சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

“உலக மலேரியா தினம் 2022” –ஐயொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் மன்சுக் மாண்டவியா சிறப்புரை

Posted On: 25 APR 2022 1:10PM by PIB Chennai

“மலேரியா நோயை 2030-க்குள் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிப்பதற்கான நமது இலக்கை அடையவும், மலேரியாவுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையில், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி தனிநபர் என்ற முறையிலும் நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திலும் தூய்மையை பராமரிப்பதும், மலேரியா கட்டுப்பாடு  குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் சம முக்கியத்துவம் வாய்ந்தது.  உலக மலேரியா தினம் 2022–ஐயொட்டி புதுதில்லியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  இதனைத் தெரிவித்தார். “சுகாதாரச் சேவை வழங்கும் நடைமுறைகளை முன்னேற்றகரமான முறையில் வலுப்படுத்துவதும், பலதரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதும்  அவசியம்” என்று அவர் வலியுறுத்தினார்.

ஆண்டு தோறும் ஏப்ரல் 25-ந் தேதி ‘உலக மலேரியா தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்த ஆண்டு “உலக அளவில் மலேரியா நோய் பாதிப்பு சுமையை குறைப்பதற்கான புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளுதல் மற்றும் உயிர்களை காப்பாற்றுதல்” என்பதே மையக்கருவாகும்.

தேசிய மற்றும் உப தேசிய அளவிலான முயற்சிகளின் வாயிலாக மலேரியா ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென டாக்டர் மாண்டவியா கேட்டுக் கொண்டார்.  தொழில்நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத்தி, புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திய அவர், இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் மலேரியா ஒழிப்பு நடவடிக்கைகளை  முன்னெடுத்து செல்ல உதவும் என்றார்.  மேலும் மனித ஆரோக்கியம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, வறுமையை ஒழிப்பதிலும் இது முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறைப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819776

***************



(Release ID: 1819825) Visitor Counter : 559