நிதி அமைச்சகம்

வரி செலுத்துவோர் திருத்தப்பட்ட வருமானவரிக் கணக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யலாம் மாற்றுத் திறனாளிகளுக்கு வரிச்சலுகை

Posted On: 01 FEB 2022 12:56PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், வரிசெலுத்துவோர் கூடுதல் வரிசெலுத்துவதாக இருந்தால், தவறுகளை சரிசெய்து, புதிய விவரங்கள் அடங்கிய திருத்தப்பட்ட வருமானவரிக் கணக்கை தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய அனுமதிப்பது என அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

 

இத்திட்டம், தங்களது வருமானத்தை சரியாக மதிப்பிட்டு, தவறுகள் அல்லது விடுதல் எதுவுமின்றி கணக்கை தாக்கல் செய்ய வரிசெலுத்துவோருக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும் என்றும் அவர் கூறினார். தற்போதுள்ள நடைமுறைகளின்படி, வரிசெலுத்துவோர் அவரது வருமானத்தில் ஏதாவது ஒரு பகுதியை தெரிவிக்காமல் இருந்து அதனை வருமானவரித்துறை கண்டுபிடித்தால், அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண நீண்ட, நெடிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், புதிய திட்டம் வரிசெலுத்துவோரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். தாமாக முன்வந்து வரிசெலுத்துவதில் இதுவொரு உறுதியான நடவடிக்கை என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை

மாற்றுத்திறனாளிகளுக்காக அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் காப்பீடு செய்யும்போது, தற்போதுள்ள சட்டங்களின்படி, சம்பந்தப்பட்ட சந்தாதாரர்  உயிரிழக்கும்போதுதான் அந்த மாற்றுத் திறனாளிக்கு முழு தொகையோ அல்லது வருடாந்திர பணப்பட்டுவாடாவோ வழங்கப்படும். ஆனால் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு அவரது பெற்றோரின் வாழ்நாள் காலத்திலேயே ஒட்டுமொத்த தொகையோ அல்லது வருடாந்திர தொகையோ தேவைப்படும் பட்சத்தில், அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் 60 வயதை எட்டும்போதே அதனை அந்த மாற்றுத் திறனாளிக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மாநில அரசு ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பை அதிகரித்து வழங்கும் விதமாக, மாநில அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டக் கணக்கில், வேலை வழங்கும் துறையால் செலுத்தப்படும் பங்களிப்பு மீதான வரிக்கழிவு சலுகையை 10 சதவீதத்திலிருந்து  14 சதவீதமாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இணைய டிஜிட்டல் சொத்துக்களுக்கு வரி விதிப்பு திட்டம்

இணைய டிஜிட்டல் சொத்துக்களில் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வருவதால், “எந்தவொரு இணைய டிஜிட்டல்  சொத்தையும் மாற்றும் போது கிடைக்கும் எந்தவொரு வருமானத்திற்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளதுஎன திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

வழக்கு மேலாண்மை

வரிசெலுத்துவோரும், வருமான வரித்துறையும் மீண்டும் மீண்டும் வழக்குத் தொடர்வதைக் குறைக்க, ஒரே மாதிரியான சட்ட அம்சத்தைக் கொண்ட வழக்கில், உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் அது பற்றி முடிவு செய்யும் வருமான வரித்துறை மேல்முறையீடு செய்வதை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்மேலும், கூட்டுறவு சங்கங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி விகிதம் 18.5 லிருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிதாக தொழில் தொடங்கிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை  வழங்கும் காலம்  மேலும் ஓராண்டு  நீட்டிக்கப்படும் என்றும் நிதியமைச்சர்  தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794131

------ (Release ID: 1794365) Visitor Counter : 391