பிரதமர் அலுவலகம்

கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பிஎம் பேரணியில் பிரதமர் உரையாற்றினார்


“என்சிசியில் நான் பெற்ற பயிற்சியும், பாடமும் நாட்டுக்கு எனது கடமைகளை நிறைவேற்றும் மகத்தான வலிமையை அளித்துள்ளன”

“நாட்டின் எல்லைப் பகுதிகளில் 1 லட்சம் புதிய படையினர் உருவாக்கப்பட்டுள்ளனர்”

“என்சிசியில் மேலும் மேலும் பெண்களை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்”

“முதலில் நாடு என்னும் உணர்வுடன் முன்னேறிச் செல்லும் இளைஞர்களைக் கொண்ட நாட்டை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது”

“சிறந்த டிஜிட்டல் பழக்கங்களை மேற்கொள்வதில் என்சிசி பிரிவினர் முக்கியப் பங்காற்ற முடியும்; தவறான தகவல்கள், வதந்திகளை மக்கள் உணர்ந்து கொள்ளச் செய்ய முடியும்”

“போதை மருந்து அற்ற வளாகங்களை உருவாக்குவதில் என்சிசி/என்எஸ்எஸ் உதவ வேண்டும்”

Posted On: 28 JAN 2022 2:30PM by PIB Chennai

கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். என்சிசி பிரிவினர் நடத்திய அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர் மரியாதையை ஏற்றுக் கொண்டார். ராணுவ நடவடிக்கை, சறுக்குதல், மைக்ரோலைட் பறத்தல், பாராசெய்லிங் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப்பட்ட தேசிய மாணவர் படையினரின் திறமைகளையும் அவர் பார்வையிட்டார். சிறந்த என்சிசி மாணவர்கள் பிரதமரிடம் இருந்து பதக்கங்களையும், பிரம்பு கோல்களையும் பெற்றனர்.

அங்கு திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை நாடு கொண்டாடி வரும் நிலையில், மாறுபட்ட உற்சாகம் நிலவுவதைக் குறிப்பிட்டார். என்சிசியுடன் தமக்குள்ள தொடர்பை பெருமையுடன் நினைவுகூர்ந்த பிரதமர், என்சிசி மாணவராக தாம் பெற்ற பயிற்சி தமக்கு நாட்டுக்கு உரிய கடமைகளை செய்வதற்குரிய மகத்தான வலிமையை அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

லாலா லஜபதி ராய், பீல்டு மார்ஷல் கரியப்பா ஆகியோர் தேச நிர்மாணத்தில் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து பிரதமர் மரியாதை செலுத்தினார். இந்தியாவின் தீரம் மிக்க அந்த இரண்டு புதல்வர்களுக்கும் இன்று பிறந்தநாள் ஆகும்.

நாட்டில் என்சிசியை வலுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரதமர், புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறிச் செல்லும் காலம் இது என்று குறிப்பிட்டார். இதற்காக நாட்டில் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் எல்லைகளில் 1 லட்சம் புதிய படையினர் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு நிறுவனங்களின் கதவுகள் திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை பிரதமர் விளக்கினார். ஏராளமான பெண் மாணவர்கள் என்சிசியில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இது நாட்டின் மாறி வரும் அணுகுமுறைக்கான அடையாளம் என்று கூறினார். “நாட்டுக்கு உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது. இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன” என்று என்சிசி பெண் மாணவர்களிடம் அவர் கூறினார். சைனிக் பள்ளிகளில் தற்போது நாட்டின் பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர், ராணுவத்தில் பெண்கள் முக்கியப் பொறுப்புக்களை பெற்று வருவதாக தெரிவித்தார். இந்திய விமானப்படையில் நாட்டின் புதல்விகள் போர் விமானங்களில் பறக்கின்றனர். “இத்தகைய சூழலில் என்சிசியில் மென்மேலும் பெண்களை சேர்ப்பதாக நமது முயற்சிகள் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

பெரும்பாலும் இந்த நூற்றாண்டில் பிறந்த இளம் மாணவர்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 2047 ஆம் ஆண்டை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதில் அவர்களது பங்கு பற்றி வலியுறுத்தினார். “இந்த முடிவை நோக்கிய உங்களது முயற்சிகளும், தீர்மானங்களும் சாதனைகளாகவும், இந்தியாவுக்கான வெற்றியாகவும் இருக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

முதலில் நாடு என்னும் உணர்வுடன் முன்னேறிச் செல்லும் இளைஞர்களைக் கொண்ட நாட்டை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பிரதமர் கூறினார். விளையாட்டுக் களம், தொழில் தொடங்கும் சூழல் ஆகியவற்றில் இந்தியாவின் வெற்றி இதனை மிகத் தெளிவாக உணர்த்துகிறது என்று பிரதமர் தெரிவித்தார். அமிர்த காலத்தில், அதாவது அடுத்த 25 ஆண்டு காலத்தில் தேசிய மாணவர் படையினர் தங்களது விருப்பங்களையும், நடவடிக்கைகளையும், வளர்ச்சி மற்றும் நாட்டின் எதிர்பார்ப்புடன் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுங்கள் என்ற இயக்கத்தில் இன்றைய இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என்று பிரதமர் கூறினார். “இன்றைய இளைஞர்கள் இந்திய தொழிலாளர்களின் வியர்வையில் உருவான உள்ளூர் பொருட்களை பயன்படுத்த தீர்மானித்துக் கொண்டால் இந்தியாவின் வருங்காலத்தை மாற்றியமைக்கலாம்” என்று அவர் கூறினார்.

இன்று ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பான சிறந்த வாய்ப்புகள் உள்ளன. மறுபக்கம் தவறான தகவல்கள் குறித்த அச்சம் நிலவுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். நமது நாட்டின் சாதாரண மனிதர்கள் எந்தவித வதந்திக்கும் இறையாகாமல் இருப்பது அவசியமாகும். எனவே தேசிய மாணவர் படையினர் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

தேசிய மாணவர் படை அல்லது நாட்டு நலப்பணித் திட்டம் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் போதை மருந்துகள் புழங்க அனுமதிக்கக் கூடாது என பிரதமர் வலியுறுத்தினார். தேசிய மாணவர் படையினர் போதை மருந்து பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதுடன் தங்களது வளாகங்களில் அவை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று அவர் அறிவுரை கூறினார். என்சிசி, என்எஸ்எஸ் ஆகியவற்றில் இல்லாத நண்பர்கள் இந்த பழக்கத்தை கைவிடுவதற்கு நீங்கள் உதவ வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

என்சிசியினர், நாட்டின் கூட்டு முயற்சிகளுக்கு புதிய சக்தியை அளிக்க பாடுபட்டு வரும் செல்ஃப் ஃபார் சொசைட்டி தளத்துடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று பிரதமர் வலியுறுத்தினார். 7,000-க்கும் மேற்பட்ட அமைப்புகளும், 2.25 லட்சம் மக்களும் இந்த தளத்துடன் தொடர்பு வைத்துள்ளனர்.

***
 



(Release ID: 1793291) Visitor Counter : 168