பிரதமர் அலுவலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டுக்கு இடையே இரான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 16 SEP 2022 11:02PM by PIB Chennai

உஸ்பெகிஸ்தானின் சமார்கண்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது கூட்டத்திற்கிடையே  இரான் அதிபர் மேதகு இப்ராஹிம் ரெய்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 2021 ஆம் ஆண்டில் அதிபராக ரெய்சி பதவியேற்ற பிறகு இருவரும் சந்திப்பது இதுதான் முதல் முறை.

 

இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் சம்பந்தமான பல்வேறு முக்கிய விஷயங்களை இருவரும் விவாதித்ததோடு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதில் தங்களது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்கள். இருநாட்டு மக்களிடையேயான வலுவான தொடர்பு உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நாகரீக இணைப்பினால் இந்திய-ஈரான் இருதரப்பு உறவுகள் தழைத்தோங்குவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

ஷாஹித் பெஹஸ்தி முனையம், சாபஹர் துறைமுகம் ஆகியவற்றின் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த தலைவர்கள், பிராந்திய இணைப்பில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்கள்.

 

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய நிலவரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இந்தியாவின் முன்னுரிமைகள் மற்றும் அமைதியான, நிலையான, பாதுகாப்பான ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக பிரதிநிதித்துவ மற்றும் உள்ளடக்கிய அரசியலின் அவசியத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

இந்தியாவிற்கு கூடிய விரைவில் வருமாறு அதிபர் திரு ரெய்சிக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

 

*******



(Release ID: 1860099) Visitor Counter : 98