பிரதமர் அலுவலகம்
என் அன்னை எவ்வளவு அற்புதமானவரோ, அவ்வளவு எளிமையானவர்: நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தனது அன்னை பற்றிய பிரதமர் திரு மோடியின் உணர்ச்சிபூர்வமான வலைப்பதிவு
Posted On:
18 JUN 2022 8:29AM by PIB Chennai
தமது அன்னை, 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஓர் உணர்ச்சிபூர்வமான வலைப்பதிவை எழுதியுள்ளார். தமது குழந்தைப் பருவத்தில் தாயுடன் செலவிட்ட சில சிறப்பு தருணங்களை அவர் நினைவு கூர்ந்தார். தாம் வளர்கையில், தமது அன்னை செய்த ஏராளமான தியாகங்களை நினைத்துப் பார்த்த அவர், தமது மனம், ஆளுகை மற்றும் தன்னம்பிக்கையை வடிவமைத்த அன்னையின் ஏராளமான குணங்களைக் குறிப்பிட்டார்.
“எனது தாய் திருமதி ஹீராபா மோடி, தமது 100-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை பகிர்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரது நூற்றாண்டு பிறந்த ஆண்டாக இருக்கப் போகிறது”, என்று பிரதமர் திரு மோடி எழுதினார்.
நெகிழ்தன்மையின் சின்னம்:
தமது சிறுவயதில் தாம் சந்தித்த இன்னல்களை நினைவுகூர்ந்த பிரதமர் திரு மோடி, “எனது அன்னை எவ்வளவு அற்புதமானவரோ, அவ்வளவு எளிமையானவர். எல்லா தாய்மார்களையும் போல”, என்று கூறினார். பிரதமர் திரு மோடியின் தாய் அவரது அன்னையை இழந்தார். “என் பாட்டியின் முகத்தையோ, அல்லது அவர் மடியில் தவழும் சுகத்தையோ என் தாய் நினைவில் கொள்ளவில்லை. தாய் இல்லாமலேயே ஒட்டுமொத்த சிறுவயதையும் அவர் கழித்தார்”, என்று பிரதமர் தெரிவித்தார்.
வத்நகரில் மண் சுவர்கள் மற்றும் களிமண் ஓடுகளாலான சிறிய வீட்டில் தமது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோருடன் தாம் தங்கியதை அவர் நினைவு கூர்ந்தார். தமது தாய் சந்தித்து, வெற்றிகரமாக சமாளித்த எண்ணற்ற அன்றாட துன்பங்களை அவர் குறிப்பிட்டார்.
வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ததோடு, குடும்ப வருமானத்தை பெருக்குவதற்காகவும் தன் தாய் எவ்வாறு உழைத்தார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவியதுடன், வீட்டு செலவுகளைச் சந்திப்பதற்காக சர்க்காவைச் சுற்றவும் நேரம் ஒதுக்கினார்.
“மழையின்போது, எங்கள் வீட்டுக் கூரை ஒழுகி, வீடும் வெள்ளத்தால் நிறையும். நீர் சொட்டும் இடங்களில் மழை நீரை சேமிப்பதற்காக என் தாய் வாளிகளையும், பாத்திரங்களையும் அந்த இடங்களில் வைப்பார். இதுபோன்ற மோசமான நிலையிலும் நெகிழ்தன்மையின் சின்னமாக என் அன்னை விளங்குவார்”, என்று பிரதமர் திரு மோடி தெரிவித்தார்.
தூய்மைப் பணியில் ஈடுபடுவோர் மீது ஆழ்ந்த மரியாதை:
தூய்மை பழக்கவழக்கங்களுக்கு தமது தாய் எப்போதும் அதிக முக்கியத்துவம் அளிப்பார் என்று பிரதமர் திரு மோடி கூறினார். தூய்மையைப் பராமரிப்பதில் அவரது அன்னை குறிப்பாக இருப்பதை உணர்த்தும் பல நிகழ்வுகளை அவர் பகிர்ந்தார்.
தூய்மை மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபடுவோர் மீது தமது அன்னை ஆழ்ந்த மரியாதை கொண்டிருந்ததாக பிரதமர் திரு மோடி தெரிவித்தார். வத்நகரில் தம் வீட்டின் அருகே இருக்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய யாரேனும் வரும்போதெல்லாம், அவரது அன்னை அவருக்கு தேனீர் வழங்காமல் இருக்க மாட்டார்.
பிறரது மகிழ்ச்சியில் இன்பம் காணுதல்
பிறரது மகிழ்ச்சியில் தமது அன்னை இன்பம் காணுவார் என்றும், அவருக்கு பரந்த மனம் என்றும் பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். “என் தந்தையின் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்தார். அவரது அகால மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் அப்பாசை என் தந்தை எங்கள் வீட்டிற்கு அழைத்துவந்தார். அவர் எங்களுடன் தங்கியிருந்து, தமது படிப்பை நிறைவு செய்தார். உடன்பிறந்தவர்களுக்கு செய்ததைப் போலவே, என் தாய் அப்பாசிடமும் பாசமாகவும், அக்கறையுடனும் இருந்தார். ஒவ்வொரு வருடமும் ஈத் பண்டிகையின்போது அவருக்குப் பிடித்த உணவு வகைகளை என் தாய் தயார் செய்வார். பண்டிகைகளின் போது, அன்னையின் சிறப்பு உணவுகளை ருசி பார்ப்பதற்காக அருகில் இருக்கும் குழந்தைகள் எங்கள் வீட்டிற்கு வருவது வாடிக்கையாக இருந்தது”, என்று பிரதமர் நினைவுகூர்ந்தார்.
பிரதமர் திரு மோடியின் அன்னை இரண்டு தருணங்களில் மட்டுமே வெளிப்படையாக அவருடன் சென்றுள்ளார்
இரண்டு தருணங்களில் மட்டுமே வெளிப்படையாக தம் அன்னை தம்முடன் பயணித்தது பற்றி வலைப்பதிவில் பிரதமர் சுட்டிக்காட்டினார். முதலாவதாக, ஏக்தா யாத்திரையை நிறைவு செய்த பிறகு, லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ஸ்ரீநகரில் இருந்து திரும்பிய பிறகு, அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவரது நெற்றியில், அவரது தாய் திலகமிட்டார். இரண்டாவது முறை, 2001- ஆம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக பிரதமர் திரு மோடி முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்ட போது.
பிரதமர் திரு மோடிக்கு அவர் அன்னை கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடம்:
முறையான கல்வி கற்காமலேயே, கற்றுக்கொள்ள முடியும் என்பதை தமது தாயார் உணர்த்தியதாக பிரதமர் திரு மோடி எழுதினார். மிகப்பெரிய ஆசிரியரான தமது அன்னை உட்பட அனைத்து ஆசிரியர்களையும் அனைவரின் முன்னிலையில் கௌரவிக்க தாம் விரும்பிய சம்பவத்தை அவர் பகிர்ந்தார்., “இதோ பார், நான் ஒரு சாதாரண நபர். நான் உன்னைப் பெற்றெடுத்திருக்கலாம், ஆனால் அந்த இறைவனாலேயே நீ கற்றுவிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டிருக்கிறாய்”,என்று கூறி அவரது தாய் மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சயில் அவரது அன்னை பங்கேற்காத நிலையிலும், தமக்கு எழுத்துக்களைக் கற்றுத்தந்த உள்ளூர் ஆசிரியரான திரு ஜேத்தாபாய் ஜோஷி அவர்களின் குடும்பத்தில் இருந்து யாரேனும் அழைக்கப்பட்டிருப்பதை அவர் உறுதி செய்தார். “அவரது எண்ண ஓட்டமும், தொலைநோக்கு சிந்தனையும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளன”, என்று அவர் தெரிவித்தார்.
கடமை உணர்வுமிக்க குடிமகன்:
பொறுப்புள்ள குடிமகனாக, பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை, தேர்தல் காலம் தொடங்கியதிலிருந்து தமது அன்னை அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்திருப்பதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.
மிகவும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல்
தமது அன்னையின் மிகவும் எளிமையான வாழ்க்கைமுறையைப் பிரதிபலித்த பிரதமர் திரு மோடி, தமது அன்னையின் பெயரில் இன்று கூட எந்த சொத்துக்களும் இல்லை என்று எழுதினார். “எந்த தங்க நகைகளை அவர் அணிந்தும் நான் பார்த்ததில்லை., அதில் அவருக்கு எந்த ஆர்வமும் இல்லை. முன்புபோலவே, தமது சிறிய அறையில் மிகவும் எளிமையான வாழ்க்கையை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார்”, என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிகழ்வுகளுடன் இணைந்திருத்தல்:
உலக நிகழ்வுகளுடன் தமது அன்னை தொடர்ந்து இணைந்திருப்பதாக பிரதமர் திரு பிரதமர் திரு மோடி கூறினார். “தினமும் எவ்வளவு நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பீர்கள், என்று அண்மையில் நான் அவரிடம் கேட்டேன். தொலைக்காட்சிகளில் பெரும்பாலானோர் ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டுக் கொள்வதில் முனைப்புடன் இருப்பதாகவும், அமைதியாக செய்தி வாசிப்பவரையும், அனைத்து விஷயங்களை விளக்குபவர்களையும் மட்டுமே அவர் காண்பதாகவும் பதிலளித்தார். இவ்வளவு விஷயங்களைப் பற்றி அன்னை தெரிந்து வைத்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது”, என்று தமது வலைப்பதிவில் பிரதமர் குறிப்பிட்டார்.
வயதான போதும் கூர்மையான நினைவாற்றல்:
தமது வயது முதிர்வின் போதும் அன்னையின் விழிப்புணர்வை எடுத்துரைக்கும் விதமாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் ஒன்றை பிரதமர் திரு மோடி பகிர்ந்தார். 2017-ஆம் ஆண்டில் காசியிலிருந்து அவரை சந்திப்பதற்காக பிரதமர் திரு மோடி நேரடியாக சென்றிருந்ததோடு, பிரசாதத்தையும் எடுத்துச் சென்றிருந்தார். “அன்னையை நான் சந்தித்தபோது, காசி விஸ்வநாதர் மகாதேவை நான் வணங்கினேனா என்று உடனடியாக அவர் கேட்டார். காசி விஸ்வநாதர் மகாதேவ் என்ற முழு பெயரைத் தான் அன்னை இன்றும் பயன்படுத்துகிறார். காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு செல்லும் சந்துகள், ஒருவரது வீட்டிற்குள் ஆலயம் இருப்பதைப் போன்று தான் இன்னமும் இருக்கின்றதா என்று எங்கள் கலந்துரையாடலின்போது அவர் கேட்டார். ஆச்சரியமடைந்த நான், ஆலயத்திற்கு எப்போது சென்றீர்கள் என்று கேட்டேன். பல ஆண்டுகளுக்கு முன்பு தாம் காசிக்குச் சென்றிருந்ததைத் தெரிவித்த அவர், இன்றும் அதை நினைவில் கொண்டிருப்பதாகக் கூறினார்”, என்று பிரதமர் திரு மோடி தெரிவித்தார்.
பிறரது விருப்பங்களுக்கு மரியாதை:
தமது அன்னை, பிறரது விருப்பங்களுக்கு மரியாதை தருவதுடன், அவரது கருத்துகளைப் புகுத்துவதை தவிர்ப்பார் என்றும் பிரதமர் திரு மோடி விரிவாக எடுத்துரைத்தார். “என் விஷயத்திலேயே, எனது முடிவுகளை அவர் மதித்ததோடு, எந்த தடங்கலும் செய்யாமல், என்னை ஊக்கப்படுத்தினார். என்னுள் வேறுபட்ட மனநிலை உருவாகி வருவதை சிறுவயதிலேயே அவரால் உணந்துகொள்ள முடிந்தது”, என்று பிரதமர் திரு மோடி கூறினார்.
தமது வீட்டை விட்டு வெளியேற பிரதமர் திரு மோடி முடிவு செய்தபோது, அவரது அன்னை தான் அவருக்கு முழு ஆதரவளித்தார். அவரது விருப்பங்களைப் புரிந்துகொண்டு, “உன் மனம் சொல்வது போல் செய்” என்று கூறி அவரது அன்னை ஆசி வழங்கினார்.
ஏழைகள் நலனில் அக்கறை:
ஏழைகள் நலனில் வலுவான உறுதிப்பாடு கொள்ளவும், கவனம் செலுத்தவும் அன்னை எப்போதும் தம்மை ஊக்குவிப்பதாக பிரதமர் திரு மோடி கூறினார். 2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக தாம் அறிவிக்கப்பட்டபோது நடைபெற்ற நிகழ்வை அவர் பகிர்ந்து கொண்டார். குஜராத் வந்தடைந்த பிறகு நேராக தமது அன்னையை சந்திப்பதற்காக பிரதமர் திரு மோடி சென்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்த அன்னை, “அரசில் உனது பணி பற்றி எனக்குப் புரியாது. இருந்தாலும், ஒருபோதும் நீ லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும்”, என்று தெரிவித்தார்.
தம்மைப் பற்றி கவலைப்படாமல் மிகப்பெரிய பொறுப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று அவரது தாய் கூறிக் கொண்டே இருப்பார். தொலைபேசி வாயிலாக அவருடன் பேசும்போதெல்லாம், “எந்த தவறான காரியத்தையோ அல்லது பிறருடன் தவறான செயல்களையோ செய்யாமல், ஏழைகளுக்காக தொடர்ந்து பணியாற்று”, என்று அவரது தாய் தெரிவிப்பார்.
கடின உழைப்பு- வாழ்க்கையின் தாரக மந்திரம்:
நேர்மையும், சுயமரியாதையும் தான் தமது பெற்றோரின் மிகப்பெரிய குணநலன்கள் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். வறுமை மற்றும் அது சார்ந்த சவால்களுடன் போராடிய போதும், நேர்மையின் வழி தவறியோ அல்லது தங்களது சுயமரியாதையை விட்டுக் கொடுத்தோ தமது பெற்றோர் செயல்படவில்லை என்று பிரதமர் திரு மோடி தெரிவித்தார். தொடர்ச்சியான கடின உழைப்பு தான் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் அவர்களது தாரக மந்திரமாக இருந்தது.
மாத்ரு சக்தியின் சின்னம்:
“என் அன்னையின் வாழ்க்கைப் பயணத்தில், இந்திய பெண்களின் தவம், தியாகம் மற்றும் பங்களிப்பை நான் காண்கிறேன். அன்னை மற்றும் அவரைப் போன்ற கோடிக்கணக்கான பெண்களை நான் பார்க்கும் போதெல்லாம், இந்திய பெண்களால் சாதிக்க முடியாதது என்பது எதுவும் இல்லை என்பதை உணர்கிறேன்”, என்று பிரதமர் திரு மோடி மேலும் தெரிவித்தார்.
அவரது அன்னையின் எழுச்சிமிக்க வாழ்க்கையை ஒரு சில வரிகளுள் பிரதமர் திரு மோடி சுருக்கினார்:
“ஒவ்வொரு இழப்பின் பின்னணியிலும், ஒரு தாயின் ஒளிமயமான கதை உள்ளது.
ஒவ்வொரு போராட்டத்திற்கும் மேலே, ஒரு தாயின் வலுவான உறுதிப்பாடு உள்ளது.”
•••••••••••••
(Release ID: 1835020)
Visitor Counter : 245
Read this release in:
Punjabi
,
Kannada
,
Malayalam
,
Gujarati
,
Telugu
,
Odia
,
Urdu
,
English
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Marathi
,
Bengali