பிரதமர் அலுவலகம்

கொச்சியில் ரூ.4500 கோடி மதிப்பிலான மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Posted On: 01 SEP 2022 8:24PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி  கொச்சியில் ரூ.4500 கோடி மதிப்பிலான மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  முன்னதாக காலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் பிரதமர் வழிபட்டார்.

பிரதமர் பேசும் போது, “ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியிருப்பதை உணர முடிகிறது.  இந்த நல்ல நாளில் கேரளாவில் உள்ள பல்வேறு பகுதிகளை இணைப்பதற்கான திட்டங்களை தொடங்கி வைப்பது சிறப்பு. இந்த திட்டங்கள் மூலம் பொது மக்களின் வாழ்வியலை முன்னேற்றி அவர்கள் தங்களது பணிகளை தடையின்றி செய்வதற்கு பயன்படும். நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மூலமே வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும். கடந்த 2017-ம் ஆண்டு கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்று அதன் முதல் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைப்பதிலும், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.”

கொச்சியில் உள்ள ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் செயல்பாடுகளால் அனைத்து போக்குவரத்தும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் விளைவாக மக்கள் பயணம் செய்யும் நேரம் குறைக்கப்படுகிறது. சாலைகளில் போக்குவரத்து குறைவது மட்டுமல்லாமல் காற்று மாசும் குறைகிறது.

கடந்த 8 வருடங்களாக மெட்ரோ ரயில் போக்குவரத்தை முதன்மையான போக்குவரத்தாக மாற்றுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. மேலும், மத்திய அரசு, மாநில தலைநகரங்களுக்கு மட்டுமின்றி, பெரிய நகரங்களுக்கும் மெட்ரோ சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில், அடுத்த 30 ஆண்டுகளில் 250 கிலோ மீட்டர் பாதைகள் மட்டுமே இணைக்கப்பட்டன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் மட்டும், 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான மெட்ரோ வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், 1000 கிலோ மீட்டருக்கும் மேலான மெட்ரோ வழித்தடப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். “நாங்கள் தற்போது இந்திய ரயில்வே துறையை முற்றிலுமாக மாற்றி வருகிறோம். நாட்டிலுள்ள ரயில் நிலையங்கள் அனைத்தும் விமான நிலையங்களை போன்று மேம்படுத்தப்பட்டு வருகின்றன” எனவும் தெரிவித்தார்.

கேரளாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்புப் பணிகளை எடுத்துரைத்த பிரதமர், 1 லட்சம் கோடி மதிப்பீட்டில் விவசாயம் முதல் தொழில்துறை வரை பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

 பிரதமர் தனது உரையின் நிறைவில், “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரது நம்பிக்கையை பெறுவோம், அனைவரும் முயற்சி செய்வோம்” என்ற கொள்கைகளின் அடிப்படையில் மத்திய அரசு நாட்டை மேம்படுத்தி வருவதாக கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856136

 

                             **********



(Release ID: 1856238) Visitor Counter : 135