பிரதமர் அலுவலகம்

பெங்களூரூவில் பாஸ்க் நவீன வளாக திறப்பு விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் உரை


“தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் இன்னும் அதிகளவில் முதலீடு செய்வது அவசியம்”

“இந்தியாவின் வளர்ச்சி பசுமையாக மாறுகிறது”

“டிஜிட்டல் இந்தியா குறித்த நமது தொலைநோக்கில்,அரசின் அனைத்து அம்சங்களிலும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதை உள்ளடக்கியதாகும். உலகநாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எங்கள் நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கிறேன்”

“பாஸ்க் நிறுவனம் தற்போது ஜெர்மனியில் எப்படி உள்ளதோ அதேபோன்று இந்திய நிறுவனமாக உள்ளது. ஜெர்மன் பொறியியல் மற்றும் இந்திய ஆற்றலுக்கு இதுவே சிறந்த உதாரணம்”


Posted On: 30 JUN 2022 12:46PM by PIB Chennai

பாஸ்க் இந்தியா நிறுவனம் இந்தியாவில் செயல்படத்தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி வீடியோ வாயிலாக வெளியிட்ட செய்தி.

  பாஸ்க் இந்தியா நிறுவனம் இந்தியாவில் செயல்படத்தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அந்த நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்து தமது உரையைத் தொடங்கிய பிரதமர், இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், இந்த விழா நடைபெறுவதை சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாஸ்க் நவீன வளாகம் திறக்கப்பட்டது. “இந்தியா மற்றும் உலகிற்கு, எதிர்காலத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதில் இந்த வளாகம் நிச்சயம் முன்னணியில் இருக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டார். 2015-ம் ஆண்டு அப்போதைய  ஜெர்மன் பிரதமர் மெர்க்கலுடன் தாமும் பெங்களூரூவில் உள்ள பாஸ்க் வளாகத்தை  பார்வையிட்டதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

 தற்காலம், தொழில்நுட்ப யுகம் என்று குறிப்பிட்ட பிரதமர், தொழில்நுட்பத்தின் பலன்கள் பெருந்தொற்று காலத்தில் நிரூபணமாகியுள்ளநிலையில், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் இன்னும் அதிகளவில் முதலீடு செய்வது அவசியம் என்றும் தெரிவித்தார். பாஸ்க் நிறுவனத்தின் புதுமை கண்டுபிடிப்பு பணிகளை பாராட்டிய பிரதமர், இந்த செயல்பாடு நீடித்து மேற்கொள்ளப்படவேண்டியதன் தேவையையும் சுட்டிக்காட்டினார்.  அந்தவகையில், “கடந்த 8 ஆண்டுகளில்  நாட்டில் நிறுவப்பட்ட சூரிய சக்தி உற்பத்தி திறன் ஏறத்தாழ 20 மடங்கு அதிகரித்திருப்பதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி பசுமையாக மாறிவருகிறது” என்றும் தெரிவித்தார்.  இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கார்பன் சமநிலையை அடைவதில் பாஸ்க் நிறுவனத்தின் சாதனைகளை பிரதமர் பாராட்டினார்.

 இந்தியா தற்போது வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது என்று பிரதமர் கூறினார். கடந்த 2 ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. “நமது இளைஞர்களின் முயற்சிக்கு நன்றி கூறும் விதமாக நமது ஸ்டார்ட்-அப் சூழல் உலகிலேயே மிகப்பெரிய சூழல்களில் ஒன்றாக உள்ளது. தொழில்நுட்ப உலகில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன”. அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள இணைப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. “டிஜிட்டல் இந்தியா குறித்த நமது தொலைநோக்கில்,அரசின் அனைத்து அம்சங்களிலும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதை உள்ளடக்கியதாகும். உலகநாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எங்கள் நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.

 முக்கியமான இந்த தருணத்தில் பாஸ்க் நிறுவனம்  இந்தியாவில் தனது செயல்பாட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். “அடுத்த 25 ஆண்டுகளில் உங்களது குழு என்ன செய்யப்போகிறது என்பதற்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்க் நிறுவனம், ஜெர்மனி நிறுவனமாக இந்தியாவிற்கு வந்தது. ஆனால் தற்போது, இந்த நிறுவனம் ஜெர்மனியில் எப்படி உள்ளதோ அதே போன்று இந்திய நிறுவனமாக மாறியுள்ளது. ஜெர்மன் பொறியியல் மற்றும் இந்திய ஆற்றலுக்கு இதுவே சிறந்த உதாரணம். இந்த ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்து தொடரும்” என்று கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

***************



(Release ID: 1838188) Visitor Counter : 153