பிரதமர் அலுவலகம்
ஆகஸ்ட் 27-28 தேதிகளில் பிரதமர் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்
புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கிவைப்பார் – 2021 நிலநடுக்க பேரழிவுக்குப் பின் மக்கள் காட்டிய உறுதி உணர்வை பெருமைப்படுத்தும் முன்முயற்சிகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது
Posted On:
25 AUG 2022 3:22PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 27-28 தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 27 அன்று பிற்பகல் 5.30 மணிக்கு அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெறும் காதி விழாவில் பிரதமர் உரையாற்றுவார். ஆகஸ்ட் 28 அன்று காலை பத்து மணி அளவில், புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். இதன் பின்னர் நண்பகல் 12 மணி அளவில் புஜ் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பார். பிற்பகல் 5 மணி அளவில் இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், காந்தி நகரில் நடைபெறும் விழாவில், பிரதமர் உரையாற்றுவார்.
காதி விழா
சுதந்திரத்தின் 75வது ஆண்டு திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் காதி விழா, விடுதலைப் போராட்ட காலத்தில் காதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெற உள்ள இந்த விழாவில், குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7,500-க்கும் அதிகமான பெண் காதி கைவினை கலைஞர்கள், பங்கேற்று ராட்டையில் நூல் நூற்பார்கள். மேலும், 1920-க்குப் பின் பல்வேறு தலைமுறைகளில் பயன்படுத்தப்பட்ட 22 ராட்டைகளின் கண்காட்சியும், நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் போது, குஜராத் அரசின் கிராமோத்யோக் வாரியத்திற்கான புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கும் பிரதமர், சபர்மதியில் நடை மேம்பாலத்தையும் திறந்து வைப்பார்.
புஜ் பகுதியில் பிரதமர்
புஜ் மாவட்டத்தில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். புஜ் பகுதியில் மையம் கொண்ட 2021 நிலநடுக்கத்தின் போது சுமார் 13,000 பேரின் வாழ்க்கை பறிக்கப்பட்ட பின் மக்கள் உறுதி உணர்வை வெளிப்படுத்தியதை பெருமைப்படுத்தும் விதமாக 470 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் இந்த நினைவிடத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். ஸ்மிருதி வன நிலநடுக்க அருங்காட்சியகம் 7 கருப்பொருட்கள் அடிப்டையில் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
புஜ் பகுதியில் ரூ.4,400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பல திட்டங்களை தொடங்கிவைப்பார். புஜ்-பீமாசார் சாலை உட்பட ரூ.1,500 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.
காந்திநகரில் பிரதமர்
இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார். காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது ரூ.7,300 கோடி முதலீட்டில் ஹன்சால்பூரில் அமையவிருக்கும் மின்சார வாகன மின்கலம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதே போல் ரூ.11,000 கோடி முதலீட்டுடன் ஹரியானாவின் ஹர்கோடாவில் பயணிகள் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
***************
(Release ID: 1854365)
(Release ID: 1854467)
Visitor Counter : 207
Read this release in:
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam