குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்தின் உரை

Posted On: 31 JAN 2022 12:14PM by PIB Chennai

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. கொரோனா வைரசால் ஏற்பட்ட பெருந்தொற்றின் மூன்றாவது ஆண்டில் நாம் இருக்கிறோம். இந்த ஆண்டுகளில் இந்திய மக்கள் ஜனநாயக மாண்புகள், கட்டுப்பாடு, பொறுப்புணர்வு ஆகியவற்றில் அளப்பரிய மதிப்பை வெளிப்படுத்தினார்கள். சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை குறிக்கும் அமிர்தப் பெருவிழாவை இந்தியா கொண்டாடும் நிலையில், ஒவ்வொரு இந்தியரின் மனஉறுதியும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான மாபெரும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இந்த நம்பிக்கையுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்திலிருந்து இந்தியர்கள் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  2. நாடாளுமன்ற இரு அவைகளில் உரையாற்ற இன்று கூடியிருக்கும் தருணத்தில் தங்களின் கடமைகளுக்கு மிக உயரிய முன்னுரிமை அளித்து, இந்தியாவின் உரிமைகளைப் பாதுகாத்த லட்சக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். சுதந்திரத்தின் 75 ஆண்டுக் கால நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிப்பு செய்த மகத்தான அனைத்து ஆளுமைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.
  3. இந்த அமிர்த மஹோத்சவ காலத்தில் நாட்டின் மகத்தான ஆளுமைகள் தொடர்பான சிறப்பு நிகழ்வுகளும் நமக்கு ஊக்கமளித்துள்ளன. குரு தேஜ் பகதூர் அவர்களின் 400-வது பிறந்தநாள், ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாள், வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாள், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்தநாள் ஆகிய புனித விழாக்களைப் பெரும் சிறப்புடன் எனது அரசு கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டிலிருந்து நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23-லிருந்து குடியரசு தின கொண்டாட்டங்களை அரசு தொடங்கி உள்ளது.
  4. கடந்த காலத்தை நினைவில் நிறுத்துவதும், அதிலிருந்து பாடம் கற்பதும் நாட்டின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு சமமான முக்கியத்துவம் கொண்டது  என்பதில் எனது அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. சாஹிப்ஸாதாக்களின் (புதல்வர்கள்) தியாகத்தை நினைவுகூர டிசம்பர் 26 அன்று ‘வீர் பால் தினம்’, ஆகஸ்ட் 14 அன்று ‘பிரிவினையின் பயங்கர நினைவுகள் தினம்’ ஆகியவற்றை கடைபிடிப்பது இந்த சிந்தனையின் பிரதிபலிப்பாகும். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளான நவம்பர் 15 அன்று அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ‘பழங்குடியினர் கவுரவ தினம்’ கொண்டாடவும் அரசு முடிவு செய்தது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. அடுத்த 25 ஆண்டுகளுக்கான தீர்மானங்களுக்கு உறுதியான வடிவம் அளிக்க இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திரத்தின் 75- ஆம் ஆண்டுப் பெருவிழா புனிதமான நிகழ்வாகும். ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்ற மந்திரத்தை பின்பற்றி அடுத்த 25 ஆண்டுகளுக்கான வலுவான அடித்தளத்தைக் கட்டமைக்க எனது அரசு விரைவாக செயல்பட்டு வருகிறது. இந்த அடித்தளம் தொடர்பான மிக முக்கிய தீர்மானம் என்பது அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் பயன்தருகின்ற வலுவான, தற்சார்புடைய இந்தியாவை உருவாக்குவதாகும். கொரோனா கால சவால் என்பது இயன்ற வரை அதிகமான வேகத்தில் நமது இலக்குகளை அடைவதற்கு நமக்கு ஊக்கமளித்தது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. கொவிட் பெருந்தொற்று ஒட்டு மொத்த உலகத்தை பாதித்தது, இந்தியாவையும் பாதித்தது. நமது நேசத்திற்குரிய பலர் நம்மிடமிருந்து பறித்துச் செல்லப்பட்டனர்.  இந்தச் சூழ்நிலைகளில் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், நிர்வாகங்கள், நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நமது விஞ்ஞானிகள், தொழில் முனைவோர் ஓர் அணியாக பணியாற்றினர். அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையேயான இந்தப் பரஸ்பர நம்பிக்கை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு ஆகியவை நமது ஜனநாயகத்தின் பலத்திற்கு முன்னெப்போதும் இல்லாத உதாரணமாக விளங்கின. இதற்காக சுகாதார மற்றும் முன்களப் பணியாளர் அனைவரையும், குடிமக்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
  2. கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் திறனுக்குத் தற்போது நடைபெற்று வரும் கொவிட்-19 தடுப்பூசி திட்டம் தெளிவான ஓர் உதாரணமாக இருக்கிறது. ஓராண்டுக்கும் குறைவான காலத்திலேயே 150 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி நாம் சாதனையைக் கடந்துள்ளோம். மிக அதிகபட்ச தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இன்று நாம் இருக்கிறோம். இந்த இயக்கத்தின் வெற்றி, நமது குடிமக்களுக்குப் பாதுகாப்பை அதிகரித்து நாட்டுக்கு ஓர் கேடயத்தை வழங்கியிருப்பதோடு அவர்களின் மனஉறுதியையும் அதிகப்படுத்தி உள்ளது.
  3. நாட்டின் தகுதியுள்ள குடிமக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் பெற்றிருக்கும் நிலையில், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டுள்ளனர். எஞ்சியுள்ள மக்களையும், ‘வீடு வீடாகச் சென்று’ இயக்கத்தின் மூலம் அரசு அணுகியிருக்கிறது. இந்த மாதத்திலிருந்து தடுப்பூசி திட்டத்தில் 15 முதல் 18 வயது வரையுள்ள பதின்பருவத்தினரும் இணைக்கப்பட்டுள்ளனர். முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ள மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ்கள் செலுத்துவதும் தொடங்கி உள்ளது.
  4. நாட்டில் இதுவரை அவசரகால பயன்பாட்டிற்காக எட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கான உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலும் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒட்டு மொத்த உலகத்தைப் பெருந்தொற்றிலிருந்து விடுவிப்பதற்கும், கோடிக்கணக்கான உயிர்களைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகள் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் உடனடி சவால்களை எதிர்கொள்ளும் நாட்டின் முயற்சிகளுக்கு எல்லையில்லை. எனது அரசு உருவாக்கியிருக்கும் தொலைநோக்குத் தீர்வுகள் எதிர்காலத்திற்கும் கூட பயனுள்ளவையாக இருக்கும். ரூ.64,000 கோடி ஒதுக்கீட்டுடன் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கட்டமைப்புத் திட்டத்தின் தொடக்கம் இதற்கு பாராட்டத்தக்க உதாரணமாகும். இது தற்போதைய சுகாதார தேவைகளை எதிர்கொள்ள உதவுவதோடு மட்டுமின்றி எதிர்காலத்தில் எந்த நெருக்கடிக்கும் நாட்டை தயார்படுத்தவும் உதவும்.
  2. எனது அரசின் மக்கள் நல கொள்கைகள் காரணமாக சாமானிய மக்களும் தற்போது எளிதாக சுகாதார வசதிகளைப் பெற முடிகிறது. 80,000-க்கும் அதிகமான சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களும் கோடிக்கணக்கான ஆயுஷ்மான் பாரத் அட்டைகளும் ஏழைகள் சிகிச்சைப் பெறுவதற்கு வெகுவாக உதவி செய்கின்றன. 8,000-க்கும் அதிகமான மக்களுக்கு மருந்தக மையங்கள் மூலம் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதால் சிகிச்சைக்கான செலவை அரசு குறைத்துள்ளது. எளிதாகவும், அணுகும் தூரத்திலும் சுகாதார சேவைகள் கிடைப்பதற்கு ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்’ முக்கியமானதாக இருக்கிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. கொரோனா காலத்தில் இந்திய மருந்துத் துறை அதன் நற்பண்பை நிரூபித்தது. தற்போது இந்திய மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகள் 180-க்கும் அதிகமான நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் இந்தத் துறையில் இந்தியாவுக்கு மிகவும் விரிவான வாய்ப்புக்கள் இருக்கின்றன. மருந்து உற்பத்தித் துறைக்கு எனது அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் இந்த வாய்ப்புக்களை மேலும் விரிவுபடுத்தும் ஆராய்ச்சிக்கும் மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கும்.
  2. அரசின் முயற்சிகள் காரணமாக யோகா, ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவ முறைகளும் செல்வாக்கு மிக்கவையாக மாறி வருகின்றன. 2014-ல் ரூ.6,600 கோடி மதிப்புள்ள ஆயுஷ் பொருட்களை நாடு ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி தற்போது ரூ.11,000 கோடிக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக உலக சுகாதார அமைப்பின் ‘பாரம்பரிய மருத்துவ உலகளாவிய மையத்தை’ இந்தியா அமைக்கவிருக்கிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. நமது அரசியல் சட்டத்தின் முதன்மை சிற்பியான பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் இவ்வாறு கூறினார்: “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையிலான சமூகம் எனது கோட்பாடாகும்… ஜனநாயகம் என்பது வெறுமனே அரசின் வடிவமல்ல… முக்கியமாக சக மனிதர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்கும் அணுகுமுறையாகும்”

பாபா சாகேபின் இந்த கோட்பாடுகளை எனது அரசு அதன் குறிக்கோளாகக் கருதுகிறது. சமூக நீதி, சமத்துவம், மரியாதை, சமமான வாய்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்த்யோதயா மந்திரத்தில் எனது அரசு நம்பிக்கைக் கொண்டுள்ளது. எனவே அரசின் கொள்கைகளில் கிராமங்களுக்கு, ஏழைகளுக்கு, ஷெல்யூல்டு வகுப்பினருக்கு, ஷெல்யூல்டு பழங்குடியினருக்கு, பின் தங்கிய சமூகங்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியாவின் இந்த உணர்வு சமீப ஆண்டுகளில் பத்ம விருதுகளுக்கான தெரிவில் தெளிவாகப் பிரதிபலித்துள்ளது. இந்தியா போன்ற பன்மைத்துவ நாட்டில் நாடு முழுவதுமுள்ள மக்கள் நாட்டுக்கான சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவின் பலத்தைப் பிரதிபலிக்கிறார்கள்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. கொரோனா நெருக்கடியின்போது பெரும்பாலான பெரிய நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையை அனுபவித்து பட்டினியை எதிர்கொண்டன. ஆனால் உணர்வுபூர்வமான எனது அரசு 100 ஆண்டுகளில் மிகவும் மோசமான பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பசியில்லாமல் இருப்பதை உறுதி செய்தது. பிரதமரின் வறியோர் நல உணவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் கட்டணமில்லாமல் எனது அரசு உணவுப் பொருட்கள் வழங்குகிறது. இது இரண்டு லட்சத்து அறுபது ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், 19 மாதங்களுக்கு 80 கோடி பயனாளிகளை சென்றடையும் வகையிலான உலகின் மிகப் பெரிய உணவுப் பொருள் விநியோகத் திட்டமாகும். தற்போதைய சூழ்நிலை முழுமையாக உணரப்பட்டு இந்தத் திட்டத்தை 2022 மார்ச் வரை அரசு நீட்டித்துள்ளது.
  2. ஏழைகளின் சுயமரியாதையை விரிவுபடுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கொரோனா காலத்தில் பிரதமரின் – ஸ்வ-நிதி திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தெருவோர வியாபாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 28 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு 2900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தெருவோர வியாபாரிகளை இணையம் வழியாக உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுடனும் அரசு இணைத்துள்ளது. மேலும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசு இ-ஷ்ரம் இணையப்பக்கத்தை தொடங்கி உள்ளது. இதில் இதுவரை 23 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இணைந்துள்ளனர்.
  3. குடிமக்களுக்கு அதிகாரமளிக்க எனது அரசின் உந்துதலால் தொடங்கப்பட்ட ஜன் தன் – ஆதார் – மொபைல் அல்லது ஜேஏஎம் எனும் மும்முனைத் திட்டத்தில் தாக்கத்தை நாம் காண முடிந்துள்ளது. வங்கி நடைமுறையுடன் 44 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் இணைந்திருப்பதன் மூலம் பெருந்தொற்று காலத்தில் நேரடி பணப்பரிமாற்றத்தில் கோடிக்கணக்கான ஏழைகள் பயனடைந்தனர்.
  4. டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கிடையே நாட்டின் யுபிஐ தளத்தின் வெற்றிக்கான அரசின் தொலைநோக்குப் பார்வையையும் நான் பாராட்டுகிறேன். 2021 டிசம்பரில் யுபிஐ மூலம் நாட்டில் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. தொழில் நுட்பத்தை ஏற்பதிலும் விரைவான மாற்றத்திலும் நமது மக்கள் எவ்வளவு வேகமாக இருக்கிறார்கள் என்பதற்கு இது தெளிவான உதாரணமாகும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. அடிப்படை வசதிகளை வழங்குவது, ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதற்கும், அவர்களின் கவுரவத்தை அதிகரிப்பதற்குமான வழிகள் என எனது அரசு கருதுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பயனாக பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இரண்டு கோடிக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவில் ஒரு கோடியே பதினேழு லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  2. ‘வீட்டுக்கு வீடு குடிநீர்’ என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஜல்ஜீவன் இயக்கம் மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பெருந்தொற்றால் ஏற்பட்ட தடைகளையும் கடந்து சுமார் ஆறு கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர்க்குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நமது கிராமங்களில் பெண்களுக்கும், சகோதரிகளுக்கும், புதல்விகளுக்கும் இது மிகப் பெரும் பயனைத் தந்துள்ளது.
  3. கிராமப் பகுதிகளில் மக்களுக்கு சொத்து ஆவணங்கள் கிடைக்கச் செய்வதற்காக தொடங்கப்பட்ட ஸ்வமிதா திட்டமும் மிகச் சிறந்த முன்முயற்சியாகும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 27,000 கிராமங்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சொத்து அட்டைகள், சொத்துப் பிரச்சனைகளை தடுப்பதோடு மட்டுமின்றி கிராமப்புற மக்களுக்கு வங்கிகளின் உதவி எளிதில் கிடைப்பதற்கும் துணை புரிகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

22.   விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கவும், நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் எனது அரசு அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.  பெருந்தொற்றுக் காலத்திலும், 2020-21-ல் நமது விவசாயிகள் 30 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்களையும், 33 கோடி டன் தோட்டக்கலை பயிர்களையும் உற்பத்தி செய்துள்ளனர்.  சாதனை அளவாக உற்பத்திச் செய்யப்பட்ட பொருட்களுக்கு இணையாக அரசு கொள்முதலும் சாதனை அளவாக அமைந்தது.  ராபி பருவத்தில் 433 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை அரசு கொள்முதல் செய்ததன் மூலம் சுமார் 50 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர்.  கரீப் பருவத்தில் சாதனை அளவாக சுமார் 900 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதன் மூலம் ஒரு கோடியே 30 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர். 

23.   அரசின் முயற்சிகளால் நமது வேளாண் ஏற்றுமதியும் சாதனை அளவை எட்டியது.  வேளாண் ஏற்றுமதி 2020-21 ஆம் ஆண்டில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட வளர்ச்சியை பதிவு செய்ததோடு, ஏறத்தாழ 3 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. 

24.   தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் தேன் உற்பத்தி ஆகியவை, விவசாயிகள் வருவாய் ஈட்டுவதற்கான புதிய ஆதாரங்களாக உருவெடுத்ததோடு, அவர்கள் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்புகளையும் வழங்கியுள்ளன.  தேன் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதன் காரணமாக, உள்நாட்டு தேன் உற்பத்தி 2020-21 ஒரு லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன்னை எட்டி, 2014-15-ல் இருந்ததை விட, சுமார் 55 சதவீதம் அதிகரித்தது.   2014-15-வுடன் ஒப்பிடுகையில் தேன் ஏற்றுமதி அளவும் 102 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

25.  விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுபடியாகக்கூடிய விலை கிடைப்பதை உறுதிசெய்ய, அவர்களது உற்பத்திப் பொருட்கள் உரிய சந்தையை சென்றடையச் செய்வதும் அவசியமாகும்.  அந்த வகையில், அந்த வகையில் கிஸான் ரயில் சேவை தொடங்கப்பட்டதன் வாயிலாக, விவசாயிகள் வளம் பெறுவதற்கான புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டது.  கொரோனா காலக்கட்டத்தில் இந்திய ரயில்வே, 150-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில்  1,900-க்கும் மேற்பட்ட கிஸான் ரயில்களை இயக்கியதன் மூலம், காய்கறிகள், பழங்கள்  போன்ற எளிதில் அழுகும் பொருட்கள் மற்றும் பால் உள்ளிட்ட சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  சிந்தனைகள் புதுமையாக இருந்தால், ஏற்கனவே உள்ள ஆதாரங்களைவிட புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்கலாம் என்பதற்கு இதுவொரு உதாரணமாகும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

26.   இந்த தொடர் வெற்றி மற்றும் வேளாண் துறையை வலுப்படுத்தியதற்காக நாட்டின் சிறு விவசாயிகளுக்கு அதிக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன்.  விவசாயிகளில் 80 சதவீத அளவுக்கு உள்ள சிறு விவசாயிகளின் நலன் அரசுக்கு எப்போதும் முக்கியமானதாகும். பிரதமரின் கிஸான் சம்மான் நிதியின் கீழ் (வருவாய் ஆதரவு திட்டம்)  ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி, 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த முதலீடு மூலம் வேளாண் துறை தற்போது பெரும் மாற்றத்தை கண்டுள்ளது.   பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய மாற்றங்களை மேற்கொண்டதன் மூலமும் நாட்டின் சிறு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.  இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது முதல்,  ரூ. ஒரு லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகை சுமார் 8 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. 

27.   விளை நிலங்களுக்கு அருகே தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க இதுவரை இல்லாத அளவுக்கு அரசு அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.  ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதன நிதியை கொண்ட வேளாண் கட்டமைப்பு நிதியத்தின்கீழ், ஆயிரக்கணக்கான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை உறுதி செய்ய ஏதுவாக, எனது அரசு, சமையல் எண்ணெய் – எண்ணெய் பனை சாகுபடிக்கான தேசிய இயக்கத்தை 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கியுள்ளது.  இயற்கை வேளாண்மை, ரசாயன கலப்பற்ற வேளாண்மை மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும் அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

28.   2023 ஆம் ஆண்டை ஐநா சபை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்திருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.  இந்த சர்வதேச சிறுதானிய ஆண்டை விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், உணவு தொழில்துறை மற்றும் சாமானிய மக்களுடன் இணைந்து பெரிய அளவில் எனது அரசு திட்டமிட்டுள்ளது.

 

29.  மழை நீர் சேகரிப்புக்கும் எனது அரசு உண்மையான அக்கறையுடன் பாடுபட்டு வருகிறது.  மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புக்களை உருவாக்கவும்,  நாட்டின்  பாரம்பரிய நீர் ஆதாரங்களை மீட்டெடுக்கவும், சிறப்பு பிரச்சார இயக்கங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  பிரதமரின் கிரிஸி சின்சாயி யோஜனா மற்றும்  அடல் பூ-ஜல் யோஜனா போன்ற பல்வேறு திட்டங்களின் உதவியுடன் நாட்டில் 64 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி கொண்டவையாக மேம்படுத்தப்பட்டுள்ளன.  நதிகள் இணைப்புத் திட்டத்தையும் அரசு முன்னெடுத்து வருகிறது.  அண்மையில், கென்-பெட்டுவா இணைப்புத் திட்டத்தை  ரூ.45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டம் புந்தேல்கண்ட் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண உதவிகரமாக இருக்கும். 

மாண்புமிகு உறுப்பினர்களே,

30.   கிராமப்புற பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பதில் பெண்கள் அதிகளவில் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.  2021-22-ல் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை நிதியுதவியாக வழங்கியுள்ளன.   இது 2014-15-ல் வழங்கப்பட்டதை விட 4 மடங்கு அதிகமாகும்.  அத்துடன் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு அரசு பயிற்சி அளித்து, அவர்களை ‘வங்கி நண்பர்’ பங்குதாரர்களாக மாற்றியுள்ளது.  இந்த பெண்கள், கிராமப்புற குடும்பங்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று வங்கி சேவைகளை வழங்கி வருகின்றனர். 

31.   பெண்களுக்கு அதிகாரமளிப்பது எனது அரசின் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாகும்.  உஜ்வாலா திட்டத்தின் வெற்றியை நாம் அனைவரும் கண்கூடாக காண்கிறோம்.  நம்நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தொழில்முனைவோர் ஆற்றல் மற்றும் திறன்கள், “முத்ரா” திட்டத்தின் வாயிலாக, ஊக்குவிக்கப்படுகிறது.  “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்” திட்டம்  பல்வேறு ஆக்கப்பூர்வ விளைவுகளை  ஏற்படுத்தியிருப்பதுடன், பள்ளிகளில் சேரும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஊக்கமளிப்பதாக உள்ளது.  புதல்வர்களையும், புதல்விகளையும் சரிசமமாக பாவிக்க, எனது அரசு, பெண்களின் திருமண வயதை ஆண்களுக்கு இணையாக, 18-லிருந்து 21 ஆக அதிகரிப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 

32.   ஒருதலைபட்சமான முத்தலாக் நடைமுறையை கிரிமினல் குற்றமாக ஆக்கியதன் மூலம் சமுதாயத்தை விடுவிப்பதற்கான தொடக்கத்தை அரசு மேற்கொண்டுள்ளது.  ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமிய பெண்கள் மெஹரம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது.  2014-க்கு முன்பாக சிறுபான்மையின சமுதாயங்களை சேர்ந்த சுமார் 3 கோடி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்ட நிலையில், 2014 –க்கு பிறகு எனது அரசு அதுபோன்ற 4.5 கோடி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்கியுள்ளது.  இந்த நடவடிக்கை பள்ளிப் படிப்பை கைவிடும் இஸ்லாமிய பெண்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்திருப்பதோடு, பள்ளிகளில் சேரும் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

33.   பெண் குழந்தைகள் இடையே கற்கும் திறனை மேம்படுத்த தேசிய கல்விக் கொள்கையில் பாலின உள்ளார்ந்த நிதியத்தை உருவாக்க வகை செய்யப்பட்டுள்ளது.  தற்போது செயல்பட்டு வரும் 33 சைனிக் பள்ளிகள் பெண்குழந்தைகளை சேர்க்க தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.    தேசிய ராணுவ அகாடமியிலும் பெண்களை சேர்க்க அரசு அனுமதி அளித்துள்ளது.  பெண் வீராங்கனைகளின் முதல் அணி ஜூன் 2022 –ல் தேசிய ராணுவ அகாடமியில் இணையும்.  எனது அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் ஊக்கம் காரணமாக பல்வேறு காவல்படைகளிலும் பணியமர்த்தப்படும் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 2014-ல் இருந்ததை விட 2 மடங்குக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மாண்புமிகு உறுப்பினர்களே,

34.   பெரும் புலவர் திருவள்ளுவர் கூறியதை சுட்டிக்காட்ட  விரும்புகிறேன்:

     கற்க கசடறக் கற்பவை கற்றபின்

     நிற்க அதற்குத் தக

அதாவது, கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நடந்துகொள்ள  வேண்டும் என்பதே இதன் பொருள். 

தற்சார்பு இந்தியாவை அடைவது என்ற உறுதிப்பாட்டிற்கு வடிவம் கொடுக்கும் விதமாக, எனது அரசு, நாடுமுழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறது.  இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முக்கிய நுழைவுத் தேர்வுகளை இந்திய மொழிகளில் நடத்தவும், முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  இந்த ஆண்டு 10 மாநிலங்களில் உள்ள 19 பொறியியல் கல்லூரிகளில், 6 இந்திய மொழிகளில் பாடம் கற்பிக்கப்படுகிறது. 

35.   திறன் இந்தியா இயக்கத்தின்கீழ், நாடுமுழுவதும் உள்ள 2 கோடியே 25 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, தொழிற்பயிற்சி நிலையங்கள், வெகுஜன கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரதமரின் திறன் பயிற்சி மையங்கள் வாயிலாக, திறன்பயிற்சி அளிக்கப்படுகிறது.   உயர்கல்வியில் திறன் பயிற்சியை இணைக்க யுஜிசி நெறிமுறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

36.   கொரோனாவுக்கு எதிரான போரில், திறன் இந்தியா இயக்கத்தின்கீழ், சுகாதார சேவை தொடர்பாக 6 சிறப்பு பயிற்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  இவை சுகாதார சேவைத் துறைக்கு உதவி வருகின்றன. 

37.   பழங்குடியின இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்க பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அனைத்து வட்டாரங்களுக்கும் ஏகலைவா உண்டு-உறைவிட மாதிரிப் பள்ளிகள்  விரிவுபடுத்தப்பட்டுள்ளன.  இந்த பள்ளிகள் சுமார் மூன்றரை லட்சம் பழங்குடியின இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும். 

மாண்புமிகு உறுப்பினர்களே,

38.  டோக்கியோ ஒலிம்பிக்கின் போது இந்திய இளைஞர் சக்தியின் திறனை நாம் அனைவரும் பார்த்தோம்.  இந்த சர்வதேச போட்டியில் இதுவரை இல்லாத சிறப்பான வெளிப்பாடு மூலம் இந்தியா 7 பதக்கங்களை வென்றது.  டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டிலும் இந்திய மாற்றுத் திறனாளி தடகள வீரர்கள் 19 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தனர்.  ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியாவின் செயல்பாட்டை மேம்படுத்த ஏதுவாக மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து, நாட்டில் நூற்றுக்கணக்கான கேலோ இந்தியா மையங்களை அமைத்து வருகிறது.  இதுதவிர, பாரா விளையாட்டுகளில் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க, அரசின் சார்பில் குவாலியரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மாற்றுத் திறனாளி விளையாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

மாண்புமிகு உறுப்பினர்களே,

39.   மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வசதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கை வாழ வகை செய்வது சமுதாயத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.  மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மாற்றியமைக்க, காக்ளியர் கருவி அறுவை சிகிச்சைக்கு தேவையான சாதனங்களை இலவசமாக வழங்குவது முதல் பல்வேறு திட்டங்கள் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த திட்டங்கள் மூலம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட உதவி சாதனங்கள்  மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு சுமார் 4 ஆயிரம் காக்ளியர் கருவி பொருத்து அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் விதமாக மத்தியப்பிரதேசத்தில் தேசிய மனநல ஆரோக்கிய மறுவாழ்வு நிறுவனத்தை அரசு தொடங்கியுள்ளது.  மாற்றுத் திறனாளி இளைஞர்களின் எதிர்காலத்திற்காக 10 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட இந்திய சைகை மொழி அகராதி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 

மாண்புமிகு உறுப்பினர்களே,

40.   நமது இளைஞர்களின் தலைமையின் கீழ் எல்லையற்ற புதிய முயற்சிகள் விரைவான வடிவம் பெற்று வருவதற்கு நமது ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் ஒரு உதாரணமாகும்.  நாட்டின் 56 பல்வேறுபட்ட துறைகளில், 2016 முதல் ஆறாயிரம் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதன.  2021-ல் கொரோனா காலக்கட்டத்தில், 40-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உருவெடுத்தன, இவை ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 7 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சந்தை மதிப்புடையவையாகும். 

41.   எனது அரசின் கொள்கைகள் காரணமாக, இந்தியாவில் தற்போது இணையதள இணைப்புக்கான செலவு மற்றும் ஸ்மார்ட் போன்களின் விலை உலகிலேயே குறைவாக உள்ளது.    இதன்மூலம் இளைய தலைமுறையினர் பெருமளவு பயனடைந்துள்ளனர்.  5ஜி செல்போன் இணைப்பு வழங்கும் பணிகளிலும் இந்தியா வேகமாக செயல்பட்டு வருகிறது, இது புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். அரசு பல்வேறு கொள்கை முடிவுகளை மேற்கொண்டிருப்பதுடன்  பல்வேறு புதிய துறைகளையும் தொடங்கியிருப்பதன் மூலம்  மாறிவரும் தொழில்நுட்பங்களை நமது இளைஞர்கள் வேகமாக அறிந்து பயனடையலாம்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புத் திட்டம் மூலம், வாக்குரிமை மற்றும் வணிக முத்திரை பெறுவதற்கான நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்தி விரைவுபடுத்தியுள்ளது.  இதன் விளைவாக சுமார் ஆறாயிரம் காப்புரிமைகள் மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக முத்திரைகள் பெற இந்த நிதியாண்டில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

42.  தமது அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக உலகளவில் இந்தியா மீண்டும் விரைவான பொருளாதார வளர்ச்சி பெறும் நாடாக உருவெடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது.  நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீது உலக முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கை காரணமாக நடப்பு நிதியாண்டில் முதல் ஏழு மாதங்களில் 48 பில்லியன் டாலர் முதலீடு கிடைத்துள்ளதே அதற்கு சான்றாகும். நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தற்போது 630 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி பல்வேறு முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில்  விரைவான வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சரக்கு ஏற்றுமதி 22 லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ளது. இது கடந்த 2020 ஆம் ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் ஒன்றரை மடங்கு அதிகமாகும்.

43. எனது அரசு 14 முக்கிய துறைகளில் செயல்படுத்தி வரும் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்  தொகை திட்டத்தின் மூலம்  ஒரு லட்சத்து 97ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வாய்ப்புகள் பெற முடியும். ஏராளமான இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும். உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டம். உலகளவில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு உதவிடும். அறுபது லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும். உள்நாட்டில்  கைபேசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களே இத்திட்டம் வெற்றி அடைந்ததற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். உலகளவில் கைபேசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளதன் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 44. மின்னணு மற்றும் வன்பொருள் தொழில்நுட்பத்துறையில் உலகளவில் முன்னணி நாடாக இந்தியாவை உருவாக்கும் வகையில் 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்த செமி கண்டெக்டர் உற்பத்தி சிப் வடிவமைப்பு மின்னணு திரை வடிவமைப்பு மற்றும் அது தொடர்பான உற்பத்திக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

45. புதிய துறைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நூற்றாண்டு கால அனுபவங்களை பயன்படுத்தி எனது அரசு பாரம்பரியம் மிக்க துறைகளிலும் வலிமையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதே திசையில் எனது அரசு 4,500 கோடி மதிப்பீட்டில் ஏழு மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்த ஜவுளிச் சங்கிலியை மேம்படுத்த முடியும். இத்தகைய மாபெரும் ஜவுளி பூங்காக்களை உருவாக்குவதன் மூலம் இந்திய  மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதுடன் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

46. பெரிய அளவிலான நிறுவனங்களை ஊக்குவிப்பதுடன் எனது அரசு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், சுயசார்பு இந்தியாவின் இயக்கமாகவும், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திகழ்கின்றன. இடர்பாடுகளில் இருந்து குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாக்கவும், கொரோனா தொற்று காலத்தில் போதிய கடனுதவியை  வழங்கும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் வரையிலான  பிணையில்லா கடனுறுதி திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் 13.50 லட்சம் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் ஒரு கோடியே 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடந்த  ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து கடனுறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 3 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 4.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

47. குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாய்ப்புக்களை விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென வகுக்கப்பட்டுள்ள புதிய வரைமுறைகள் சிறு நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு உதவிடும். மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் உதயம் இணையத்தில் பதிவு செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் தங்கள் வர்த்தகத்திற்கு தேவையான கடனுதவிகளை பெற்று பயனடைய முடியும்.

48. காதி துறை அடைந்துள்ள வெற்றி குறித்தும் முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும். தேசப்பிதா காந்தியடிகளின் தலைமையின் கீழ் சுதந்திர போராட்டத்தில் ஒருமித்த நாட்டின் அடையாளமாக இருந்த  காதி துறையை சிறு தொழில்முனைவோர்களின் முக்கிய தொழிலாக மீண்டும் புத்துணர்ச்சி பெற செய்யும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் கடந்த 2014 ஆண்டு முதல் காதி பொருட்களின் விற்பனை பல்வேறு இடையூறுகளை சந்தித்து வந்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

49. எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் அடிப்படையானது உள்கட்டமைப்பு வசதிகளே. எனது அரசு சமுக சமநிலை இன்மைக்கு பாலமாக உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், தரத்தை மேம்படுத்தி வர்த்தகம் புரிவதை மேலும் எளிமையாக்க முடியும். பல்வேறு துறைகளுக்கு இடையே  பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் விரைவான போக்குவரத்து வசதிகளை உருவாக்கும்  நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

50. பிரதமரின் தேசிய அளவிலான கதி சக்தி திட்டத்தின் கீழ் பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை தமது அரசு மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம்  உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக உருவாக்க முடியும். நாட்டின் போக்குவரத்து துறையில் பல்முனை அமைப்புக்களை கொண்ட புதிய பொற்காலத்தை உருவாக்கிட உதவிடும். எதிர்காலத்தில் ரயில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், விமான போக்குவரத்து ஆகியவைகள் தனித்தனியே செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்படத்தக்கவகையில் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் உதவிடும்.

51. கிராமப்புறங்களில் சாலைகள் அமைப்பது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கடந்த சில சதாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் மாற்றம் ஏற்படும். பிரதமரின் கிராமச்சாலை திட்டத்தின் மூலம் பல்வேறு சாதனைகள்  நிகழ்த்தப்பட்டது பெருமைக்குரிய அம்சமாக உள்ளது. அனைத்து வகையான பருவநிலைக்கும் ஏற்றவகையில் நாளொன்றுக்கு 100 கி.மீ. தொலைவிற்கு சாலைகள் அமைப்பதன் மூலம் கடந்த 2020-21-ம் ஆண்டில்  36,500 கி.மீ. தொலைவிற்கு கிராமப்புறங்களில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

52. இன்று நாடு முழுவதும் கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு தெற்காக என நீள அகலத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம்  90,000 கி.மீ. என்ற அளவில் இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் தற்போது 1 லட்சத்து 40 ஆயிரம் கி.மீ. அளவுக்கு அதிகமான தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. பாரத் மாலா திட்டத்தின் கீழ் 20,000 கி.மீ. தொலைவிற்கும் அதிகமான அளவிற்கு 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில்  நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 23 பசுமை வழி விரைவுச்சாலை பணிகளும், பசுமை வழித்தடங்களும் அடங்கும்.

53. தில்லி-மும்பை இடையிலான விரைவுச்சாலை பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இது நாட்டின் மிக நீண்ட மற்றும் வேகமாக செல்லக்கூடிய விரைவுச் சாலை ஆகும். தமது அரசு பந்தர்பூர் கோயிலுக்கு செல்வதற்கான சந்த் தியானேஸ்வர் மார்க் மற்றும் துக்காராம் பால்கி மார்க் என இரண்டு இணைப்புச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

54. இன்று நாடு முழுவதும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் அதே வேளையில் வளர்ச்சிக்கான வாயிலும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லைச் சாலைகள் நிறுவனத்தின் மூலம் லடாக்கில் உள்ள உம்லிங் லாபாஸ் என்ற இடத்தில் 19,000 அடி உயரத்தில் போக்குவரத்திற்கு உகந்தவகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. லடாக்கில் உள்ள டெம்சோக் என்ற தொலைதூர பகுதியில் உள்ள கிராமத்தையும், உத்தராகாண்டில் உள்ள ஜோலிங் கோங்க் பகுதியையும், அருணாச்சலப் பிரதேசத்தில் ஹூரி பகுதியையும் இணைக்கும் வகையில் நவீன சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

55. எனது அரசு முதற்கட்டமாக ரயில்வே துறையை நவீனப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய வந்தே பாரத் ரயில்கள் மற்றும் புதிய விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் நவீன வசதிகளுடன்  இத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் 24,000 கி.மீ. தொலைவிற்கு ரயில்பாதைகள் முற்றிலும் மின்மயமாக்கப்பட்டுள்ளன. புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் மற்றும் இரட்டை வழித்தடங்களை உருவாக்கும் பணிகளும் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. குஜராத்தில் காந்தி நகர் ரயில் நிலையத்திலும், மத்திய பிரதேசத்தில் உள்ள  ராணி கமலாபதி ரயில் நிலையத்திலும் நவீன இந்தியாவிற்கு ஏற்றவகையில் புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் மேல் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

56. எனது அரசு ஏழை மற்றும் நடுத்தர பிரிவு மக்களின் வாழ்வாதாரத்தை எளிமையாக்கி மேம்படுத்தும் வகையில் பொது போக்குவரத்துத் துறையிலும் குறிப்பிடத்தக்கவகையில் பணிகளை முடித்துள்ளது. 8 மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயனடையும் வகையில் 11 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் இல்லாத மிகப்பெரிய ரயில் வழித்தடங்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மேக் இன் இந்தியா  திட்டத்தின் கீழ் தானியங்கி முறையில் ரயில்களின் இயக்கம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு வருவது இத்திட்டத்தின் வளரும் திறத்தை வெளிப்படுத்துகிறது.  உத்தரப்பிரதேசத்தில் உள்ள கௌதம் புத்தா நகர் மாவட்டத்தில் நாட்டில் மிகப்பெரிய விமான நிலையம்  அமைக்கும் பணிகள் உள்பட நாடு முழுவதும் 21 பசுமை வழி விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

57. நாட்டில் உள்ள முக்கிய வர்த்தக மையங்களை துறைமுகங்களுடன் இணைக்கும் வகையில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் 80க்கும் அதிகமான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 24 மாநிலங்களில் இதுவரை ஏற்கனவே உள்ள 5 தேசிய நீர்வழிப் போக்குவரத்து  மற்றும் 106 புதிய நீர்வழிப் போக்குவரத்து வழித்தடங்கள், தேசிய நீர்வழிப் போக்குவரத்து வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நாடு முழுவதிலும் உள்ள தேசிய நீர்வழிப்போக்குவரத்தின் எண்ணிக்கை மொத்தம் 111 ஆக உள்ளது.  இதில் 23 நீர்வழிப் போக்குவரத்து வழித்தடங்கள் சரக்குப் போக்குவரத்திற்கு உகந்தவகையில் அமைந்துள்ளன. நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கில் 27,000 கி.மீ.-க்கு அதிகமான  வட்டச்சாலைகளை மத்திய அரசு அமைத்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

58. அண்மைக் காலமாக நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சுயசார்பு இந்தியா இயக்கத்தின் மூலம் புதிய தீர்வுகள் காணப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மறுசீரமைப்பு பணியில் நிலவி வந்த மந்தமான நிலையை கலைந்து புதிய உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. தொழிலாளர் நலச்சட்டங்களில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கி வங்கித்துறை சீர்திருத்தம் மற்றும் திவால் நடைமுறை விதிகள் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் இருந்து வந்த 26,000க்கும் அதிகமான நடைமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன. விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் அத்துறையில் எல்லையில்லாத வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. நாட்டின் விண்வெளி திறனை அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக கடந்த ஆண்டு இன்ஸ்பேஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

59. எனது அரசு ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான வாய்ப்புகளை அறிந்து அத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ட்ரோன் தொடர்பான எளிமையாக்கப்பட்ட விதிமுறைகள் 2021 –ஐ அரசு வெளியிட்டுள்ளது. அதோடு ட்ரோன் மற்றும் அதன் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக எதிர்காலத்தில் இந்தியா திகழ உதவிடும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

60. எனது அரசு நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மிகுந்த உறுதியுடன் பணியாற்றி வருகிறது. பாதுகாப்புத்துறையில்  குறிப்பாக ஆயுத தளவாடங்களின் உற்பத்தியில் தன்னிறைவை அதிகரிக்கச் செய்யும் வகையிலான கொள்கைகளை அரசு வகுத்து வருகிறது.

61. 2020-21-ம் ஆண்டில் ஆயுதப்படையை நவீனப்படுத்துவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில்  மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 87 சதவீத பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேக் இன் இந்தியா  திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில்  கடந்த ஆண்டு கருவிகள் தொடர்பான 98 சதவீத ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. நமது ஆயுதப்படைக்கு தேவையான 209 வகை ராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட மாட்டாது. பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ஏதுவாக 2800க்கும் அதிகமான பாதுகாப்பு உபகரணங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

62. 83 எல்சிஏ தேஜஸ் வகை போர் விமானங்களை உற்பத்தி செய்ய இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடப்பட்டது. ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்யும் ஏழு பொதுத்துறை நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு துறையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  நமது ஆயுதப்படைக்கு தேவையான ஆயுத தளவாடங்களை இந்தியாவிலேயே வடிவமைத்து உற்பத்தி செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

63. சுமுகமான உறவு மூலம் வேகமாக வளர்ந்து வரும் உலக சூழலில் தனது தடத்தை இந்தியா பதித்து வருகிறது. ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தை இந்தியா தலைமை தாங்கியது. இதில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக இந்த கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்பு குறித்த விவாதம் நடைபெற்றது.  முதல் முறையாக ‘பிரெசிடெண்சியல் ஸ்டேட்மெண்ட்’ எனப்படும் தலைமைத்துவ வாதம் ஏற்றுகொள்ளப்பட்டது.

64. நமது அண்டை நாடான ஆஃப்கானிஸ்தானில் நிலவிய அசாதாரண சூழலை நாம் அனைவரும் கண்டோம். இத்தகைய அசாதாரண சூழ்நிலையிலும் இந்திய அரசு ‘ஆப்ரேஷன் தேவி சக்தி’ மேற்கொண்டு  ஆஃப்கானிஸ்தானில் இருந்து ஆஃப்கான் ஹிந்து மற்றும் சீக்கிய மக்களை பாதுகாப்பாக மீண்டும் நமது நாட்டிற்கு கொண்டு வந்தது. மேலும், குரு க்ராந்த் சாஹிப் அவர்களின் இரண்டு சிலைகள் ஆஃப்கான் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன. இதைத் தவிர மனிதாபிமான அடிப்படையில் ஆஃப்கான் நாட்டிற்கு மருத்துவம் மற்றும் உணவு சார்ந்த உதவிகளையும் செய்து வருகிறோம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

65. நமது பூமி இப்போது சந்தித்து வரும் பல சவால்களில் முக்கியமானது பருவநிலை மாற்றம் ஆகும். Cop-26 கூட்டத்தில் எனது அரசு 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீட்டை 1 பில்லியன் டன் அளவுக்கு குறைக்கும் என்று கூறியுள்ளது. இது மட்டுமின்றி 2070 ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக ‘ கரியமில வாயு வெளியேற்றாத’ நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று உறுதி அளித்துள்ளது.  மேலும், “பசுமை தொகுப்புக்கான முன்முயற்சி: ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே அமைப்பு” என்கிற ஒரு முயற்சியை உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா மேற்கொண்டுள்ளது. இது சர்வதேச அளவில் இணைக்கபட்டு உருவாக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி தொகுப்பு ஆகும். நமது எண்ணங்களும் செயலும் இயற்கை மீது நமக்குள்ள பற்றுதலுக்கு ஒரு மிகப் பெரிய சான்றாகத் திகழ்கிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

66. நமது நாட்டின் பண்டைய பாரம்பரியத்தை பாதுகாத்து பேணி காப்பது நமது தலையாயக் கடமையாகும். ஹராப்பாவில் வளாகத்திலுள்ள  தோலவிரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காகாடியா ருத்ரேஷ்வர் ராமப்ப ஆலயம் UNESCO பாரம்பரிய மையமாக அறிவிக்கபட்டுள்ளது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். ப்ரயாக்ராஜில் நடைபெற்ற கும்ப மேலாவை தொடர்ந்து கொல்கத்தாவில் நடைபெறும் பிரசித்தி பெற்ற துர்கா புஜையும் UNESCO Intangible Cultural Heritage பட்டியலில் இணைக்கபட்டுள்ளது. 

67. வெளிநாட்டில் உள்ள இந்திய பாரம்பரிய கலைப்பொருட்களை மீண்டும் நமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னுரிமை  அளிக்கப்பட்டு வருகிறது.  பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலை மீட்கப்பட்டு மீண்டும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.  இது போன்ற  அரியவகை கலைப்பொருட்கள் பல்வேறு நாடுகளில் இருந்து மீண்டும் இந்தியா கொண்டு வரப்படுகின்றன.

 

68.  பாரம்பரியமும் சுற்றுலாவும் ஓன்றோடு ஒன்று இணைந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதனால் தான் இந்தியாவில் ஆன்மீகச் சுற்றுலா மேம்பட்டு வரும் அதே வேளையில், நவீன மயமான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

69. கோவாவின் 60ஆம் ஆண்டு விடுதலை தினத்தை முன்னிட்டு “அகுவாடா கோட்டைச் சிறைச்சாலை வளாகம்” புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

70. ஜனநாயகத்தின் அடிப்படையில் நாம் மேற்கொண்டுள்ள ‘ஒரே பாரதம் - உன்னத பாரதம்’ எனும் தீர்வு ஒரு புதிய அத்தியாயம் எழுத உதவுகிறது. எந்த ஒரு மாநிலமோ அல்லது பகுதியோ விடுபடாதவாறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

   71. ஜம்மு மற்றும் காஷ்மிர், லடாக் பகுதிகளில் துவங்கி இருக்கும் வளர்ச்சிப் பணிகளே இதற்குச் சான்று. எனது அரசு ரூ. 28,000 கோடி செலவில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொழில் வளர்ச்சிகாக ஒரு புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு க்வாசிகுண்ட்-பனிஹல் சுரங்கப்பாதை திறந்து வைக்கப்பட்டது. –ஸ்ரீநகர் மற்றும் ஷார்ஜா இடையேயான விமான சேவையும் தொடங்கப்பட்டது.

72.  ஜம்மு மற்றும் காஷ்மிரில் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது ஏழு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இரண்டு AIIMS மருத்துவமனைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐஐடி ஜம்மு மற்றும் ஐஐஎம் ஜம்மு அமைப்பதற்கான பணிகளும் வேகமாக நடைப்பெற்று வருகின்றன.

73. லடாக்கில் மேற்கொள்ளபட்டு வரும்  உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேம்பாட்டுப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக சிந்து  உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அமைக்கபட்டுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

74.  வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் தடையில்லா வளர்ச்சி பெறுவதற்கு எனது அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந்த மாநிலங்களில் ஒவ்வொரு கட்டத்திலும் அடிப்படை வசதிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான  அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. ரயில் மற்றும் விமான சேவைகளை இப்போது இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் அனுபவிக்கத் துவங்கியுள்ளனர். எனது அரசாங்கத்தின் முயற்சியால் வட கிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் அனைத்தும் இப்போது ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன என்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். 

75. இட்டாநகரில் அமைந்துள்ள ஹொல்லோங்கியில் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. திரிபுராவில் உள்ள மஹாராஜா பீர் பிக்ரம் விமான நிலையத்தில் நவீன மயமான ஒரு புதிய முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  வட கிழக்கு மாநிலங்களின் இந்த வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சிப் பக்கத்தில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும்.  ஜனவரி 21 அன்று மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்கள் உருவாக்கப்பட்டு 50 ஆண்டு நிறைவு பெற்றது. இது இந்தியாவின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தோடு பொருந்துவது மேலும் சிறப்பாகும்.

76. வட கிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவுவதற்கு எனது அரசாங்கம் எடுத்த முயற்சிகள் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் கார்பி குழுக்களுக்கிடையே அமைதிக்கான தீர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனது அரசாங்கத்தின் பெரும் முயற்சியால் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 126ல் இருந்து 70 ஆக குறைந்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

77. பல்வேறு அரசுத் துறைகள் அவர்களது பணிகளை பொறுப்புடன் மேற்கொள்வதில் எனது அரசாங்கம் மிகவும் உறுதியாக உள்ளது. அனைத்து அரசு துறைகளிலும் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு நிலுவையில் உள்ள குறிப்புகள் முடிக்கப்பட்டு வருகின்றன. மிஷன் கர்மயோகி மூலம் அரசு ஊழியர்கள் அவர்களது பணியில் மேலும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

78. மக்களுக்கு நீதி சுலபமாகவும் விரைவாகவும் வழங்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரச்சனைகளை விரைவாகத் தீர்க்க எனது அரசாங்கம் மாநிலங்களவையில் சமரசத் தீர்வு மசோதா- 2021 அறிமுகம் செய்தது.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

79. இப்பொழுது நமது நாட்டின் வெற்றிகள் மற்றும் சாதனைகள் எல்லையற்றதாக உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தால் ஏற்பட்ட வெற்றி அல்ல, பல கோடி மக்களின் கூட்டு முயற்சியாகும். நீண்ட நெடுந்தூரம் செல்லும் நமது பயணத்தில் இந்த வெற்றிகள் மைல்கற்களாக இருக்கும். மேலும் இந்த வெற்றிகள் நாம் முன்னேறிச் செல்ல ஒரு ஊன்றுகோலாகவும் அமையும்.

80.  2047ஆம் ஆண்டு நமது நாட்டின் நூற்றாண்டு சுதந்திர தின விழாக் கொண்டாடப்படும். அதற்குள் நமது நாடு ஒரு நவீனமயமான, முன்னேறிய, பிரம்மாண்ட நாடாக மாற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். நமது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறுவதற்கு நாம் அயராது உழைக்க வேண்டும். 

81. இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சிறப்பாக செயல்படுவதற்கும், இரு அவைகளின் உறுப்பினர்களும் அவர்களது கடமையை திறம்பட செய்து வருவதற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.  பல கோடி மக்களின் நம்பிக்கையாக நீங்கள் திகழ்கிறீர்கள். இதே உத்வேகத்துடன் தான் வரும் காலங்களிலும் நாம் உழைக்க வேண்டும்.

82. எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு. நமது அனைவரது கூட்டு முயற்சியால் நமது பாரத நாடு இன்னும் பல உயரங்களை எட்டும். நான் மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஜெய் ஹிந்த்

***************

 


(Release ID: 1793952) Visitor Counter : 654