உள்துறை அமைச்சகம்

பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரில் பல ஆண்டுகளுக்கப்பின், பாதுகாப்பு படைகளின் சிறப்பு அதிகாரி சட்டத்தின் கீழ் இருந்த பகுதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்துள்ளது: வடகிழக்கு பகுதி மக்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

Posted On: 31 MAR 2022 3:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளால்வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ம் ஆண்டில் தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கை 74 சதவீதம் குறைந்துள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் முறையே 60 சதவீதம், 84 சதவீதம் குறைந்துள்ளன.

மத்திய அரசின் தொடர் முயற்சிகளால், வடகிழக்கு மாநிலங்களில்  பாதுகாப்பு படை சிறப்பு சட்டம் அமலில் இருந்த பகுதிகள் குறநை்தள்ளது.

அமைதியான மற்றும் வளமான வடகிழக்கு பகுதியை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திரமோடியின் தொலைநோக்கை நனவாக்க, வடகிழக்கு மாநிலங்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்துள்ளார். இதன் காரணமாக தீவிரவாத குழுக்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, ஜனநாயக பாதைக்கு திரும்பி, வடகிழக்கு பகுதியின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் 7,000 தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர்.

தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர போடோ ஒப்பந்தம் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அசாமில் 50 ஆண்டுகால போடோ தீவிரவாத பிரச்னை தீர்க்கப்பட்டது. அதேபோல் என்எல்எப்டி ஒப்பந்தம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போடப்பட்டு திரிபுராவில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டது.

இதுபோல் வடகிழக்கு மாநிலங்களில் அகதிகள் பிரச்சினை மற்றும் எல்லை பிரச்சினைகளை தீர்க்க பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. பாதுகாப்பு படைகளின் சிறப்பு அதிகார சட்டம் திரிபுராவில் கடந்த 2015ம் ஆண்டும், மேகாலயாவில் 2018ம் ஆண்டும் முற்றிலும் அகற்றப்பட்டது.

தற்போது அசாம் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு படைகளின் சிறப்பு அதிகார சட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் முற்றிலுமாக அகற்றப்படுகின்றன. ஒரு மாவட்டத்தில் மட்டும் குறிப்பிட்ட பகுதிகளில் அகற்றப்படுகின்றன.

மணிப்பூரில்  6 மாவட்டங்களில் உள்ள 15 காவல் நிலைய கட்டுப்பாடு பகுதிகள், பிரச்னைக்குரிய பகுதிகள் பட்டியலில் இருந்து நாளை ஏப்ரல் 1முதல் நீக்கப்படுகின்றன.

அருணாச்சலப் பிரதேசத்தில்  கடந்த 2015ம் ஆண்டில் 12 மாவட்டங்களில் பல பகுதிகள் பிரச்னைக்குரிய பகுதிகளாக இருந்தன. தற்போது 5 மாவட்டத்தில் ஒரு சில பகுதிகள் மட்டும் சர்ச்சைக்குரிய பகுதிகளாக உள்ளன. நாகாலாந்து முழுவதும் கடந்த 1995ம் ஆண்டிலிருந்து சர்ச்சைக்குரிய பகுதிகளாக இருந்தன. நாளை முதல் நாகாலாந்தின் 7 மாவட்டங்களில் 15 காவல் நிலைய கட்டுப்பாட்டு பகுதிகள், பிரச்னைக்குரிய பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அயராத முயற்சிகளால், வடகிழக்கு மாநிலங்களில் தற்போது அமைதி மற்றும் வளர்ச்சியை  காணமுடிகிறது. இந்த முக்கியமான தருணத்தில், வடகிழக்கு பகுதி மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811909

                           ****************************************



(Release ID: 1812148) Visitor Counter : 208