பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 நிலைமை குறித்து முதலமைச்சர்களுடனான கலந்துரையாடலில் பிரதமரின் நிறைவு உரையின் தமிழாக்கம்

Posted On: 27 APR 2022 3:26PM by PIB Chennai

வணக்கம்! தமிழகத்தில் தஞ்சாவூரில் நடந்த அசம்பாவிதம் குறித்து எனது ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொடர்பான நமது 24-வது சந்திப்பு இதுவாகும். கொரோனா காலத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்ட விதம், கொரோனாவுக்கு எதிரான நாட்டின் போரில் முக்கியப் பங்காற்றியுள்ளது. அனைத்து முதலமைச்சர்கள், மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து அனைத்து கொரோனா வீரர்களையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

சில மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதார செயலாளர் நம்மிடம் விரிவாக விளக்கியுள்ளார். மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சரும் பல முக்கிய அம்சங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். அதே சமயம், பல முதல்வர்களும் பல முக்கிய விஷயங்களை முன்வைத்துள்ளனர். கொவிட் சவால் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. ஓமிக்ரான் மற்றும் அதன் துணை மாறுபாடுகள் எப்படி கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை ஐரோப்பிய நாடுகளில் காணலாம்.

கடந்த சில மாதங்களில், பல நாடுகளில் துணை மாறுபாடுகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பெரும்பாலான நாடுகளை விட இந்தியாவால் நிலைமையை சிறப்பாக சமாளிக்க முடிந்தது. இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களில் சில மாநிலங்களில் பாதிப்புகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் வந்த (கடைசி) அலையில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். நாட்டு மக்கள்  அனைவரும் பீதியின்றி ஓமிக்ரான் அலையை வெற்றிகரமாக சமாளித்தனர்.

நண்பர்களே,

கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதார உள்கட்டமைப்பு முதல் ஆக்ஸிஜன் விநியோகம் வரை கொரோனா தொடர்பான அனைத்து அம்சங்களிலும் தேவையான அனைத்தையும் நாடு பலப்படுத்தியுள்ளது. மூன்றாவது அலையில் எந்த மாநிலத்திலும் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதாக தகவல் இல்லை. இதற்கு  நமது கொவிட் தடுப்பூசி பிரச்சாரம் பெரிதும் உதவியது!

புவியியல் நிலைமைகளைப் பொருட்படுத்தாமல், தடுப்பூசிகள் நாட்டின் ஒவ்வொரு மாநிலம், மாவட்டம் மற்றும் பிராந்தியத்தை அடைந்துள்ளன. இன்று இந்தியாவின் வயது வந்தோரில் 96 சதவீதம் பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். 15 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 85 சதவீதம் பேர் ஏற்கனவே இரண்டாவது டோஸ் எடுத்துள்ளனர்.

நண்பர்களே,

கொரோனாவுக்கு எதிரான சிறந்த கவசம் தடுப்பூசிகள் என்று உலகின் பெரும்பாலான நிபுணர்கள் முடிவு செய்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நம் நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். சில பள்ளிகளில் குழந்தைகள் நோய் தொற்றுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் பெரும்பாலான குழந்தைகளிடம் தடுப்பூசிகளின் கவசம் உள்ளது என்பது திருப்தியளிக்கும் விஷயம். 12 முதல் 14 வயதுடையவர்களுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி போட ஆரம்பித்தோம். 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நேற்று முன்தினம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் விரைவில் தடுப்பூசி போடுவதே நமது முன்னுரிமை. முன்பு போலவே பள்ளிகளிலும் சிறப்புப் பிரச்சாரங்கள் தேவைப்படும்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி பாதுகாப்பு கவசத்தை வலுப்படுத்த, நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் முன்னெச்சரிக்கை டோஸ் உள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற தகுதியுள்ள நபர்களும் முன்னெச்சரிக்கை டோஸை எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820474

****

(Release ID: 1820474)


(Release ID: 1821548) Visitor Counter : 158