பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் சூரத்தில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 29 SEP 2022 2:29PM by PIB Chennai

சூரத் நகர மக்கள் அனைவருக்கும் நவராத்திரி தின நல்வாழ்த்துகள். இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு குஜராத் மண்ணில் உள்கட்டமைப்பு, விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை சார்ந்த முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவிருப்பதை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் சூரத் நகரின் நடுத்தர வர்க்கம் முதல் மேல் தட்டு மக்கள் வரையில் ஏராளமான வசதிகளையும், பயன்களையும் அளிக்க உள்ளன. 
நண்பர்களே, 
கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் இதர நகரங்களை விட சூரத் மிக வேகமாக முன்னேறியுள்ளது. இன்று நாட்டில் உள்ள தூய்மையான நகரங்களில் சூரத்தும் ஒன்று என்பதை நாம் அடிக்கடி பெருமையுடன் கூறிக் கொள்கிறோம். இந்நகர மக்களின் தொடர்ச்சியான கடின உழைப்பின் பலனாக இது நிகழ்ந்துள்ளது. சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய வடிகால் இணைப்பு, சூரத் நகருக்கு புதிய பாதையை உருவாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இங்குள்ள குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏழைகளுக்கும், குடிசைப் பகுதிகளில் வசிப்போருக்கும் சுமார் 80 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.

குஜராத்தில் இரட்டை எஞ்சின் அரசு பதவியேற்ற பிறகு வீடுகள் கட்டுவது மற்றும் இதர வசதிகள் என ஏராளமான பலன்களை மக்கள் பெறுகின்றனர். ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் ஸ்வாநிதி போன்ற திட்டங்களால் பயனடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
சகோதர, சகோதரிகளே,
இன்று துவக்கி வைக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், சூரத் நகரின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தவுள்ளன. இங்கு உள்ள ஜவுளி மற்றும் வைர வர்த்தகம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் நீடித்திருக்க வழிவகை செய்கின்றன. கனவு நகர திட்டம் நிறைவடைந்ததும் உலகளவில் வைர வர்த்தகத்திற்கு பாதுகாப்பான மையமாக சூரத் வளர்ச்சி அடையும். 
கடந்த இரண்டு தசாப்தங்களாக சூரத் முன்னேறி வரும் வளர்ச்சிப் பாதை, வரும் ஆண்டுகளில் மேலும் துரிதப்படவுள்ளது. இரட்டை எஞ்சின் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் இது பிரதிபலிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சிறிதளவு கூட பின்தங்கி விடக்கூடாது என்பதில் இம்மாநில மக்கள் உறுதியோடு உள்ளனர். இந்த நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
                                                                                                      **************
(Release ID: 1863346)
 



(Release ID: 1863637) Visitor Counter : 109