நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

6 ஆண்டுகளில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், 1,33,995 கணக்குகளுக்கு ரூ.30,160 கோடிக்கும் மேற்பட்ட தொகைக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted On: 05 APR 2022 8:00AM by PIB Chennai

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் ஆறாம் ஆண்டை நாம் கொண்டாடி வரும் நிலையில், தொழில்முனைவோர் குறிப்பாக பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினரின் விருப்பங்களை இத்திட்டம் எவ்வாறு நிறைவேற்றியுள்ளது என்பதையும், இத்திட்டத்தின் சாதனைகளையும், முக்கிய அம்சங்களையும் சற்று பார்க்கலாம்.

ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பெண் தொழில்முனைவோர்கள் எதிர்நோக்கும் சவால்களை கருத்தில் கொண்டும், அடிமட்டத்தில் உள்ளவர்களை தொழில்முனைவோராக்கி, பொருளாதார அதிகராப்படுத்துதல் மற்றும் வேலை உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டும், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கப்பட்டது. 2019-20-ல், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம், 15-வது நிதி ஆணையத்தின் 2020-25 காலத்திற்கு ஏற்ப முழு காலத்திற்கும் நீட்டிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியையொட்டி மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் விடுத்துள்ள செய்தியில், “ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் 6-வது ஆண்டு நிறைவை நாம் நினைவு கூரும் வேளையில், இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1.33 லட்சத்துக்கும்  மேற்பட்ட புதிய வேலைவாய்ப்பு உருவாக்குவோர் மற்றும் தொழில்முனைவோருக்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதைக் காணும் போது இதயத்திற்கு இதம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளஆண்டுக் காலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர் பலனடைந்துள்ளனர். வளர்ந்து வரும் இந்தத் தொழில்முனைவோர் தங்களது பங்களிப்பு மூலம் சொத்துக்களை உருவாக்குபவர்களாக மட்டுமின்றி வேலைகளை உருவாக்கும் திறன் பெற்றவர்களாகவும்  இருப்பதை அரசு உணர்ந்துள்ளது என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பலனடையாத தொழில்முனைவோர் அதிக அளவில் பயனடையும் விதமாக திட்டம் வகுக்கப்பட்டிருப்பதுடன், தற்சார்பு இந்தியாவை  உருவாக்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நாம் தடம் பதிக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

 

இந்தியா விரைவாக வளர்ந்து வரும் நிலையில், தொழில்முனையும் ஆற்றல் உள்ளவர்களின், குறிப்பாக பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினரின் நம்பிக்கைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. அவர்கள் தங்களது சொந்த தொழிலைத் தொடங்கி, வளருவதற்கு இது அனுமதிக்கும். இதுபோன்ற தொழில்முனைவோர் நாடு முழுவதும் நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பங்களுக்காகவும் பாடுபடும் எண்ணத்துடன் உள்ளனர். பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினரின் கனவுகளை நனவாக்குவதுடன், தங்களது பாதையில் உள்ள தடங்கல்களை அகற்றும் ஆற்றலையும், உற்சாகத்தையும் இது வழங்குகிறது.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் ஆறாம் ஆண்டை நாம் கொண்டாடி வரும் நிலையில், இத்திட்டம் படைத்துள்ள  இத்திட்டத்தின் சாதனைகளையும், முக்கிய அம்சங்களையும் பார்க்கலாம்.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் நோக்கம், பெண்கள், ஷெட்யூல்டு பிரிவினர், பழங்குடியினரின் தொழில்முனைவை ஊக்குவிப்பதாகும். உற்பத்தி, சேவைகள், வர்த்தகத் துறை, வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில், தொழில் தொடங்க இது உதவும்.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் நோக்கம்;

 

•           பெண்கள், ஷெட்யூல்டு பிரிவினர், பழங்குடியினரின் தொழில்முனைவை ஊக்குவிப்பது,

•           உற்பத்தி, சேவைகள், வர்த்தகத் துறை, வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில், பசுமை தொழில் தொடங்க கடன்கள் வழங்குதல்

•           ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை குறைந்தபட்சம் ஒரு ஷெட்யூல்டு வகுப்பு / பழங்குடியினருக்கு மற்றும்  குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்கு வணிக வங்கிகளின் தலா ஒரு கிளை மூலம் கடன்களை வழங்குதல்

ஏன் ஸ்டாண்ட் அப் இந்தியா?

பெண்கள், ஷெட்யூல்டு பிரிவினர், பழங்குடியினர் தொழில் தொடங்கவும், கடன்களைப் பெறவும், தொழிலை வெற்றிகரமாக நடத்த தேவைப்படும் மற்ற ஆதரவுகளையும் பெறுவதில் எதிர்நோக்கும் சவால்களை ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தொழில்களை நடத்த தேவையான சூழலை உருவாக்க இத்திட்டம் முனைந்துள்ளது. வங்கி கிளைகளை அணுகி கடன்களைப் பெற்று தொழில் தொடங்க இத்திட்டம் உதவுகிறது. அனைத்து வணிக வங்கிகளும் இத்திட்டத்தின் கீழ் மூன்று வழிகளில் கடன் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது

•           நேரடியாக கிளையில் அல்லது

•           ஸ்டாண்ட் அப் இந்தியா தளம் மூலம் (www.standupmitra.in) அல்லது

•           முதன்மை மாவட்ட மேலாளர் மூலம்.

கடன் பெற தகுதியானவர்கள் யார்?

•           எஸ்சி/எஸ்டி மற்றும்/அல்லது மகளிர் தொழில்முனைவோர், 18 வயதுக்கு மேற்பட்டோர்;

•           பசுமை கள திட்டங்களுக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும். இச்சூழலில், உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறை, வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில் முதல் முறை பயனாளி தொழில் தொடங்கலாம்;

•           தனிநபர் அல்லாத நிறுவனங்கள் விஷயத்தில், 51% பங்குகள் எஸ்சி/எஸ்டி மற்றும்/அல்லது மகளிர் தொழில்முனைவோர்  ஆகியோரில் ஒருவர் வசம் இருக்க வேண்டும்;

•           கடன் பெறுபவர்கள் எந்த வங்கியிலோ/நிதி நிறுவனத்திலோ கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர்களாக இருக்கக்கூடாது;

•           15% வரையிலான விளிம்பு தொகை மத்திய/மாநில திட்டங்களில் வழங்கப்பட வேண்டும். திட்டச் செலவில் குறைந்தபட்சம் 10% பயனாளியின் சொந்த பங்களிப்பாக இருக்க வேண்டும்.

கைதூக்கி விடும் ஆதரவு

கடன் பெறுவதற்கு வங்கிகளுடன் தொடர்பு ஏற்படுத்துவது தவிர, இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி உருவாக்கியுள்ள www.standupmitra.in தளமும் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுகிறது. வங்கிகளின் விதிமுறைப்படி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் போன்றவற்றுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், திறன் மையங்கள், ஆதரவு மையங்கள், தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்ட மையங்கள், மாவட்ட தொழில் மையங்கள் ஆகியவற்றின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் மாற்றங்கள்

மத்திய நிதியமைச்சர் 2021-22 நிதியாண்டின் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டதற்கு இணங்க, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன;

•           விளிம்புத் தொகையின் அளவு திட்டச் செலவில் 25%_ல் இருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திட்டச் செலவில் குறைந்தபட்சம் 10% பயனாளியின் சொந்த பங்களிப்பாக இருக்க வேண்டும்.

•           வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில் கடன்கள், உதாரணமாக மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்ற வேளாண் தொழில்கள், பால் பண்ணை, மீன் வளம், வேளாண் கிளினிக், வேளாண் தொழில் மையங்கள், உணவு மற்றும் வேளாண் பதப்படுத்துதல் போன்றவை. (பயிர்க்கடன்கள், கால்வாய்கள், பாசனம், கிணறு தோண்டுதல் போன்ற நில அபிவிருத்தி தவிர) இவற்றுக்கான சேவைகள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதி பெறும்.

உத்தரவாதக் கட்டணம் இல்லாமல், கடன் பெற மத்திய அரசு, ஸ்டாண்ட் அப் இந்தியாவுக்கான கடன் உத்தரவாத நிதியத்தை உருவாக்கியுள்ளது. கடன் வசதி தவிர, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம், ஆற்றல் உள்ள தொழில்முனைவோரை கைதூக்கி விடுகிறது. இதற்கான விண்ணபங்கள்  (www.standupmitra.in) தளத்தில் கிடைக்கும்.

21.03.2022 நிலவரப்படி இத்திட்டத்தின் சாதனைகள்

•           இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 21.03.2022 வரை, 1,33,995 கணக்குகளுக்கு ரூ.30,160 கோடிக்கும் மேற்பட்ட தொகைக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன

•           ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பயனடைந்த எஸ்சி/எஸ்டி மற்றும் பெண் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 21.03.2022 நிலவரப்படி வருமாறு;

 

(தொகை கோடியில் )

எஸ்சி

எஸ்டி

பெண்கள்

மொத்தம்

கணக்குகளின்

எண்ணிக்கை

வழங்கப்பட்ட

தொகை

கணக்குகளின்

எண்ணிக்கை

வழங்கப்பட்ட

தொகை

கணக்குகளின்

எண்ணிக்கை

வழங்கப்பட்ட

தொகை

கணக்குகளின்

எண்ணிக்கை

வழங்கப்பட்ட

தொகை

19310

3976.84

6435

1373.71

108250

24809.89

133995

30160.45

 

 


(Release ID: 1813460) Visitor Counter : 569