பிரதமர் அலுவலகம்

தில்லியில் நடைபெற்ற ‘தொழில்முனைவோர் இந்தியா’ நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

Posted On: 30 JUN 2022 3:56PM by PIB Chennai

எனது அமைச்சரவை நண்பர்களான திரு நாராயண் ராணே, திரு பானு பிரதாப் சிங் அவர்களே, அமைச்சரவை உறுப்பினர்களே, மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்முனைவு சகோதர, சகோதரிகளே!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உதவியுடன் மட்டுமே ‘தற்சார்பு இந்தியா திட்டம்' வெற்றி அடையும் என்றும், இந்தியா வளர்ச்சி பெறும் என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா அடையவிருக்கும் உச்சத்தில் உங்களது பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

இந்தியாவின் ஏற்றுமதிகளை அதிகரிக்கவும், நமது பொருட்கள் புதிய சந்தைகளை சென்றடையவும், உங்களது திறமையையும் இந்தத் துறையில் உள்ள எல்லையற்ற சாத்தியக் கூறுகளையும் கருத்தில் கொண்டு நமது அரசு முடிவுகளை எடுத்து வருவதுடன் புதிய கொள்கைகளையும் உருவாக்குகிறது. நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த தனித்துவம் வாய்ந்த உள்ளூர் பொருட்கள் சர்வதேச சந்தையைச் சென்றடைய நாம் உறுதி மேற்கொண்டுள்ளோம்.

வெளிநாடுகளின் மீதான இந்தியாவின் சார்பைக் குறைப்பதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு உள்ளூரில் மதிப்பு சங்கிலியை உருவாக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். எனவே, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையை விரிவுபடுத்த முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ஏராளமான புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நண்பர்களே,
இந்தியாவின் வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரம்மாண்டமான தூணாக விளங்குகின்றன. இந்திய பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒரு பங்கு இந்த துறையின் மூலம் கிடைக்கிறது. இந்தத் துறையில் கோடிக்கணக்கான மக்கள் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு அரசு முன்னுரிமை வழங்குகிறது.

இன்று, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைக் கண்டு ஒட்டு மொத்த உலகமும் ஆச்சரியப்படுகின்றன, இதில் நமது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு மிகப்பெரும் பங்கு உண்டு. இந்தத் துறையை வலுப்படுத்துவதற்காக கடந்த எட்டு ஆண்டுகளில் இத்துறைக்கான நிதி ஒதுக்கீடை நமது அரசு 650% உயர்த்தியுள்ளது. 

இந்த நிகழ்ச்சியின் மூலம் எனது நண்பர்களை கௌரவிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களைப் போல பிறரும் தங்களைத் தயார் படுத்திக்கொண்டு அடுத்த முறை உங்களையும் கௌரவிக்கும் வாய்ப்பைப் பெற விரும்புகிறேன். 

உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.



(Release ID: 1838794) Visitor Counter : 122