பிரதமர் அலுவலகம்

அகர்தலாவில் மகாராஜா பீர் பிக்ரம் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பிரதமர் இரண்டு முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
“ஹிரா மாதிரி அடிப்படையில் திரிபுரா தனது இணைப்புகளை விரிவுபடுத்தி வலுப்படுத்தியுள்ளது ”
“சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, நீர் இணைப்பு, உள்கட்டமைப்பில் முன் எப்போதும் இல்லாத முதலீடு காரணமாக திரிபுரா புதிய தொழில் மையமாகவும், வர்த்தக வழித்தடமாகவும் மாறியுள்ளது ”
“இரட்டை எஞ்சின் அரசு என்பது தளங்களை முறையாக பயன்படுத்துவதாகும், மக்களின் உணர்வுகளையும், அதிகாரத்தையும் ஊக்குவிப்பதாகும். சேவை மற்றும் தீர்மான நிறைவேற்றத்துடன் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றுபட்ட முயற்சி மேற்கொள்வதென இதன் பொருள் ”

Posted On: 04 JAN 2022 5:42PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அகர்தலாவில் மகாராஜா பீர் பிக்ரம் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை திறந்து வைத்ததுடன், முக்கியத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திரிபுரா ஆளுநர் திரு சத்யதேவ் நாராயண் ஆரயா, முதலமைச்சர் திரு பிப்லப் குமார் தேவ், மத்திய அமைச்சர்கள் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திருமதி பிரதீமா பவுமிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா பிரயாஸ் என்ற எழுச்சியுடன், இந்தியாவின்  21-ம் நூற்றாண்டு ஒவ்வொருவரையும்  அரவணைத்து முன்னேறிச் செல்லும் என்று கூறினார். சமன்பாடற்ற வளர்ச்சியால் சில மாநிலங்கள் பின்தங்கி, மக்கள் சில அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் நலிவடைந்திருப்பது நல்லதல்ல. இதைத்தான் திரிபுரா மக்கள் பல பத்தாண்டுகளாக அனுபவித்து வந்ததாக அவர் கூறினார். மோசமான ஊழல் காரணமாகவும், தொலைநோக்கு அல்லது வளர்ச்சி நோக்கமில்லாத அரசாங்கங்களாலும் பாதிப்புக்கு உள்ளானதை திரு மோடி நினைவு கூர்ந்தார்.  நெடுஞ்சாலை, இணையதளம், ரயில்வே, விமானப்போக்குவரத்து என்னும் ஹிரா மந்திரத்தை கையில் எடுத்த நடப்பு ஆட்சி திரிபுராவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடிப்படையில் திரிபுரா இப்போது தனது இணைப்பு வசதிகளை விரிவாக்கி, வலுப்படுத்தியுள்ளது.

புதிய விமான நிலையம் குறித்து பாராட்டிய பிரதமர், இந்த விமான நிலையம் திரிபுராவின் கலாச்சாரம், இயற்கை எழில், நவீன வசதிகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வடகிழக்கு பிராந்தியத்தில் இந்த விமான நிலையம் போக்குவரத்து வசதியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றும். வடகிழக்கு மாநிலங்களின் நுழைவு வாயிலாக திரிபுரா மாறுவதற்கு முழு முயற்சிகளும், பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறிய பிரதமர், சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, நீர் இணைப்பு, உள்கட்டமைப்பில் முன் எப்போதும் இல்லாத முதலீடு காரணமாக திரிபுரா புதிய தொழில் மையமாகவும், வர்த்தக வழித்தடமாகவும்  மாறியுள்ளது  என்றார்.

இரட்டை எஞ்சின் அரசின் இரட்டை வேக உழைப்புக்கு எதுவும் இணை இல்லை. இரட்டை எஞ்சின் அரசு என்பது தளங்களை முறையாக பயன்படுத்துவதாகும், மக்களின் உணர்வுகளையும், அதிகாரத்தையும் ஊக்குவிப்பதாகும். சேவை மற்றும் தீர்மான நிறைவேற்றத்துடன் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றுபட்ட முயற்சி மேற்கொள்வதென இதன் பொருள் என்று பிரதமர் தெரிவித்தார்.

நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் திரிபுரா சாதனை படைத்துள்ளதாகப் பாராட்டிய பிரதமர், செங்கோட்டை  கொத்தளத்தில் உரையாற்றிய போது அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கை நிறைவேற்றும் வகையிலான முதலமைச்சர் திரிபுரா கிராம வளர்ச்சித் திட்டத்தை புகழ்ந்துரைத்தார். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர், வீட்டுவசதி, ஆயுஷ்மான் சிகிச்சை, காப்பீடு ஆகியவற்றை இத்திட்டம் மேம்படுத்தும். பிரதமர் வீட்டு வசதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக முதலமைச்சரை பிரதமர் பாராட்டினார்.   இதன் மூலம் 1.8 லட்சம் குடும்பங்கள் உறுதியான வீடுகளைப் பெற உள்ளன. இவற்றில் 50,000 வீடுகள் ஏற்கனவே மாநிலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

21-ம் நூற்றாண்டில் இந்தியாவை நவீனமயமாக்க இளைஞர்களுக்கு திறன் ஏற்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய பிரதமர், உள்ளூர் மொழியில் கற்பதற்கு அது சம முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்தார். திரிபுரா மாணவர்கள் தற்போது மிஷன் -100, வித்யா ஜோதி இயக்கம் ஆகியவற்றின் உதவியைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.  15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு தடுப்பூசி வழங்கும் இயக்கம் காரணமாக கல்வியில், எந்தத் தடையும் இருக்காது என பிரதமர் குறிப்பிட்டார். தடுப்பூசி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலையை அகற்றும். திரிபுராவின் 80 சதவீத மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், 65 சதவீதம் பேர் இரண்டு தவைண தடுப்பூசிகளை பெற்றுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  15 முதல் 18 வயதுக்குட்பட்ட பிரிவில், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற இலக்கை திரிபுரா விரைவில் அடையும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குக்கு மாற்று வழங்குவதில் திரிபுரா முக்கிய பங்காற்ற முடியும் என்று பிரதமர் கூறினார்.  இங்கு தயாரிக்கப்படும் மூங்கில் துடைப்பங்கள், மூங்கில் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு நாட்டில் மிகப் பெரிய சந்தை உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மூங்கில் பொருட்கள் உற்பத்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு அல்லது சுயவேலை வாய்ப்பைப் பெறுவதாக அவர் கூறினார். இயற்கை வேளாண்மை குறித்த மாநிலத்தின் பணியையும் அவர் பாராட்டினார்.

மகாராஜா பீர் பிக்ரம் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த  முனையக் கட்டடம் ரூ.450 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன வசதி கொண்ட 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவான  இதில் நவீன தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைந்த கட்டமைப்பு முறை செயல்படுகிறது.  மாநிலத்தில் தரமான கல்வியை வழங்கும் வகையில் 100 நித்ய ஜோதி பள்ளிகளை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  மழலையர் பள்ளியிலிருந்து 12ம் வகுப்பு வரை 1.2 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் , அடுத்த மூன்று ஆண்டுகளில் இதற்காக ரூ.500 கோடி செலவிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787443

 

 

-----(Release ID: 1787480) Visitor Counter : 181