பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்ற அவையில் குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடுவின் பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

Posted On: 08 AUG 2022 10:28PM by PIB Chennai

மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் அவர்களே, மூத்த உறுப்பினர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே.

 எனக்கு தெரிந்தவரையில் வெங்கையா அவர்களுக்குப் பிரியா விடை கொடுக்க இயலாது. எல்லா தருணங்களிலும் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார். அடல் அவர்களின் அரசு அமைந்த போது நான் கட்சிக்காக பணியாற்றிய காலம் பற்றி பேச விரும்புகிறேன். அப்போது அமைச்சரவை அமைக்கப்பட்டு வந்தது. நிர்வாகம் சம்பந்தமான விஷயங்களை நான் கவனித்து வந்ததால் வெங்கையா அவர்களுடனான கலந்துரையாடல் அதிகமாக இருந்தது. பிரதமர் ஒத்துக்கொண்டால் ஊரக வளர்ச்சிக்காக  பொறுப்பேற்க தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். ஊரக மேம்பாடு தான் அவரது மனதில் இருந்தது. அந்த ஈடுபாடே மிக உயரிய விஷயம்.

 அவர் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தை கவனித்துக் கொண்டது மட்டுமல்லாமல், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தையும் பொறுப்புடன் கவனித்து வந்தார். அதாவது, வளர்ச்சியின் இரு அம்சங்களிலும் அவர் தமது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினார்‌. மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமல்லாமல், அதன் தலைவராகவும், குடியரசு துணைத் தலைவராகவும் முதன்முதலில் பொறுப்பு வகித்தவர், அவர். நாடாளுமன்ற குழுக்கள் ஆக்கபூர்வமாக செயல்படுவதை அவர் உறுதி செய்தார். நாடாளுமன்ற குழுக்களின் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த முதல் தலைவராகவும் வெங்கையா அவர்கள் விளங்கினார். குழுக்களின் நடவடிக்கை பற்றி தமது மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி, அவற்றை மேம்படுத்துவதற்குத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார்.

 வெங்கையா அவர்களின் பணியை இன்று நாம் பாராட்டும் அதே வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக நம்மிடமிருந்து, ஒரு தலைவராக அவர் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாம் உறுதியேற்க வேண்டும்.

 வெங்கையா அவர்கள் ஏராளமான பயணங்களை மேற்கொள்வார். புதுமைகளில் அதிக நாட்டம் உள்ள அவர், கொரோனா காலகட்டத்திலும் ‘தொலை-பயணத்தை' மேற்கொண்டார். கடந்த 50 ஆண்டுகளில் தான் சந்தித்த மக்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அவர்களது நலன் மற்றும் கொரோனா சம்பந்தமான பிரச்சனைகளைக் கேட்டறிந்து தன்னால் இயன்ற உதவியை செய்தார். ஒரு குடும்ப தலைவரை போல அனைவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார்.

 வெங்கையா அவர்களின் வாழ்க்கை, நம் அனைவருக்கும் மிகப் பெரிய சொத்து மற்றும் மரபு. அவரிடமிருந்து நாம் கற்ற விஷயங்களை பிறருக்கும் பரப்புவோம்.

 மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெங்கையா அவர்களுக்கும், அவரது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் எனது நன்றிகளும், வாழ்த்துகளும்.

 பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***************



(Release ID: 1850408) Visitor Counter : 138