7-8 ஆண்டுகளில் மாறிய தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு சுமார் 1700 புதிய ரக விதைகள் விவசாயிகளுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன" என்று அவர் கூறினார்.
உலகில் தினைகள் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருவதையும் பிரதமர் எடுத்துரைத்தார். "இன்று, நம்மிடம் உள்ள பாரம்பரிய தானியங்களின் விதைகளின் தரத்தை அதிகரிக்க நாட்டில் பல மையங்கள் உருவாக்கப்படுகின்றன" என்றும் அவர் கூறினார். உலகெங்கிலும் உள்ள இந்தியாவின் தானியங்களை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளை எடுத்துக் கூறிய பிரதமர், அடுத்த ஆண்டு சர்வதேச தானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
பாசனத்திற்கு அதிகளவு தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்த பிரதமர், ஒரு சொட்டு நீர் அதிக பயிர், நுண்ணீர் பாசனம், சொட்டு நீர் பாசனம் என்ற முறைகளில் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை மீண்டும் விளக்கினார். கடந்த 7-8 ஆண்டுகளில் 70 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலங்கள் நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், எதிர்கால சவால்களைத் தீர்க்க இது ஒரு முக்கியமான வழியை அளிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் இன்று அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை நாம் உணர்ந்து வருவதாக பிரதமர் எடுத்துரைத்தார். குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இயற்கை விவசாயத்திற்காக விவசாயிகள் பெருமளவு உழைத்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், குஜராத்தில் மாவட்டம் மற்றும் கிராமப் பஞ்சாயத்து அளவிலும் இதற்கான திட்டங்கள் தீட்டப்படுவதாகக் கூறினார்.
பிரதமர் வேளாண் திட்டத்தின் மாற்றத்திற்குரிய முன்னெடுப்பை எடுத்துக்காட்டிய பிரதமர், நவீன தொழில்நுட்பத்தை சிறு விவசாயிகள் பயன்படுத்துவதன் மூலம் எந்தளவு பயனடைகிறார்கள் என்பதற்கு பிரதமரி விவசாயி வருவாய் ஆதரவுத் திட்டம் ஒரு உதாரணம் என்று குறிப்பிட்டார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், நாட்டின் விவசாயிகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு, இது மிகப்பெரிய ஆதரவு என்றும் அவர் குறிப்பிட்டார்.
" இன்று நமது விவசாயிகளின் எளிதான வாழ்க்கையை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து பேசிய பிரதமர், சிறந்த மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பண்ணைக்கும் சந்தைக்கும் இடையிலான தொலைவைக் குறைக்கிறோம்" என்று தெரிவித்தார். பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் மீன் போன்ற எளிதில் அழிந்துபோகும் பொருட்களுடன் தொடர்புடைய சிறு விவசாயியும் இதன் மிகப்பெரிய பயனாளி என்று அவர் கூறினார். இதற்கு வேளாண் ரயில் மற்றும் வேளாண் உடான் விமான சேவை பெரிதும் உதவுவதாக அவர் தெரிவித்தார். இந்த நவீன வசதிகள் இன்று விவசாயிகளின் வயல்களை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள், வெளிநாடுகளில் உள்ள சந்தைகளுடன் இணைக்கின்றன என்று அவர் கூறினார். விவசாய ஏற்றுமதியில் முதல் 10 நாடுகளில் இந்தியாவும் இருப்பதாக அவர் தெரிவித்தார். உலகளாவிய தொற்றுநோய்களின் பிரச்சினைகள் இருந்தபோதிலும் வேளாண் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். பகுதி சார்ந்த ஏற்றுமதிகளைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த முயற்சிகளுக்கு ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் ஆதரவு அளிக்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட அளவில் ஏற்றுமதி மையங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் கூறினார். அதேபோல், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைத்து வருவதாகக் குறிப்பிட்டார். பெரிய உணவுப் பூங்காக்களின் எண்ணிக்கை 2ல் இருந்து 23 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புக்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள் இந்தப் பூங்காக்களுடன் இணைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இ-நாம் இணைய தளம் விவசாயிகளின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும். இ-நாம்- தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டின் எந்த சந்தையிலும் விற்க உதவுவதாக கூறினார். “1.75 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் 2.5 லட்சம் வர்த்தகர்கள் இ-நாம் உடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இ-நாம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் ரூ.2 லட்சம் கோடியை கடந்து விட்டதாகவும்” அவர் தெரிவித்தார்.
நாட்டில் வேளாண் துறையில் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இது இத்துறைக்கும் ஊரகப் பொருளாதாரத்துக்கும் நலன் பயக்கும் என்று கூறினார். “ஸ்டார்ட் அப்கள் மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளர்களான இளைஞர்கள், இந்திய வேளாண் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் எதிர்காலம் என்று தெரிவித்தார். செலவு முதல் போக்குவரத்து வரை உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நமது ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் தீர்வு உள்ளது” என்று திரு மோடி கூறினார்.
தற்சார்பு குறித்து தொடர்ந்து வலியுறுத்துவதன் காரணங்களைப் பற்றிப் பேசிய பிரதமர், சமையல் எண்ணெய், உரம் மற்றும் கச்சா எண்ணெய் போன்ற முக்கிய தயாரிப்புகளில் பெரும் நிதிச் செலவு ஏற்படுவதுடன், உலகளாவிய விநியோகத்தையும் பாதிப்பதாக தெரிவித்தார். டிஏபி மற்றும் பிற உரங்களின் உதாரணங்களை எடுத்துக் காட்டி அவர், அதன் விலைகள் அதிகரித்துள்ளதாகக் கூறினார். யூரியாவை இந்தியா கிலோ ஒன்றுக்கு 75-80 ரூபாய் என்ற விலையில் வாங்கி, அதனை விவசாயிகளுக்கு கிலோவுக்கு 5-6 ரூபாய்க்கு வழங்கியதாகக் குறிப்பிட்டார். இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் கிடைப்பதை உறுதி செய்ய அரசு 2.5 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வெளிநாட்டில் இருந்து வாங்குவதை குறைக்கும் வகையில் உயிரி எரிபொருள் மற்றும் எத்தனால் தொடர்பான நடவடிக்கைகளை அவர் குறிப்பிட்டார்.
தமது உரையின் நிறைவாக பேசிய அவர், சமையல் எண்ணெய் துறையில் தற்சார்பு அடைவதற்கான ஒரு வழியாக பாமாயில் இயக்கமாக மாற்றுமாறு இந்திய விவசாயிகளை வலியுறுத்தினார். மேலும், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், சமையல் எண்ணெய்களின் பயன்பாட்டை இந்தியா குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார். "நமது விவசாயிகள் இந்தத் துறையில் திறமையானவர்கள்" என்று திரு மோடி மேலும் கூறினார். பருப்பு உற்பத்தி தொடர்பாக 2015-ம் ஆண்டு தாம் வலியுறுத்தியதை நினைவுகூர்ந்த பிரதமர், பருப்பு உற்பத்தி 70% அதிகரித்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார். “விடுதலையின் அமிர்தப் பெருவிழாவில் விவசாயத்தை ஈர்ப்புள்ளதாகவும், செழிப்பாகவும் மாற்றுவோம்” என்று கூறிய பிரதமர், அனைத்து விவசாயிகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து தனது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர்கள் திருமதி ஷோபா கரந்த்லாஜே மற்றும் திரு கைலாஷ் சவுத்ரி மற்றும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் , திரு பகவான் குபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
**************
IR/AND/SHA
(Release ID: 1868544)
Visitor Counter : 333
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam