மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மன அழுத்தமில்லாமல் தேர்வுகளை உறுதியுடன் எதிர்கொள்ளும் வகையில் தேர்வு குறித்த ஆலோசனை (பரிக்ஷா பே சர்ச்சா) நிகழ்ச்சியை பொது இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று திரு தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார்

Posted On: 28 MAR 2022 8:03PM by PIB Chennai

2022-ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறும் தேர்வு குறித்த ஆலோசனை நிகழ்ச்சியின் 5 வது பதிப்பின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் உரையாடுகிறார் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். -ஆண்டுதோறும் நடைபெறும்  இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை களையவும், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் தனக்கே உரித்தான பாணியில் தனித்துவமான  முறையில் நேரடியாக பதிலளிக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேர்வு குறித்த ஆலோசனைக்கான பொது இயக்கம் என்று குறிப்பிடப்படும் இந்நிகழ்ச்சி  கொவிட்-19 தொற்று பரவலில் இருந்து நாடு விடுபட்டு, நேரடித் தேர்வு முறைக்கு மாறியதை அடுத்து, இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த ஆலோசனையின் முக்கியத்துவத்தை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். 21 ஆம் நூற்றாண்டின் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை கட்டமைப்பதில், இந்நிகழ்ச்சி போன்ற முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், இது ஒரு முறையான நிறுவனமாக மாறி வருகிறது என்றும், இதன் மூலம் பிரதமர் மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடுகிறார் என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஆளுநர் மாளிகைக்குச் சென்று மாநில ஆளுநர்கள் முன்னிலையில் நிகழ்ச்சியை காண உள்ளதாக  அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள்  மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் என்றும், அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா முழுவதும் மட்டுமின்றி, புலம்பெயர்ந்த இந்தியர்களைச் சென்றடையும் வகையில் மற்ற நாடுகளிலும் இந்நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் இயக்கமாக மாற்றுவதன் மூலம், மாணவர்களுக்கு மன அழுத்தமின்றி தேர்வுகளை எதிர்கொள்ள ஊடகங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இளைஞர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘தேர்வு வாரியர்ஸ்’ என்ற பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாக தேர்வு குறித்த ஆலோசனை நிகழ்ச்சி உள்ளது என்பதை திரு பிரதான் எடுத்துரைத்தார். ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மை  கொண்டாடப்படும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், தன்னை முழுமையாக வெளிப்படுத்த அனுமதிக்கும் சூழலை வளர்ப்பதற்கும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தை ஒன்றிணைக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் 5-வது பதிப்பு புதுதில்லியில்  தல்கடோரா மைதானத்தில் காலை 11 மணிக்கு கலந்துரையாடல்  நிகழ்ச்சியாக நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொள்வார்கள் என்று அவர் கூறினார்.

பல்வேறு கருப்பொருள்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட எழுத்துப் போட்டியின் அடிப்படையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், பிரதமரிடம் கேள்விகள் கேட்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக  திரு  பிரதான் தெரிவித்தார். இந்த படைப்பாற்றலுக்கான எழுத்துப் போட்டி கடந்த  2021-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி முதல்  2022-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி வரை MyGov இணையதளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 15.7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள்  படைப்புத்திறன் எழுத்துப் போட்டிக்கு பதிவு செய்திருப்பது குறித்து அமைச்சர் திருப்தி தெரிவித்தார். 

MyGov இணையதளத்தில் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பிரதமரால் எழுதப்பட்ட தேர்வு வாரியர்ஸ் புத்தகத்தில் அடங்கிய தேர்வுக்கு தயாராவோம் என்ற சிறப்பு தொகுப்பு  வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சி கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு குறித்த ஆலோசனையின்  முதல் மூன்று பதிப்புகள் கலந்துரையாடல்  வடிவத்தில் புது தில்லியில் நடைபெற்றன. பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் முதலாவது பதிப்பு "பரிக்ஷா பே சர்ச்சா 1.0" 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடனான இந்த உரையாடல் நிகழ்ச்சியின் இரண்டாவது  பதிப்பு "பரிக்ஷா பே சர்ச்சா 2.0" 2019-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதியும், மூன்றாவது பாதிப்பு  2020-ம் ஆண்டு ஜனவரில் 20-ம் தேதியும்  நடைபெற்றது. கோவிட் 19 தொற்று பரவல் காரணமாக, நான்காவது பதிப்பு  2021-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவைகள் (DD National, DD News, DD India), வானொலி அலைவரிசைகள், தொலைக்காட்சி சேனல்கள், EduMinofIndia, narendramodi, pmoindia, pibindia, தூர்தர்ஷன் நேஷனல், MyGovIndia, DDNews, ராஜ்யசபா டிவி, ஸ்வயம் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810663

***************



(Release ID: 1810836) Visitor Counter : 185