இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழா 2022-ன் தேசியச் சுற்றின் தொடக்க அமர்வில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் இன்று உரையாற்றினார்

Posted On: 10 MAR 2022 2:49PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழா 2022-ன் 3-வது பதிப்பின் தேசியச் சுற்று தொடக்க அமர்வில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் திரு நிசித் பிரமானிக், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறைச் செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி, மாநிலங்களவைத் தலைமைச் செயலாளர் திரு பி சி மோடி மற்றும் இதர அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மார்ச் 11, 2022 அன்று நடைபெறவுள்ள நிறைவு விழாவில்மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா உரையாற்றுவார். மேலும், முதல் மூன்று தேசிய வெற்றியாளர்கள் சபாநாயகர் முன் பேசுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

இன்றைய நிகழ்ச்சியில் பேசிய திரு அனுராக் தாகூர், ​​“இந்த ஆண்டு தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவின் கருப்பொருள் புதிய இந்தியாவின் குரலாக இருங்கள் மற்றும் தீர்வுகளைக் கண்டறிந்து கொள்கைக்குப் பங்களிப்பு செய்யுங்கள்என்பதாகும். திடக்கழிவு மேலாண்மை, பசியை நீக்குதல், பாலினச் சமத்துவம், மலிவு விலை மற்றும் தூய்மையான எரிசக்தி, சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், ​​இதுவரை நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பற்றி விவாதிக்கவும், நூறாம் ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் போது இந்தியாவை மாற்றியமைப்பதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு பில்லியன் மக்களின் வாழ்க்கையை மாற்றும் வகையில் சுகாதாரம், விளையாட்டு, ஊடகம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, வெளியுறவுத் துறைகளில் இளைஞர்கள் என்ன செய்ய முடியும்? மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கும் வாழ்க்கை முறையை எளிதாக்கவும்என்ன பங்களிக்க முடியும்? இது குறித்து ஆலோசிக்க உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

சுவாமி விவேகானந்தரின் சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில், இளைஞர்களிடையே தலைமைப் பண்புகளை வளர்ப்பதில் தேசிய இளைஞர் நாடாளுமன்றம் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று திரு தாகூர் மேலும் கூறினார். சுவாமி விவேகானந்தரின் சித்தாந்தத்திலிருந்து உத்வேகம் பெற இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

தற்சார்பு இந்தியா குறித்து திரு தாகூர் பேசுகையில், “பெருந்தொற்றின் போது உலகம் முழுவதும் போராடிக்கொண்டிருந்தபோது, ​​​​இந்தியாவில் நிலைமையைச் சமாளிக்க நாம் அனைவரும் கைகோர்த்து உழைத்தோம். இதன் மூலம், சரியான தொலைநோக்குப் பார்வையுடனும், தலைமைத்துவத்துடனும், அனைத்து இன்னல்களையும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறோம். இளைஞர்களும் இந்த குணத்தை உள்வாங்கி, நாம் 100 ஆண்டுகளை எட்டும்போது சாதனைகளைப் படைக்கும் எண்ணத்துடன் ஒற்றுமையின் உணர்வில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்,” என்றார்.

இளைஞர்களின் உணர்வாலும் பங்கேற்பாலும் மட்டுமே ஒரு நாட்டின் அடித்தளம் இடப்படுகிறது என்றும், நாட்டையும் சமூகத்தையும் புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியவர்கள் இளைஞர்கள் என்றும், இளைஞர்கள் தான் நாட்டின் நிகழ்காலம் என்றும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஸ்கில் இந்தியா, கேலோ இந்தியா மற்றும் ஃபிட் இந்தியா போன்ற திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி ஊக்குவித்துள்ளார், அவை கோடிக்கணக்கான இளைஞர்களுக்குத் திறன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வலுவான இந்தியாவுக்கு அடித்தளமிடுகின்றன என்றும் திரு தாகூர் மேலும் கூறினார். இளைஞர் நாடாளுமன்றத்தின் பல்வேறு சுற்றுகளில் பங்கேற்ற இளைஞர்களை மத்திய அமைச்சர் பாராட்டியதோடு 3-வது பதிப்பின் இறுதிப் போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804717

***************


(Release ID: 1804777) Visitor Counter : 327