பிரதமர் அலுவலகம்

சிவகிரி புனித யாத்திரையின் 90-வது ஆண்டு & பிரம்ம வித்யாலயாவின் பொன் விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 26 APR 2022 3:04PM by PIB Chennai

அனைவருக்கும் வணக்கம் !

ஸ்ரீ நாராயண தர்ம சங்கம் அறக்கட்டளை தலைவர் சுவாமி சச்சிதானந்தா அவர்களே, பொதுச் செயலாளர் சுவாமி ரீதாம்பரானந்தா அவர்கேளே, மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களே, கேரள மண்ணின் மைந்தர்களான திரு வி முரளீதரன் அவர்களே, ராஜீவ் சந்திரசேகர் அவர்களே, ஸ்ரீ நாராயண தர்ம சங்கம் அறக்கட்டளையின் அலுவலர்களே, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் பக்தர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

இன்று எனது இல்லத்திற்குள் துறவிகள் அடியெடுத்து வைத்திருப்பதால் எனது மகிழ்ச்சியை உங்களால் கற்பனை செய்ய இயலாது.

துறவிகள் மற்றும் ஸ்ரீ நாராயண குருவின் ஆசிகளால் முன்பும் கூட உங்கள் அனைவரிடையே இருக்கும் பெருமையை நான் பெற்றிருக்கிறேன். உங்களின் வாழ்த்துக்களை பெறுவதற்காக சிவகிரிக்கு வருகின்ற நல்ல வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன். நான் அங்கு செல்லும் போதெல்லாம் அந்த ஆன்மிக நிலத்தின் சக்தியை  அனுபவித்திருக்கிறேன். சிவகிரி புனித யாத்திரை மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன்விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு நீங்கள் அளித்திருப்பதற்காக நான் இன்று மகிழ்ச்சியடைகிறேன்.

உத்தராகண்ட் – கேதார்நாத் விபத்து காலத்தில், இம்மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் அரசு இருந்தது. பாதுகாப்புத் துறை அமைச்சராக கேரளாவைச் சேர்ந்த திரு ஏ கே ஆண்டனி இருந்தார். என்றாலும், குஜராத் முதலமைச்சர் என்ற முறையில் நான் சிவகிரி மடத்தின் துறவிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். குஜராத்தில் போதிய வசதிகள் இல்லாத போதும் துறவிகள் அனைவரையும் பாதுகாப்பாக சிவகிரி மடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்வை  நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

சிவகிரி புனித யாத்திரையின் 90 ஆவது ஆண்டு, பிரம்ம வித்யாலயாவின் பொன்விழா ஆகியவற்றை புனிதத் தலங்களுக்கான பயணமாக மட்டும் சுருக்கி விடக் கூடாது. இது இந்திய தத்துவத்தின் அழிக்க முடியாத பயணமாகவும் இருக்கிறது. பல்வேறு காலங்களில் பல்வேறு நிலைகளில் முன்னேறிச்செல்ல இந்தியாவுக்கு இது உதவியிருக்கிறது. இந்தியாவின் ஆன்மிக மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான பயணத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எப்போதும் முக்கியபங்கு வகித்துள்ளனர்.

சிவபெருமானின் நகரான வாரணாசியாக இருந்தாலும், வர்கலாவின் சிவகிரியாக இருந்தாலும், இந்தியாவின் ஒவ்வொரு ஆற்றல் மையமும் இந்தியர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளன.  இவை வெறும் புனிதத் தலங்களாவும், நம்பிக்கை மையங்களாகவும் இல்லாமல், ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ என்னும் எழுச்சிக்கான விழிப்பை ஏற்படுத்தும் அமைப்புகளாகத் திகழ்கின்றன.

 பல நாடுகள் தங்களது தர்மத்திலிருந்து வழுவிச் செல்லும் நிலையில், இந்தியா தனது ஆன்மீகத்தைக் கொண்டு செல்கிறது. இந்தியாவில் நமது துறவிகளும், ஆன்மீக குருக்களும் நமது எண்ணங்களை எப்போதும் தூய்மையாக்கி, நமது நடத்தையை உயர்த்தியுள்ளனர். நவீனம் குறித்து பேசிய ஸ்ரீ நாராயண குரு இந்தியக் கலாச்சாரம் மற்றும் விழுமியங்களால் செழுமை பெற்றிருந்தார். கல்வி, அறிவியல் பற்றி அவர் பேசினாலும், தர்மம், நம்பிக்கை மற்றும் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த பாரம்பரியத்தின் புகழை உயர்த்த அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. ஸ்ரீ நாராயண குரு தீமைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து இந்தியா தனது உண்மையான நிலையை புரிந்து கொள்ள வைத்தார். சாதி என்ற பெயரில் நிலவிய வேறுபாட்டுக்கு எதிராக தர்க்கரீதியாகவும், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் ஸ்ரீ நாராயண குரு போராடினார்.

 இன்று நாராயண குருவின் அதே உணர்வுடன் ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு நாடு சேவை புரிந்து வருவதுடன், அவர்களின் உரிமைகளையும் வழங்கி வருகிறது. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்துடன் நாடு முன்னேறிச் செல்கிறது.

நண்பர்களே,

ஸ்ரீ நாராயண குரு பகுத்தறிவு சிந்தனை உள்ளவராகவும், நடைமுறையில் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். குரு அவர்கள் எப்போதும் விவாதத்தின் அழகை பின்பற்றியதுடன் மற்றவர்களின் கருத்தை புரிந்து கொண்டு மற்றவர்களுடன் சேர்ந்து தமது கருத்தை தெளிவாக தெரிவிக்க முயற்சி செய்தார்.

சமுதாயத்தில் உரிமையுடன் கூடிய சுயமுன்னேற்ற திசையை நோக்கிய சூழலை உருவாக்க அவர் முயன்றார். நாம் சமுதாய சீர்திருத்தப்பாதையில் நடைபோடும்போது, சுயமுன்னேற்ற ஆற்றல் சமுதாயத்தில் விழிப்பை ஏற்படுத்தும், இதற்கு ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்என்பது சமீபத்திய உதாரணமாகும். இந்தியர்களாகிய நமக்கு ஒரேயொரு சாதிதான் உள்ளது, அதாவது இந்தியத்துவம். நமக்கு ஒரே சேவை, தர்மம் மற்றும் கடமை என்ற ஒரே மதம் தான் உள்ளது. நமது ஒரே கடவுள் அன்னை இந்தியா. ‘ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்ற ஸ்ரீ நாராயண குருவின் கருத்து நமது தேசப்பற்றுக்கு ஆன்மீக வடிவத்தை வழங்குகிறது. ஒன்றுபட்ட இந்தியர்களுக்கு உலகில் எதுவும் முடியாதது அல்ல என்பது  நம் அனைவருக்கும் தெரியும்.

நண்பர்களே,

விடுதலைப் போராட்ட வீரர்களுடன் ஸ்ரீ நாராயண குரு சந்திப்புகளை  நடத்தினார். குருதேவ் ரவீந்திர நாத் தாகூர், மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் மற்றும் பல தலைவர்கள் ஸ்ரீ நாராயண குருவை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புகளில் இந்தியாவை மறுகட்டுமானம் செய்வதற்கான விதைகள் விதைக்கப்பட்டன அதன் பலன் இன்றைய இந்தியாவில் தெளிவாக தெரிகிறது. இந்தியா தனது சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் சிவகிரி புனித யாத்திரையும், இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் சுதந்திரமும் நூற்றாண்டை கொண்டாடவுள்ளன. இந்த சூழலில் நமது சாதனை மற்றும் தொலைநோக்கு உலகளாவிய பரிமாணத்துடன் இருக்க வேண்டும்.

***************



(Release ID: 1820471) Visitor Counter : 133