பிரதமர் அலுவலகம்
பனாஸ்கந்தாவில் தியோதரில் உள்ள பனாஸ் பால்வள வளாகத்தில் பலவகையான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
பனாஸ் சமூக வானொலி நிலையத்தைத் தொடங்கி வைத்தார்
பனாஸ்கந்தா மாவட்டத்தில் தியோதரில் ரூ.600 கோடி செலவில் புதிய பால்வள வளாகமும், உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலையும் கட்டப்பட்டுள்ளது
பாலம்பூரில் பனாஸ் பால்வள தொழிற்சாலையில் சீஸ் பொருட்கள், மோர் பவுடர் உற்பத்திக்கான தொழிற்சாலைகள் விரிவாக்கப்பட்டுள்ளன
குஜராத்தின் டாமாவில் உயிரி உர, உயிரி எரிபொருள் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது
கிமானா, ரத்தன்புரா-பில்டி, ராதன்பூர், தவார் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள 100 ரன் உற்பத்தித் திறன் கொண்ட 4 சாண எரிவாயு கூடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன
“கடந்த பல ஆண்டுகளாக பனாஸ் பால் பண்ணை உள்ளூர் சமூகங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் அதிகாரமளிக்கும் மையமாக மாறியிருக்கிறது”
“வேளாண்மையில் ஒரு குறியீட்டை உருவாக்கியிருக்கும் பனாஸ்கந்தாவின் பாணி மெச்சத்தக்கது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்ற விவசாயிகள் தண்ணீர் சேமிப்பில் கவனம் செலுத்துகிறார்கள், அதன் பயன் அனைவரும் காணத்தக்கதாக இருக்கிறது”
“குஜராத்தின் 54000 பள்ளிகள், 4.5 லட்சம் ஆசிரியர்கள், 1.5 கோடி மாணவர்களின் வ
Posted On:
19 APR 2022 1:02PM by PIB Chennai
பனாஸ்கந்தா மாவட்டம் தியோதரில் ரூ.600 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பால்வள வளாகத்தையும், உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலையையும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிய பால்வள வளாகம், ஒரு பசுமைத் திட்டமாகும். இந்த பால்வள வளாகத்தில் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுவதோடு, 80 டன் வெண்ணை, ஒரு லட்சம் லிட்டர் ஐஸ்கிரீம், 20 டன் கொழுப்பு நீக்கிய பால் (கோயா), 6 டன் சாக்லேட் உற்பத்தி செய்ய முடியும். உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலை, பிரெஞ்ச் ஃபிரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு சமோசா, பஜ்ஜி போன்ற பலவகையான உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இந்த தொழிற்சாலைகள் உள்ளூர் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் இந்த பிராந்தியத்தின் ஊரகப் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும். பனாஸ் சமூக வானொலி நிலையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு தொடர்பான முக்கிய அறிவியல்பூர்வ தகவல்களை விவசாயிகளுக்கு வழங்க இந்த சமூக வானொலி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வானொலி நிலையம் 1700 கிராமங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலம்பூரில் பனாஸ் பால்வள தொழிற்சாலையில் சீஸ் பொருட்கள், மோர் பவுடர் உற்பத்திக்கு விரிவாக்கப்பட்ட தொழிற்சாலைகளைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத்தின் டாமாவில் நிறுவப்பட்டுள்ள உயிரி உரம், உயிரி எரிபொருள் தொழிற்சாலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கிமானா, ரத்தன்புரா-பில்டி, ராதன்பூர், தவார் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள 100 ரன் உற்பத்தித் திறன் கொண்ட 4 சாண எரிவாயு கூடங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முன் பனாஸ் பால்பண்ணையுடன் தமது தொடர்பு பற்றி டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர், 2013 மற்றும் 2016-ல் அவரது பயணங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். “கடந்த பல ஆண்டுகளாக பனாஸ் பால் பண்ணை உள்ளூர் சமூகங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் அதிகாரமளிக்கும் மையமாக மாறியிருக்கிறது” என்று பிரதமர் கூறினார். இந்தப் பால்பண்ணையின் கண்டுபிடிப்பு ஆர்வத்தின்மீது குறிப்பாக நான் பெருமிதம் கொண்டிருக்கிறேன். இதனை அவர்களின் பல்வேறு பொருட்களில் காண முடியும். தேன் குறித்த அவர்களின் தொடர்ச்சியான கவனமும் பாராட்டத்தக்கது” என்று பிரதமர் கூறினார். பனாஸ்கந்தாவின் மக்கள் உணர்வையும், முயற்சிகளையும் திரு மோடி பாராட்டினார். “பனாஸ்கந்தா மக்களின் கடின உழைப்பையும் உறுதியான உணர்வையும் நான் பாராட்ட விரும்புகிறேன். வேளாண்மையில் ஒரு குறியீட்டை உருவாக்கியிருக்கும் பனாஸ்கந்தாவின் பாணி மெச்சத்தக்கது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்ற விவசாயிகள் தண்ணீர் சேமிப்பில் கவனம் செலுத்துகிறார்கள், அதன் பயன் அனைவரும் காணத்தக்கதாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.
அன்னை அம்பாவின் புனித பூமிக்கு வணக்கம் தெரிவித்து, இன்று பிரதமர் பேச்சை தொடங்கினார். பனாஸ் பெண்களின் ஆசிகள் பற்றி குறிப்பிட்ட அவர், அசைக்க முடியாத அவர்களின் உணர்வுக்கு நன்றி தெரிவித்தார். கிராமப்புற பொருளாதாரத்தையும், இந்தியாவின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரமளித்தலையும் எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதை, தற்சார்பு இந்தியா இயக்கத்தை கூட்டுறவு இயக்கம் எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதை ஒருவர் இங்கு நேரடியாகவே உணர முடியும் என்று பிரதமர் கூறினார். காசியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற முறையில் பனாஸ் பால்பண்ணைக்கும், வாரணாசியிலும் ஒரு வளாகத்தை ஏற்படுத்தியுள்ள பனாஸ்கந்தா மக்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
பனாஸ் பால் பண்ணை செயல்பாட்டின் விரிவாக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பனாஸ் பால்பண்ணை வளாகம் சீஸ் மற்றும் மோர் உற்பத்தி தொழிற்சாலை என அனைத்தும் பால்பண்ணை விரிவாக்கத்தில் முக்கியமானவை என்றார். உள்ளூர் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க பிறவகையான ஆதாரங்களையும் பயன்படுத்தலாம் என்பதை பனாரஸ் பால்பண்ணை நிருபித்துள்ளது. உருளைக்கிழங்கு, தேன் மற்றும் இவை தொடர்பான பொருட்கள் விவசாயிகளின் விதியை மாற்றியிருக்கின்றன என்று அவர் கூறினார். இது உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற இயக்கத்திற்கு வலு சேர்ப்பதாக கூறிய அவர், உணவு, எண்ணெய் மற்றும் மணிலாவுக்கு இந்தப் பால் பண்ணையின் விரிவாக்கம் இருப்பதை சுட்டிக்காட்டினார். கோபர்தானின் பால் பண்ணை திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த அவர், இதுபோன்ற தொழிற்கூடங்களை நாடுமுழுவதும் நிறுவுவதன் மூலம் கழிவுப் பொருட்களை செல்வமாக்கும் அரசின் முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் பாராட்டினார். இந்த திட்டங்கள் கிராமங்களில் தூய்மையை பராமரிக்க பயன்படும் என்றும், சாண எரிவாயு மூலம் விவசாயிகளுக்கு வருவாய் வரும் என்றும், இயற்கை உரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பூமியை பாதுகாக்க முடியும் என்றும் அவர் கூறினார். இத்தகைய முயற்சிகள் நமது கிராமங்களையும் நமது பெண்களையும் அன்னை பூமியையும் வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
குஜராத்தின் முன்னேற்றங்கள் குறித்து பெருமிதம் கொண்ட பிரதமர், கல்வி, பகுப்பாய்வு மையத்திற்கு நேற்றைய தமது பயணம் குறித்து விவரித்தார். இந்த மையம் முதலமைச்சர் தலைமையின் புதிய உச்சங்களை தொட்டுள்ளதாக அவர் கூறினார். குஜராத்தின் 54000 பள்ளிகள், 4.5 லட்சம் ஆசிரியர்கள், 1.5 கோடி மாணவர்களின் வலுவான துடிப்புமிக்க மையமாக இந்த மையம் இன்று மாறியுள்ளது. இந்த மையம் செயற்கை நுண்ணறிவு, கருவி வழி கற்றல், மாபெரும் தரவுகள் பகுப்பாய்வு ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் பள்ளிகளுக்கான வருகை 26 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த வகையான திட்டங்கள் நாட்டின் கல்வி வரைபடத்தில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறிய பிரதமர், கல்வி தொடர்பானவர்கள், அதிகாரிகள், இதர மாநிலங்கள், இத்தகைய வசதியை ஆய்வு செய்து ஏற்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
குஜராத்தி மொழியிலும் பிரதமர் பேசினார். பனாஸ் பால்பண்ணையின் முன்னேற்றம் குறித்து மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சி தெரிவித்த அவர், பனாஸ் பெண்களின் உணர்வை பாராட்டினார். தங்களின் கால்நடைகளை குழந்தைகள் போல் கவனிக்கும் பனாஸ்கந்தா பெண்களுக்கு அவர் தலை வணங்கினார். பனாஸ்கந்தா மக்களுடனான நேசத்தை உறுதி செய்த பிரதமர் தாம் எங்கு சென்றாலும் அவர்களுடனான உறவு எப்போதும் இருக்கும் என்றார். “உங்களின் துறைகளில் ஒரு பங்குதாரர் போல் உங்களுடன் நான் இருப்பேன்” என்று பிரதமர் கூறினார்.
நாட்டின் புதிய பொருளாதார சக்தியை பனாஸ் பால்பண்ணை உருவாக்கி உள்ளது என்று கூறினார். உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா (சோமநாத்திலிருந்து, ஜெகன்னாத் வரை), ஆந்திரப்பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்க்கும் சமூகங்களுக்கு பனாஸ் பால் பண்ணை இயக்கம் உதவி செய்வதாக பிரதமர் கூறினார். இந்த பால் பண்ணை விவசாயிகளின் வருவாய்க்கு தற்போது பங்களிப்பு செய்கிறது. பாரம்பரிய உணவு தானியங்கள் மூலமான, குறிப்பாக குறைவான நிலத்தையும், கடுமையான நிபந்தனைகளையும் கொண்ட விவசாயிகளின் வருவாயை விட, 8.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பால் உற்பத்தியுடன் விவசாயிகளுக்கு அதிக வருவாய்க்கு வழியாக பால் பண்ணை உள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடி பணப் பரிமாற்றம் செய்வது பற்றி குறிப்பிட்ட பிரதமர், கடந்த காலத்தில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே பயனாளிகளை சென்றடைகிறது என்று முந்தைய காலத்தின் பிரதமர் கூறிய நிலைமை போல் இல்லாமல் தற்போது பயன்கள் முழுமையாக பயனாளிகளை சென்றடைகிறது என்றார்.
இயற்கை வேளாண்மையில் தமது கவனத்தை உறுதி செய்த பிரதமர், தண்ணீர் சேமிப்பு மற்றும் சொட்டுநீர் பாசனத்தை பனாஸ்கந்தா ஏற்றிருப்பதை நினைவுகூர்ந்தார். தண்ணீரை ‘பிரசாதமாகவும்’, தங்கமாகவும் கருதுகின்ற நிலையில், 2023 சுதந்திர தினம் வரையிலான, சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவுக்குள் 75 பெரிய ஏரிகளை கட்டமைக்குமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
***************
(Release ID: 1817971)
(Release ID: 1818068)
Visitor Counter : 194
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam