பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச மகளிர் தினத்தன்று 2020, 2021 ஆண்டுகளுக்கான தலைசிறந்த 29 பேருக்கு கௌரவம் மிக்க நாரி சக்தி விருதுகளை மாண்புமிகு குடியரசு தலைவர் வழங்க உள்ளார்

Posted On: 07 MAR 2022 11:01AM by PIB Chennai

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா’-வின் ஒரு பகுதியாக ஒரு வார கால சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள் 2022 மார்ச் 1 அன்று புதுதில்லியில் தொடங்கின. இந்த ஒரு வார கால நிகழ்வுகளின் நிறைவாக 2022 மார்ச் 8 அன்று புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சியில் 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கான நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் வழங்குவார். கொவிட்-19 பெருந்தொற்றின் தீவிரத்தன்மை காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவை 2021-ல் நடத்த இயலவில்லை.

மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான துறைகளில் சிறந்து விளங்கவும், பணி செய்யவும் மக்களை ஊக்கப்படுத்துவதற்காகவும், விருது பெறுவோரின் முயற்சிகளைப் பாராட்டுவதற்காகவும் அவர்களுடன் மாண்புமிகு பிரதமர் கலந்துரையாடும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

மகளிருக்கு அதிகாரமளித்தலுக்காக குறிப்பாக நலிந்த மற்றும் விளிம்பு நிலை பெண்களுக்கு சிறப்புமிக்க சேவைகள் செய்தவர்களின் மெச்சதக்க பணிகளை அங்கீகரிக்கும் விதமாக 29 பேருக்கு 28 விருதுகள் (2020 மற்றும் 2021-க்கு தலா 14) வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் கைவினைக் கலைஞர் ஜெயா முத்து, தோடா கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா ஆகியோர் 2020 ஆம் ஆண்டுக்கான விருதினைக் கூட்டாகப் பெறுகிறார்கள்.

2021 ஆம் ஆண்டுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவர் மற்றும் ஆய்வாளரான தாரா ரங்கசாமி விருது பெறுகிறார்.

‘நாரி சக்தி விருது’ என்பது சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மார்க்கத்திற்குக் கிரியா ஊக்கியாக, மாற்றங்களை ஏற்படுத்துகின்ற பெண்களைக் கொண்டாடுவதற்கு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைசிறந்த பங்களிப்புக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சியாகும்.

இந்த சாதனையாளர்கள் தங்களின் கனவுகளை நிறைவேற்ற வயதையோ, புவியியல் தடைகளையோ அல்லது நிதி ஆதாரங்கள் கிடைப்பதையோ பொருட்படுத்தவில்லை. இவர்களின் வெல்வதற்கரிய உணர்வு ஒட்டு மொத்த சமூகத்திற்கு, குறிப்பாக இந்திய இளைஞர்களின் மனங்களில்  பாலின சமத்துவம் இன்மைக்கும், பாகுபாட்டுக்கும் எதிரான கருத்தை வலுவாக்கும். சமூகத்தின் முன்னேற்றத்தில் பெண்களுக்கு சமமான பங்கினை அங்கீகரிக்கும் முயற்சியாக இந்த விருதுகள் விளங்குகின்றன.

2020 ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருது பெற்றவர்கள் தொழில் முனைவோர், வேளாண் துறை, புதிய கண்டுபிடிப்பு, சமூக சேவை, கலைகள் மற்றும் கைவினைகள், வனவிலங்குகள் பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்கள். இதே போல் 2021 ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருது பெற்றவர்கள் மொழியியல், கடல் வாணிகம், கல்வி, இலக்கியம், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்கள்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803480

••••••


(Release ID: 1803535) Visitor Counter : 512