பிரதமர் அலுவலகம்

தேசியப் பெண்கள் ஆணையத்தின் 30-வது நிறுவன தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

"நாட்டின் அனைத்து மகளிர் ஆணையங்களும் தங்கள் நோக்கத்தை அதிகரித்து, தங்கள் மாநிலப் பெண்களுக்கு ஒரு புதிய வழியைக் காட்ட வேண்டும்"

"தற்சார்பு இந்தியா பிரச்சாரம் பெண்களின் திறன்களை நாட்டின் வளர்ச்சியுடன் இணைக்கிறது"

"2016-க்குப் பிறகு உருவான 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில், 45 சதவீத நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குனராவது உள்ளனர்"

"2015 முதல், 185 பெண்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் விருது பெற்றவர்களில் 34 பெண்கள் இடம் பெற்றுள்ளனர், இது ஒரு சாதனை"

"அதிகபட்ச மகப்பேறு விடுப்பு வழங்கும் நாடுகளின் பட்டியலில் இன்று இந்தியாவும் உள்ளது"

"பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு முன்னுரிமை கொடுக்காத போதெல்லாம், அத்தகைய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதை பெண்கள் உறுதிசெய்துள்ளனர்"

Posted On: 31 JAN 2022 5:50PM by PIB Chennai

தேசிய மகளிர் ஆணையத்தின் 30-வது நிறுவன தின நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ‘ஷி தி சேஞ்ச் மேக்கர்’ (மாற்றத்தை உருவாக்கும் பெண்) எனும் தலைப்பிலான நிகழ்ச்சியின் கருப்பொருள் பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டதாகும். மாநில மகளிர் ஆணையங்கள், மாநில அரசுகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர் மற்றும் வணிக சங்கங்கள் இதில் கலந்து கொண்டனர். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை  அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி; இணை அமைச்சர்கள் டாக்டர் முன்ஜப்பரா மகேந்திரபாய் கலுபாய் மற்றும் திருமதி தர்ஷனா ஜர்தோஷ்; தேசிய மகளிர் ஆணையத் தலைவர் திருமதி ரேகா சர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தேசிய மகளிர் ஆணையத்தின் 30-வது நிறுவன தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார். “30 ஆண்டுகள் எனும் மைல்கல், ஒரு தனிநபரின் வாழ்க்கையில் அல்லது ஒரு நிறுவனத்தில் மிகவும் முக்கியமானது. புதிய பொறுப்புகள் மற்றும் புதிய ஆற்றலுடன் முன்னேறுவதற்கான நேரம் இது”, என்றார் அவர்.

 

இன்று, இந்தியாவை மாற்றுவதில், பெண்களின் பங்கு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். எனவே, தேசிய மகளிர் ஆணையத்தின் பணியை விரிவுபடுத்துவது காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார். நாட்டின் அனைத்து மகளிர் ஆணையங்களும் தங்கள் நோக்கத்தை அதிகரித்து, தங்கள் மாநில பெண்களுக்கு ஒரு புதிய வழியைக் காட்ட  வேண்டும் என்றார்.

 

பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் பலம் சிறிய உள்ளூர் தொழில்கள் அல்லது சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் தொழில்களில் ஆண்களுக்கு நிகரான பங்கு பெண்களுக்கும் உண்டு. பழைய சிந்தனைபெண்களையும் அவர்களது திறமைகளையும் வீட்டு வேலைகளில் கட்டுப்படுத்திவிட்டதாக பிரதமர் கூறினார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற இந்த பழைய சிந்தனையை மாற்ற வேண்டியது அவசியம். மேக் இன் இந்தியா இன்று இதைச் செய்கிறது. தற்சார்பு இந்தியா பிரச்சாரம் பெண்களின் திறனை நாட்டின் வளர்ச்சியுடன் இணைக்கிறது, என்றார் அவர். முத்ரா திட்டத்தின் 70 சதவீத பயனாளிகள் பெண்கள் என்பதால் இந்த மாற்றம் நன்றாக புலப்படுகிறது. கடந்த 6-7 ஆண்டுகளில் பெண் சுயஉதவி குழுக்களின் எண்ணிக்கை நாட்டில்  மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல, 2016-க்குப் பிறகு உருவான 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில், 45 சதவிகிதம் நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது உள்ளார் என்று அவர் கூறினார்.

 

புதிய இந்தியாவின் வளர்ச்சிச்  சுழற்சியில் பெண்களின் பங்களிப்பு இடைவிடாமல் அதிகரித்து வருவதாக பிரதமர் கூறினார். சமூகத்தின் தொழில்முனைவில் பெண்களின் இந்த பங்கை ஊக்குவிக்கவும், அதிகபட்ச அங்கீகாரத்தை வழங்கவும் மகளிர் ஆணையங்கள் நடவடிக்கை எடுக்க  வேண்டும். 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 185 பெண்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பல்வேறு பிரிவுகளில் விருது பெற்றவர்களில் 34 பெண்கள் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளனர். பெண்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு விருதுகள் கிடைத்துள்ளதால் இது ஒரு சாதனையாகும் என்றார் பிரதமர்.

 

கடந்த 7 ஆண்டுகளில், நாட்டின் கொள்கைகள் அதிகளவில் பெண்கள் நலன் சார்ந்ததாக மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். இன்று, மகப்பேறு விடுப்பு அதிகம் வழங்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. சிறுவயதில் திருமணம் செய்து வைப்பது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்க எடுக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் பற்றியும் பிரதமர் பேசினார். 9 கோடி எரிவாயு இணைப்புகள், கழிவறைகள் போன்ற நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார். வீட்டில் உள்ள பெண்களின் பெயரில் பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் நல்ல வீடுகள், கர்ப்ப காலத்தில் ஆதரவு, ஜன்தன் கணக்குகள் உள்ளிட்டவை இந்தியா மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலின் மாறிவரும் முகமாக பெண்களை மாற்றுகிறது.

 

பெண்கள் தீர்மானம் எடுக்கும் போது அதற்கான திசையை மட்டுமே அவர்கள் அமைக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். அதனால் தான் பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு முன்னுரிமை கொடுக்காத போதெல்லாம், அத்தகைய அரசை அதிகாரத்திலிருந்து  வெளியேற்றுவதை பெண்கள் உறுதிசெய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களைச்  சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையுடன் அரசு கையாள்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். கொடூரமான கற்பழிப்பு வழக்குகளில் மரண தண்டனை உட்பட பல தண்டனைகள் வழங்கும்  கடுமையான சட்டங்கள் உள்ளன. விரைவு நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அதிகமான மகளிர் உதவி மையங்கள், 24 மணிநேர உதவி எண்கள், சைபர் குற்றங்களைச் சமாளிக்க போர்டல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

                                                                                *****************

 



(Release ID: 1793958) Visitor Counter : 576